வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

“ நாங்கெல்லாம் ஆபீஸ் போகும்போது ஒன்பது மணி ஆபீசுக்கு வீட்டிலிருந்து எட்டு மணிக்கு கிளம்பி, எட்டே முக்காலுக்கெல்லாம் போய் சீட்டில் உட்கார்ந்து விடுவோம். உனக்கு பத்து மணிக்கு ஆபீஸ்.. இப்ப ஒன்பதே முக்கால். கொஞ்சம் கூட பதட்டமில்லாமல் உட்கார்ந்து மொபைலை நோண்டிக் கொண்டிருக்கிறாய். இந்தக் காலத்து பசங்க கிட்ட பங்சுவாலிட்டியும் கிடையாது. வேலையில் ஒரு பயமும் கிடையாது’’ என்று கிருபானந்த வாரியார் போல் ஒரு நீண்ட சொற்பொழிவை நிகழ்த்தி நிறுத்தினார் பஞ்சாபகேசன்.

அவர் பேசும் உச்ச ஸ்தாயி தொனியைக் கேட்பவர்கள் அவர் ஏதோ நிறைய மாணவர்களுக்கு முன்னால் நின்று வகுப்பெடுக்கும் ஆசிரியர் போல் தோன்றினாலும், அவர் முன் சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தது அவரின் செல்ல மகள் செளந்தர்யா ஒருத்தி மாத்திரம்தான்.

Representational Image

அவரை நிமிர்ந்து பார்த்த செளந்தர்யா ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்,

‘ அப்பா, உங்க காலம் வேற, எங்க காலம் வேற.. இதைப் பல தடவை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். இப்ப நான் போனை நோண்டிக் கொண்டிருக்கிறதா நீங்க சொன்னது கூட என் ஆபீஸ் வேலைதான். வீட்டிற்கு வந்தாலும், இப்பல்லாம் மொபைல் மூலம் ஆபீஸ் வேலை பார்க்கலாம். நீங்க அந்தக் காலத்தில செய்த வேலையை விட இப்ப நாங்க அதிக வேலை செய்கிறோம். இதை ஏம்பா புருஞ்சிக்க மாட்டீங்கறீங்க?’

‘ அதைத்தான் நானும் சொல்றேன். எங்க காலத்தில காலைல ஒன்பது மணிக்கு போய் மாலை ஐந்து மணிக்குத் திரும்பி வீட்டுக்கு வந்தால் மற்ற நேரம் எல்லாம் குடும்பத்துடன் செலவழிப்போம். இப்பத்த பசங்க, எப்ப ஆபீஸ் போறீங்க, எப்ப வீட்டுக்கு வரீங்க, என்ன வேலை செய்றீங்க ஒண்ணும் தெரியாது.

Representational Image

எப்ப பாத்தாலும், காதுல ஒரு இயர் போனை மாட்டிக்கிட்டு, தனியா பேசிக்கிட்டு….’ தன் வாதத்தை விடுவதாக இல்லை பஞ்சாபகேசன்.

அவரிடம் வாதாடுவதில் பயனில்லை என்று தெரிந்த செளந்தர்யா விவாதத்தை முடித்து வைக்க நினைத்தாள்,

‘ நூறு சதவீதம் சரி…’ என்றார் பஞ்சாபகேசன் மகளை ஜெயித்து விட்ட மதர்ப்புடன்.

மனைவி இருக்கும்வரை இந்த மாதிரி பஞ்சாபகேசன் பேசி செளந்தர்யா கேட்டதில்லை. மனைவி இறந்த பின், மகளும் ஆபீசுக்குப் போனபின் அவர் அனுபவித்த அதிகமான தனிமை அவரை இப்படி மாற்றியிருக்கக் கூடும். அவர் குறை கண்டு பிடிக்கும் ஆட்கள் பெரும்பாலும் இள வயதுக்காரர்களாகவே இருந்தார்கள். சில நாள் அதிகாலை வாக்கிங் போய் வந்த பின் செளந்தர்யாவிடம் புலம்புவார்,

‘ என்ன வண்டி ஓட்றானுங்க இந்த விடலைப் பசங்க?.. பறக்கற வேகத்தைப் பாத்தா எங்காவது போய் அடிச்சுத்தான் நிறுத்துவாங்க’, என்றதும், கொஞ்சம் பதட்டத்துடன் சொன்னாள் செளந்தர்யா.

