நிலவிற்கு விண்கலத்தை அனுப்பி சோதனை செய்யும் இந்தியாவின் கனவு திட்டமான சந்திராயன்-3 திட்டத்தை இந்த வருடம் ஜூன் ஜூலை மாதத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சந்திராயன் 2 திட்டத்தில் செயல்பாட்டில் உள்ள ஆர்பிட்டர் இந்த திட்டத்திலும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், நிலவின் மேற்பரப்பில் தரை இறங்குவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் சந்திராயன் 3 மிஷினில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

108வது இந்திய அறிவியல் மாநாட்டில் விண்வெளி துறை சார்ந்த கருத்தரங்கில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்து கொண்டு இன்று உறையாற்றினார். அப்போது சந்திராயன் மூன்று திட்டத்தின் முக்கிய கருதுகோள்களை சோம்நாத் வெளியிட்டார்.

image

அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், “சந்திராயன் 3 திட்டத்தின் தொழில்நுட்ப பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. சந்திராயன் 2 திட்டத்தின் ரோவர் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் அடையும் போது வெடித்து சிதறியதால், சந்திராயன் 3 திட்டத்தை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கியுள்ளோம். கொரோனா தொற்று காரணமாக சந்திராயன் 3 திட்டத்தில் காலதாமதம் ஏற்பட்டது. சந்திரயான் -2 இன் லேண்டர், ரோவர் கலவை தோல்வியடைந்திருந்தாலும், ஆர்பிட்டர் இன்னும் நிலவின் மேற்பரப்பிற்கு மேலே வட்டமிடுகிறது.

image

பெரிய அறிவியல் செயல்பாடுகளை நடத்தும் நிலையில் சந்திராயன் 3 திட்டத்தில் அந்த ஆர்பிட்டரும் பயன்படுத்தப்படும். கடந்த முறை ரோவரை இழந்ததால் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க முடியாமல் போனது. இம்முறை, நிலவில் தரை இறங்குவதற்கான இலக்கை முன் வைத்து, பலவிதமான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது” என்றார்.

image

மேலும் சந்திரனின் பரப்பில் பாதிப்பு ஏற்படாத பகுதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட மென்பொருள் மூலம் இயங்கும் ரோவர் போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக சந்திராயன் திட்ட குழுவினர் தெரிவிக்கின்றனர். விண்கலத்தின் பொறியியல் குறிப்பிடத்தக்க அளவில் வித்தியாசமாக இருப்பதாகவும், கடந்த முறை போன்ற பிரச்சனைகள் ஏற்படாத வகையில் அதை மேலும் வலுவாக மாற்றியிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 வகை ராக்கெட்கள் இதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் ராக்கெட்டின் செயல்பாடு மற்றும் வானிலையை பொறுத்து திட்டம் ஏவுவது குறித்த தேதிகள் அறிவிக்கப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.