உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது ஜோஷிமட் என்ற நகரம். பனிச்சறுக்கு சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், இமாலயத்தின் மலைப்பகுதியில் ட்ரெக்கிங் செல்வதற்கான வழித்தடங்கள் எனப் பல முக்கியமான இடங்களுக்கு ஒரு தொடக்கப்புள்ளியாக ஜோஷிமட் இருக்கிறது. தற்போது ஜோஷிமட்டில் சுமார் 4,300 கட்டடங்கள் இருப்பதாகவும், இங்கே இருபத்தி ஐந்தாயிரத்து சொச்சம் மனிதர்கள் வசிப்பதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாள்களாக, இங்கு மோசமான நிலச்சரிவுகள் ஏற்பட்டவண்ணம் இருக்கின்றன. சாலைகள் மற்றும் வீடுகளில் பெரிய அளவிலான விரிசல்களும் தெரிய ஆரம்பித்தன. இப்போது இங்கே பல வீடுகளும் சாலைகளும் புதையும் நிலைக்கே சென்றுவிட்டன. 673 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன, மோசமான கட்டடங்களிலிருந்து மீட்கப்பட்டு 81 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன. ஜோஷிமட்டில் இருக்கும் பிற கட்டடங்களின் உறுதி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, சில கட்டடங்களைத் தகர்ப்பது குறித்த ஆலோசனையும் நடந்துகொண்டிருக்கிறது.

Joshimath Crisis | ஜோஷிமட் நகரம்

ஜோஷிமட்டில் இப்போது நடந்துகொண்டிருக்கும் பேரிடருக்குப் பல காரணங்கள் உண்டு. முதலில், ஜோஷிமட் என்ற இடமே பல அபாயங்களை உள்ளடக்கியதாக இருப்பதாகப் பல அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். பத்திரிகையாளர்களிடம் பேசிய நிலம்சார் வல்லுநர் காலாசந்த் சைன், ஜோஷிமட் நகரத்தில் மூன்று விதமான நிலவியல் பிரச்சனைகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்:

  1. ஜோஷிமட் என்ற நகரமே, நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட பெரிய அளவிலான நில நடுக்கங்கள், நிலச்சரிவுகளின் இடிபாடுகளின்மேல் கட்டமைக்கப்பட்டதுதான். ஆகவே இதன் நிலப்பகுதி தொடக்கம் முதலே நிலையற்றதாகவே இருந்துவந்திருக்கிறது.

  2. ஜோஷிமட் இருக்கும் இடம், நிலநடுக்கப் பகுதிகளில் ஐந்தாவது வகைமையில் வரும், அதாவது Seismic Zone 5. இதுபோன்ற இடங்களில் நில நடுக்கம் மற்றும் பிற நிலவியல் பேரிடர்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

  3. இங்கே இருக்கும் நீர் வடிகால் அமைப்புகளிலிருந்து தொடர்ந்து நிலத்துக்குள் நீர் ஊடுருவுகிறது, இதனால் ஏற்கெனவே எளிதில் பாதிக்கப்படும் தன்மை கொண்டிருந்த நிலம் மேலும் நெகிழ்ந்து எளிதில் புதையக்கூடியதாக மாறிவிடும்.

ஜோஷிமட் நகரத்தின் நில அமைப்பு காரணமாக ஏற்கனவே இருந்த சில பிரச்னைகள் இவை, இவற்றின் தாக்கத்தை அதிகப்படுத்தும்படியான புதிய சில காரணங்களும் உண்டு.

ஜோஷிமட் நகரம்

அளவுக்கு மிஞ்சிய நகரமயமாக்கல் மற்றும் கட்டல்டங்கள்:

இவ்வாறு தங்களது ஊர் மண்ணில் புதைவதற்கான ஆரம்ப அறிகுறிகள் 1975ம் ஆண்டிலேயே தெரியத் தொடங்கிவிட்டதாக மூத்த குடிமக்கள் தெரிவிக்கின்றனர். எழுபதுகளிலிருந்து இப்போதுவரை ஜோஷிமட்டின் மொத்த கட்டிடங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 1976ம் ஆண்டிலேயே இந்தப் பிரச்சனையை ஆய்வு செய்வதற்காக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அதில், ஜோஷிமட் இருக்கும் இடம் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதி என்பதால் கட்டுமானங்களை இங்கு மேற்கொள்வது பற்றிய எச்சரிக்கைகளும் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

ஜோஷிமட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததில், தங்கும் விடுதிகள், உணவகங்கள் போன்ற வணிகக் கட்டிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே நிலையற்ற ஒரு நிலப்பகுதியைக் கொண்டிருந்த இடத்தில் இதுபோன்ற தொடர் கட்டுமானங்களால் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.

காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரிடர்கள்:

காலநிலை மாற்றத்தால் ஜோஷிமட்டில் ஏற்படும் பேரிடர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வழக்கமான எண்ணிக்கையை விட கூடுதலான வெள்ளப்பெருக்குகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில், நிலம் மேலும் பலவீனமடைந்திருக்கிறது. “2021ல் ஏற்பட்ட அந்த மோசமான வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் நிலம் வலுவற்றதாக மாறிவிட்டதாகத் தோன்றுகிறது. அப்போதே என் வீட்டில் சில விரிசல்கள் தெரிந்தன” என்கிறார் ஜோஷிமட்டில் வசிக்கும் ஒருவர்.

ஜோஷிமட் நகரம்

பெரும் கட்டுமானங்கள்:

ஏற்கெனவே பலவீனமடைந்த ஒரு இடத்தில் பெரிய கட்டுமானங்களைக் கட்டுவது சிக்கல்களை இன்னும் தீவிரப்படுத்தும். தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையத்தை உருவாக்குவது, பெரிய அளவிலான சாலைகள் அமைப்பது போன்ற பெரும் கட்டுமானங்கள் இங்கு நடந்துகொண்டிருக்கின்றன. இதுபோன்ற கட்டுமானப் பணிகளில் மலைப்பிரதேசம் குடையப்படுவதால் நிலம் தொடர்ந்து வலுவிழக்கிறது.

காலநிலை மாற்றம் மேலும் தீவிரமடையும்போது உலகின் பல மலைப்பகுதிகள் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டுக் குழும அறிக்கையில், காலநிலை மாற்றத்தால் இமாலயப் பகுதிகளில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு தீவிரமடையும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தவிர, இந்த இடம் நிலநடுக்க அபாயம் கொண்டதாகவும் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு இடத்தில் நடந்த தொடர் கட்டுமானங்கள், நகரமயமாக்கல், கட்டுமானப் பணிகளின்போது ஏற்படும் அதிர்வுகள் ஆகியவை ஜோஷிமட்டை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கின்றன.

“மக்கள் வாழப் பாதுகாப்பற்ற இடம்” என்று ஜோஷிமட் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இடம்பெயர்க்கப்பட்ட குடும்பங்களைத் தாண்டி மேலும் 90 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல காத்திருக்கின்றனர்.

ஜோஷிமட்

பேரிடர் என்றதுமே பெரிய அளவிலான உயிரிழப்புகள், பொருட்சேதம் ஆகியவைதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இதுபோன்ற மெதுவான நிகழ்வுகளும் பேரிடர்கள்தான். இப்போதைக்கு இந்தக் குடும்பங்கள் ஒரு மாற்று இடத்தில் தங்க வைக்கப்படலாம், ஆனால் இவர்களது சொந்த ஊர் வாழ்வதற்குப் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது. இவர்களது எதிர்காலம் என்னவாகும்? புதிய இடத்தில் வேர்விட்டு வாழ்வாதாரத்தையும் அமைத்துக்கொள்ளவேண்டியிருக்கும், பல நூறு குடும்பங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது. இதுபோன்ற மெதுவான பேரிடர் நிகழ்வுகளின் தாக்கம் அதிகமாகப் பேசப்படவேண்டும். இவை உருவாகாமல் தடுக்கவும் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.

“சூழலியலாளர்கள் எப்போதுமே முன்னேற்றத்துக்கு எதிராகப் பேசுகிறார்கள்”, “எல்லாவற்றுக்கும் பயமுறுத்துகிறார்கள்” போன்ற பொது குற்றச்சாட்டுகளிலிருந்து விலகி, ஒவ்வொரு புதிய வளர்ச்சித் திட்டமும் சூழல் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். ஜோஷிமட்டைப் போல இன்னொரு பேரிடர் உருவாகாமல் தடுக்க அதுதான் வழி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.