Representational Image

‘ ஏம்பா.. உங்க வாயாலா அப்படியெல்லாம் சொல்லாதீங்க…பாவம் யாரு பெத்த பசங்களோ?’. அவள் சொன்னதை லட்சியம் பண்ணாமல் அடுத்த அம்பை எய்வார்,

‘ இந்த கார் ஓட்றவங்க, நாங்க நடக்கும்போது கிட்ட வந்து ‘பேங்க்’னு ஹார்ன் கொடுக்கறாங்க. தூக்கி வாரிப் போடுது. அவங்க காரில் வெச்சுருக்கிற ஹார்ன் தடை செய்யப்பட்டது தெரியுமா?’ என்பார்.

பேருந்து பயணத்தை முடித்து வரும் போதும் புலம்பலுடனேயே வருவார்.

‘ மட்டு மரியாதை தெரியாத காலேஜ் பசங்க.. ஒரு வயசானவன் நின்னுக்கிட்டு வரானே கொஞ்சம் எழுந்து இடம் கொடுப்போம்னு இல்லாம, ஒரு சீட்டில் நான்கு பேர் உட்கார்ந்து கொண்டு, ஆட்டமும் பாட்டமும்.. ச்சே.. இவனுக கையிலதான் எதிர்கால இந்தியாவாம். என்னவோ போ’

என்பார் கோபத்துடன்.

தீபாவளி நாற்களில் பஞ்சாபகேசன் கொஞ்சம் கொதிநிலையிலேயே இருப்பார். முக்கியமாக அவர் வீட்டின் இரு புறமும் இருக்கும் பட்டாசு வெடிக்கும் இளைஞர்களே அவருக்கு வில்லன்கள்.

செளந்தர்யாவிடம் புகார் மனு கொடுப்பார்.

Representational Image

‘ பார், இரவு ஏழு மணியிலிருந்து எட்டு மணிவரைதானே வெடிக்கலாம். இப்போ நேரம் ஒன்பது மணி. இந்த பக்கத்து வீட்டுப் பையன் இன்னும் வெடிக்கிறான். சட்டத்தை மதிக்காத இவன்தான் நாளை இந்த நாட்டை ஆளப் போகிறான்’,

என்று பொறுமுவார்.

‘ வருசத்தில ஒரு நாள்.. சின்னப் பசங்க .. விடுங்கப்பா’ என்று சமாதானப் படுத்துவாள் செளந்தர்யா.

ஒரு நாள் செளந்தர்யாவே பொறுமை இழக்கும்படியான ஒரு காரியத்தைச் செய்தார். எங்கோ போவதற்கு ஆட்டோ பிடிப்பதற்காக இருவரும் ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். காலியாக வந்த இரண்டு மூன்று ஆட்டோக்களை காரணமின்றி தவிர்த்தார் பஞ்சாபகேசன். காரணம் கேட்டதற்கு ஒன்றும் சொல்லாமல், அரை மணி நேரம் கழித்து ஒரு ஆட்டோவில் ஏறினார். எரிச்சல் தாளாமல் செளந்தர்யா கேட்டதற்கு பதட்டமில்லாமல் பதில் சொன்னார்,

‘ முதல்ல வந்தவங்க எல்லாம் சின்னப் பசங்க.. ரேஷ் டிரைவிங் பண்ணுவாங்க. இந்த டிரைவரைப் பார். என் வயதுடையவர். எவ்வளவு பொறுமையா ஓட்டறார் ‘.

