அதிக நோ பால்களை வீசி விமர்சனத்துக்குள்ளான அர்ஷ்தீப் சிங்கிற்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் அர்ஷ்தீப் சிங் அதிகமாக நோ பால்கள் வீசியதே தோல்விக்கு முக்கியமான காரணம் என விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, நோ பால் மற்றும் ஃப்ரீ ஹிட்களால் இந்திய அணி 27 ரன்களை வழங்கியிருந்தது.

நேற்று (ஜனவரி 5) மட்டும் இந்திய அணி 7 நோ பால்களையும் 4 வைடு பால்களையும் வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ரன்களை வாரி வழங்காமல் இருந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் விமர்சனமாக உள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில், இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், ஒரே ஓவரில் 3 நோ பால்களை வீசினார். அத்துடன் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்களை வாரி வழங்கினார். அதாவது, அந்த ஓவரின் கடைசி பந்தில் தொடர்ச்சியாக 3 நோ-பால்களை வீசி அதிர்ச்சியளித்தார்.

image

அந்த ஒரு பந்துக்கு 3 நோ – பால்கள் வீசியதால் அந்த ஒரு பந்தில் மட்டும் 14 ரன்களையும் வழங்கினார். அத்துடன் டி20யில் ஹாட்ரிக் நோ – பால் வீசிய முதல் பவுலர் என்ற மோசமான சாதனையையும் அர்ஷ்தீப் சிங் படைத்தார்.

இதனால், அவர் மீது வெறுப்புற்ற கேப்டன் பாண்டியா, அவருக்கு 4 ஓவர்களையும் வீசுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை. இறுதியில் 19வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங், அந்த ஓவரிலும், 2 நோ பால்களை வீசினார். அத்துடன், 18 ரன்களையும் வாரி வழங்கினார். மொத்தத்தில் இரண்டு ஓவர்களை வீசிய அவர், 5 நோ பால்களுடன் 37 ரன்களையும் எதிரணிக்கு வாரி வழங்கியிருந்தார். இதுகுறித்து மூத்த வீரர் தினேஷ் கார்த்திக், முன்னாள் வீரர் கவாஸ்கர் உள்ளிட்டோர் அர்ஷ்தீப் சிங்கை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

image

இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, ”நோ பால்கள் வழியாக எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கக் கூடாது. இதற்கு முன்பும் அர்ஷ்தீப் சிங் சில நோ பால்களை வீசியுள்ளார். அவர், கிரிக்கெட்டின் இயல்பான விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். எந்தவொரு கிரிக்கெட்டிலும் நோ பால் வீசுவது க்ரைம்தான். அவர் மீண்டும் பயிற்சிக்குச் சென்று தன் தவறுகளைச் சரி செய்ய வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் இத்தகைய தவறுகளைச் செய்யக்கூடாது” என்றார்.

இதுகுறித்து ட்ராவிட் கூறுகையில், ”எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் வீரர்கள் யாரும் வைட் பால் மற்றும் நோ பால் வீச விரும்புவதில்லை. அதிலும் குறிப்பாக டி20 போட்டிகளில் யாரும் நோ-பால் வீச விரும்ப மாட்டார்கள். சில நேரங்களில் இளம் வீரர்கள் இதுபோன்ற கடினமான சூழலை எதிர்கொள்வார்கள். அந்த நேரத்தில் மற்றவர்கள் அவர்களிடம் பொறுமை காக்க வேண்டும். இது மிகவும் கடினமானது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கற்றுக் கொள்வது என்பது சுலபமான காரியம் கிடையாது.

image

இளம் வீரர்கள் செய்யும் தவறுகளை எடுத்துச் சொல்லி அவர்களை வழிநடத்த வேண்டுமே தவிர, அவர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பது தவறு. ஆரம்பத்தில் இதுபோன்ற தவறுகளைச் செய்தாலும் அதிலிருந்து கற்றுக்கொண்டு அவர்கள் சரி செய்து கொள்வார்கள். தற்போது லெஜெண்ட் என பார்க்கப்படும் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் ஆரம்பக்கட்டம் சறுக்கலாகவே இருந்திருக்கிறது. அதிலிருந்து கற்றுக் கொண்டுதான் மேலே வந்திருப்பார்கள். ஆகையால் நாம் அதைப் புரிந்து கொண்டு பேசுவது அவர்கள் வளர்ச்சிக்கு உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.