பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரில் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கால் தொடர் நாயகன் விருதை கைப்பற்றி, ஒரு தரமான கம்பேக்கை கொடுத்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது.

2017 ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பை தொடர், இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. அதுவரை ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் இந்திய அணியை வென்றதே இல்லை. அதனால் கோப்பை இந்தியாவிற்கு தான் என்ற கோசங்கள் உலகத்தின் எல்லாபுறமும் ஒலிக்கத்தொடங்கி இருந்தன. இந்தியாவிற்கு கோப்பையை எடுத்து வைங்கப்பா, எதுக்காக பைனல்லாம் நடத்திகிட்டு என்ற ஏகபோக நக்கல் வசனங்களும் எங்கும் இருந்துகொண்டே இருந்தன.

ஆனால் எதையும் பெரிதும் கண்டுகொள்ளாத சர்பராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, இதுவரை பெற்ற தோல்விகளுக்கெல்லாம் பதில் கணக்கை தொடங்குவதில் குறிக்கோளாக வைத்து இறுதிப்போட்டிக்கு தயாராகியது.

பாகிஸ்தானுக்காக முதல் ஐசிசி சாம்பியன் டிரோபி கோப்பை வென்ற கேப்டன்!

image

இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான், தங்களது சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியை 158 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி, இதுவரை ஐசிசியின் சாம்பியன் டிரோபியின் இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அணியாக பதிவுசெய்து, 180 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது பாகிஸ்தான் அணி. பல ஜாம்பவான்களை கண்டிருந்த இதற்கு முந்தைய பாகிஸ்தான் அணியால் கூட இந்திய அணியை ஐசிசி தொடர்களில் வெற்றிபெற முடியவில்லை, அந்த சாதனையை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் செய்து காட்டி, முதல்முறையாக பாகிஸ்தானின் கைகளில் சாம்பியன் டிராபி கோப்பையை வைத்து அழகு பார்த்தார் சர்பராஸ் அகமது.

என்னதான் பாகிஸ்தான் அணிக்கு கோப்பையை வென்றிருந்தாலும், அதற்குபிறகு பாகிஸ்தான் மேனேஜ்மெண்ட்டிலும், பயிற்சியாளர்களை மாற்றுவதில் ஏற்பட்ட குழப்பத்திலும் சர்பராஸ் அகமது கொஞ்சம் கொஞ்சமாக அணியிலிருந்து விலக்கப்பட்டு, 4 ஆண்டுகளாக அணியில் இடம்பிடிக்காமலேயே இருந்துவந்தார்.

4 வருடங்களுக்கு பிறகு நியூசிலாந்து தொடரில் கம்பேக்!

இந்நிலையில் சொந்தநாட்டில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியில் சர்பாரஸ் அகமதுவிற்கு இடம் கிடைத்தது. முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி விரைவாகவே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கைக்கோர்த்த பாபர் அசாம் மற்றும் சர்பராஸ் அகமது இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் 4 வருடத்திற்கு பிறகு அணியில் வந்து தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் சதமடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 86 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.

image

இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 2ஆம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 449 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் சர்பராஸ் அகமது சிறப்பாக பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இந்த இன்னிங்ஸிலாவது சதமடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போது 78 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 408 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 4ஆவது நாள் ஆட்டத்தின் முடிவில் 277 ரன்களிலேயே டிக்ளேர் செய்து, முதல் போட்டியில் பாகிஸ்தான் செய்ததை போலவே அதிர்ச்சியளித்தது நியூசிலாந்து.

0 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் – 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு, 4ஆவது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 ஓவர்களிலேயே 0 ரன்களுக்கு ஓபனர்கள் இரண்டுபேரையும் அவுட்டாக்கி வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தனர் நியூசிலாந்தின் பந்துவீச்சாளர்கள். தொடர்ந்து 5ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணி 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் நியூசிலாந்து தான் வெற்றிபெரும் என்ற இடத்திற்கே வந்துவிட்டனர் ரசிகர்கள்.

image

ஆனால் போட்டியில் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்று போட்டியை டிரா செய்வதல்ல, வெல்வதற்கான வாய்ப்பையே பெற்றுகொடுத்து கொண்டிருந்தார் சர்பராஸ். 6ஆவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட சர்பராஸ் அரைசதமடித்து அசத்த, 32 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார் சவுத் சகீல். பின்னர் களமிறங்கிய ஆஹா சல்மானுடனும் சர்பராஸ் பார்ட்னர்ஷிப் போட வெற்றிபெறுவதற்கான ரன்கள் பாகிஸ்தானிற்கு வெறும் 40 ரன்கள் மட்டுமே மீதமிருந்தன.

சர்பராஸ் அகமதின் அபாரமான ஆட்டத்தால் டிக்ளேர் செய்து சிக்கித்தவித்த நியூசிலாந்து!

image

தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் தன்னுடைய 4ஆவது டெஸ்ட் சதத்தை 4 வருடங்கள் கழித்து வந்து பூர்த்தி செய்தார். சதமடித்த பிறகு தரையில் அமரந்து எமோசனலாக செயல்பட்டார் சர்பராஸ். அவருடைய அந்த செலப்ரேஷம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. போட்டியை வெற்றிபெறவோ இல்லை டிராவிற்கு கொண்டு செல்லவோ நடுவில் தொல்லையாக நின்றுகொண்டிருந்தார் நியூசிலாந்து அணிக்கு சர்பராஸ். பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு 118 ரன்களில் அவரை வெளியேற்றினார் ப்ரேஸ்வெல். போட்டியில் ஓவர்கள் முடிவுற்றதால் சமன் செய்யப்பட்டது.

தொடர்நாயகன் – ஆட்ட நாயகன் “சர்பராஸ் அகமது”!

image

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 அரைசதங்கள், 1 சதம் விளாசிய சர்பராஸ் அகமது தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நியூசிலாந்தின் வெற்றியை தட்டிப்பறித்து போட்டியை சமன்செய்ததிற்காக ஆட்டநாயகன் விருதும் சர்பராஸ்ஸிற்கு வழங்கப்பட்டது.

போட்டிக்கு பிறகு சர்பராஸ் குறித்து பேசியிருந்த கேப்டன் பாபர் அசாம், அவருடைய கம்பேக் புத்திசாலித்தனமாக இருந்தது, இது நிச்சயமாக அவருக்கு ஒரு ட்ரீம் கம்பேக்காகவே மாறியது” என்று குறிப்பிட்டார்.

போட்டிக்கு பிறகு பேசிய சர்பராஸ், ” என்னை பொறுத்தவரையில் இது ஒரு சிறந்த கம்பேக். முன்னர் நான் நீண்ட காலமாக அணியின் ஒரு பகுதியாக இருந்தேன், ஆனால் கடந்த 4 வருடங்களாக என்னுடைய ஒரு வாய்ப்பிற்காக காத்திருந்தேன். நான் மீண்டும் அணிக்குள் திரும்பி பேட்டிங் செய்ய வரும்போது நிர்வாகம் எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது, என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.