Representational Image

கிட்டத்தட்ட நடை வேகத்தை விட கொஞ்சம் அதிகமான வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தார் அந்த டிரைவர்.

வாக்கிங் போவதைத் தவிர, அவர் வெளியே போவது மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் ஓய்வூதியர் சங்கக் கூட்டத்திற்கும், அவர் கணக்கு வைத்திருக்கும் பேங்குக்குமே. அன்று பேங்கில் ஏதோ வேலை இருப்பதாகவும் பதினொரு மணிக்குப் போகப் போவதாகவும் செளந்தர்யாவிடம் கூறினார். பார்த்துப் போகும்படியும், கையில் மொபைல் போன் கொண்டு போகும்படியும் கூறிவிட்டு ஆபீஸ் கிளம்பிவிட்டாள் செளந்தர்யா.

பத்து மணிக்கு பேங்க் திறந்தாலும் பதினொரு மணிக்குத்தான் பேங்குக்குப் போவார் பஞ்சாபகேசன்.  காரணம், பத்து மணிக்குப் போனால், மேனேஜரும், பேங்கை பெருக்கிக் கூட்டும் பெண் மணியும் மாத்திரமே இருப்பார்கள்.  

 ஒவ்வொருவராக வந்து, சீட்டில் உட்கார்ந்து, ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மொபைலை ஒரு நோட்டம் விட்டு, பாத்ரூம் போய் வந்து உட்கார்ந்த பின்னர்தான் முகம் உயர்த்திப் பார்ப்பார்கள்.  சில சமயம் எல்லோரும் வந்தும், கேஷியர் வர லேட்டானாலும் காத்திருக்க வேண்டியதுதான்.  எல்லோரும் இள வயதுக்காரர்கள்.  கடுப்பாகிப் போய், பத்து மணிக்கு பேங்க்  போவதை நிறுத்தி விட்டார் பஞ்சாபகேசன். 

Representational Image

நகரித்திலிருந்து கொஞ்சம் தள்ளி குடியிருக்கும் பஞ்சாபகேசன், எப்போது நகரத்துக்குள் போவதென்றாலும், பேருந்திலோ அல்லது ஆட்டோவிலோதான் செல்வார் .  வீட்டிலிருந்து மெயின் ரோட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று, மெயின் ரோட்டில் உள்ள அன்னையப்பன் கடையில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ் பிடிப்பார்.  அதே போல், நகரத்திலிருந்து திரும்பும் போது ம் அன்னையப்பன் கடை வாசலிலேயே இருக்கும் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு பத்திரமாக வீடு வந்து சேர்வார். 

அன்றும் அப்படித்தான், ஸ்கூட்டரில் கிளம்பி மெயின் ரோட்டைத் தொடும் நேரம் ஒரு சந்தேகம்… பேங்க் பாஸ் புக்கை எடுத்து வந்தோமா, இல்லையா? என்று. மனமும், அறிவும் பாஸ் புக் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருக்க, ஸ்கூட்டர், மெயின் ரோட்டை அடைந்துவிட்ட நிலையில், ‘டமார்’ என்று மெயில் ரோட்டில் வந்து கொண்டிருந்த காரில் மோத, இரண்டடி தள்ளி நிலைகுலைந்து விழுந்தார் பஞ்சாபகேசன். கடவுளின் அருளால், கார் மெதுவாக வந்ததாலும், காரை ஓட்டி வந்தவர் சட்டென பிரேக் பிடித்ததாலும், அதிக அடிபடவில்லை அவருக்கு. ஆனாலும், ஸ்கூட்டர் அவர் மேல் சரிந்ததாலும், திடீர் மோதலில் ஏற்பட்ட அதிர்ச்சியாலும் அவரால் எழ முடியவில்லை. சப்தம் கேட்டவுடன் அருகில் உள்ள பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள், குடித்துக் கொண்டிருந்த டீயை அப்படியே விட்டுவிட்டு பரபரப்புடன் ஓடி வந்தனர்.

Representational Image

முதலில் பஞ்சாபகேசனை நெருங்கிய இளைஞன் அவரைப் பார்த்ததும் அவருக்கு அதிக அடி இல்லையென்று புரிந்து கொண்டான். உடன் வந்த நண்பர்களுக்கு ‘பட பட’ வென உத்தரவுகள் பிறப்பித்தான்.

‘ இளங்கோ, வண்டியை எடுத்து ஓரம் போடு…ஒரு கை கொடு. இவரைத்தூக்கி ஓரத்தில் படுக்க வைக்கலாம். சிவா, நீ ஓடிப் போய் ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி வா’.

ரோட்டோரத்தில் இருந்த மரத்தின் நிழலில் படுக்க வைக்கப்பட்டு, முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டவுடன் உணர்வுக்கு வந்தார் பஞ்சாபகேசன். அதற்குள் இளங்கோ ரோட்டில் சிதறிக்கிடந்த அவரின் கண்ணாடியையும், மொபைலையும் எடுத்து வந்தான். அதற்குள், காரை ஓட்டி வந்தவர் காரை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு, பதைபதைப்புடனும், குற்ற உணர்ச்சியுடனும் அருகில் வந்தார். கோபத்துடன் அவரிடம் கார்த்தி ஏதோ பேசப்போக அவனை கையுயர்த்தி அடக்கினார் பஞ்சாபகேசன்.

‘ அவரை ஒன்றும் சொல்லாதே தம்பி.. எம்பேர்லதான் தப்பு..’.

கொஞ்சம் கூட்டம் சேரத் தொடங்கியதும் கார்த்தி மீண்டும் நண்பர்களுக்கு உத்தரவுக‌ள் பிறப்பித்தான்.

Representational Image

‘ சிவா, அப்பாவோட ஸ்கூட்டரை ஏதாவது கடையில் நிறுத்தி, பூட்டிவிட்டு சாவியை எடுத்துக் கொண்டு சீக்கிரம் ஆதித்யா ஆஸ்பத்திரிக்கு உன் வண்டியில் வா. வரும்போது ஏதாவது ஏ.டி.எம்.ல் என் கார்டில் இருந்து ஒரு ஐயாயிரம் எடுத்து வா. இந்தா கார்டு.. பின் நம்பர் ….’

காரை ஓட்டி வந்தவரிடம்,

‘ சார், காரை எடுங்க.. இவரை பக்கத்தில் உள்ள ஆதித்யா ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போகலாம். இளங்கோ அப்பாவை தூக்கு. காரில் ஏற்றலாம்’.

உத்தரவுகள் மெசின் கன்னில் இருந்து வரும் புல்லட் போல வந்து விழுந்தன.

காரில் போகும்போது பஞ்சாபகேசன் அந்த இளைஞனிடம் பலஹீனமான குரலில் கூறினார்,

‘ தம்பி.. என் போனில் ‘செளந்தர்யா’ என்ற பெயரில் என் மகள் போன் நம்பர் பதிவு செய்து வைத்துள்ளேன். அவளுக்கு கூப்பிட்டு சொல்லப்பா’ என்றார்.

‘ சரிப்பா… முதலில் ஆஸ்பத்திரிக்குப் போகலாம். அப்புறம் கூப்பிட்டுச் சொல்லலாம்’.

ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டு, ரூமில் படுக்க வைக்கப் பட்டார் பஞ்சாபகேசன். அவரது போனில் இருந்த செளந்தர்யாவின் நம்பரை டயல் செய்தான் கார்த்தி.

‘ அப்பா.. வீட்டுக்கு வந்துட்டீங்களா?’ என்ற செளந்தர்யாவின் குரல் கேட்டவுடன் கார்த்தி அமைதியான குரலில் பேசினான்.

‘ அக்கா, என் பெயர் கார்த்தி.. அப்பா ஸ்கூட்டரில் வரும்போது சின்ன விபத்து. இப்ப ஆதித்யா ஆஸ்பத்திரியில நல்லா இருக்காரு. பயப்பட வேண்டாம். அப்பா கிட்ட பேசுங்க’ என்று போனை பஞ்சாபகேசனிடம் கொடுத்தான்.

பதறிய மகளிடம் நிதானமாகப் பேசினார் பஞ்சாபகேசன்,

‘ அம்மா, நா நல்லா இருக்கேண்டா.. எதுக்கு அழறே?  எனக்கு ஒன்னும் இல்ல‌என்னப் பாத்துக்க இங்க மூணு தம்பிங்க இருக்காங்க.. பயப்படாம வா’.

அடுத்த அரை மணி நேரத்தில் வந்து விட்டாள் செளந்தர்யா.  பஞ்சாபகேசன் நல்ல நிலைமையில் இருப்பதைப் பார்த்தவுடன் அவள் முகத்தில் இருந்த கலவரமும், கவலையும் கொஞ்சம் குறைந்தது.

Representational Image

கொஞ்சம் நிம்மதியடைந்து சுற்றி நின்ற மூன்று இளைஞர்களையும் நோக்கி கை கூப்பினாள். தன்னை மூவருக்கும் அறிமுகப் படுத்திக்கொண்டு அவர்களின் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு, தன் மொபைல் நம்பரையும் கொடுத்தாள். பம்மிக்கொண்டு அறையின் மூலையில் நின்று திட்டு வாங்கத் தயாராக இருந்த கார் ஓனரிடம் மெதுவாக பேசினாள்,

‘ அண்ணா, நீங்க கில்ட்டியா ஃபீல் பண்ணவேண்டாம். தப்பு அப்பா மேலதான்.. நாங்க பாத்துக்கறோம். நீங்க கிளம்புங்க..’.

காரை ஓட்டிவந்தவர் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் தன் போன் நம்பரைக் கொடுத்துவிட்டு, செளந்தர்யாவின் நம்பரையும் வாங்கிக் கொண்டு அறையில் இருந்த அனைவருக்கும் நன்றி சொல்லிக் கிளம்பினார்.

கார்த்தி தான் வைத்திருந்த பஞ்சாபகேசனின் மொபைல், கண்ணாடி மற்றும் ஸ்கூட்டர் சாவி ஆகியவற்றைக் கொடுத்துவிட்டு,

‘ அக்கா, நாங்க கிளம்பறோம், ஏதாவது உதவி தேவைப் பட்டால், எங்க மூணு பேரில் யார் போனுக்குப் பண்ணினாலும் போதும். உடனே வந்துவிடுவோம். தயங்காம கூப்பிடுங்க’ என்று கூறிவிட்டு கிளம்பத் தயாரானார்கள்.

பஞ்சாபகேசன் மெதுவாக செளந்தர்யாவிடம் ஏதோ சொல்ல, செளந்தர்யா கார்த்தியிடம் திரும்பி,

‘ தம்பி, ஆஸ்பத்திரிக்கு நீங்க பணம் கட்டியதா அப்பா சொன்னாங்க. எவ்வளவுங்க தம்பி? ‘ பர்ஸை எடுத்தாள் செளந்தர்யா.

‘ ஐயாயிரம் கட்டியுள்ளோம் அக்கா..’ என்று ரசீதைக் கொடுத்தான் கார்த்தி.

Representational Image

பணத்தைக் எண்ணிக் கொடுத்துவிட்டு,

‘ எனக்கு நீங்க இன்னொரு உதவி செய்யமுடியுமா? முடியலைன்னா பரவாயில்லை..’ என்றவுடன் இடை மறித்தான் இளங்கோ.

‘ அக்கா, நாங்க மூணு பேரும் டிகிரி முடிச்சிட்டு, சும்மாதான் இருக்கோம். அதனால, தயங்காம என்ன வேலைன்னாலும் சொல்லுங்க..’.

‘ இன்னும் இரண்டு நாளைக்குள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருவோம். அதற்குள் ஸ்கூட்டரை எடுத்து மெக்கானிக்கிடம் கொடுத்து சரியாக்கி, கொஞ்சம் வீட்டில் கொண்டு வந்து கொடுக்க முடியுமா?’

தயக்கத்துடனேயே கேட்டாள் செளந்தர்யா. அதிகம் பழக்கம் இல்லாதவர்களிடம் இந்த வேலையைச் சொல்வதில் அவளுக்கு சங்கடம் இருந்தது.

‘கண்டிப்பா.. வண்டி சாவியைக் குடுங்க அக்கா’ என்று சாவியை வாங்கிக் கொண்டான் சிவா.

மூன்று நாட்கள் கழித்து மூன்று பேரும் ஸ்கூட்டரை ரிப்பேர் செய்து கொண்டு வந்தனர் வீட்டிற்கு. பெரிய மனிதர்கள் போல, ஆப்பிளும், ஆரஞ்சும் வாங்கிக் கொண்டு வந்திருந்தனர். பேசிக்கொண்டே, செளந்தர்யா போட்ட டீயைக் குடிக்கும் போது, ஸ்கூட்டர் ரிப்பேர் செய்வதற்கு ஆன தொகையைக் கொடுத்தார் பஞ்சாபகேசன். தன் நன்றியைப் பல முறை அந்த இளைஞர்களுக்குச் சொல்லியும் திருப்தியாகவில்லை பஞ்சாபகேசனுக்கு. அன்று அனாதைபோல் ரோட்டில் கிடந்தபோது, தக்க சமயத்தில் சொந்தப் பிள்ளைகள் போல் வந்து செய்த உதவிக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் என்று அவர் மனம் துடித்தது.

Representational Image

புறப்படும் முன்பு ஏனோ அந்த இளைஞர்கள் தங்களுக்குள் ஏதோ பேசி, தயங்குவது தெரிந்தது. பஞ்சாபகேசன் முந்திக்கொண்டு கேட்டார்,

‘ என்னப்பா தயக்கம்…என்ன வேணும்னாலும் கேளுங்க ‘ என்றவுடன் சிவா ஒரு டொனேசன் புக்கை அவரிடம் நீட்டி விளக்கினான்.

‘ அப்பா, நம்ம ஊர்ல அரசு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு இருக்குது. அதில் நாங்க உறுப்பினர்கள். இந்த அமைப்பு, உறவுகள் இல்லாத அனாதைப் பிணங்களை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து போலீஸ் அனுமதியுடன் பெற்று, அடக்கம் செய்கிறோம். அதற்கு தேவையான செலவுக்கு எங்கள் கை காசு பத்தாத போது, இதுபோல் டொனேசன் வாங்குகிறோம். உங்களால் முடிந்தது கொடுத்தால் போதும்’.

Representational Image

டொனேசன் புக்கை வாங்கி இரண்டாயிரம் ரூபாய்க்கான தாள்களைக் கிழித்துக் கொண்டு இரண்டாயிரம் கொடுத்துவிட்டுச் சொன்னார்,

‘ மாதா மாதம் வந்து இரண்டாயிரம் வாங்கிக் கொள்ளுங்க. ஐந்தாம் தேதி வாக்கில் என் பென்சன் காசு வந்துவிடும். என்னால் உடல் ரீதியாக உதவி செய்ய முடியாது. ஆனால் உதவி செய்யும் உங்களுக்கு பொருள் ரீதியா உதவ முடியும்’.

‘ நன்றிங்க அப்பா ‘ என்று விடை பெற்றுச் சென்ற அந்த இளைஞர்களைப் பார்த்து, செளந்தர்யாவிடம் சொன்னார்,

‘ இந்தியாவை ஆளத் தகுதியான இளைஞர்கள் நம் நாட்டில் நிறைய இருக்கிறார்கள்’.

அப்பாவின் மாற்றத்தைப் பார்த்து வாய் பிளந்து நின்றாள் செளந்தர்யா.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.