ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயண யாத்திரையில் கலந்துகொண்ட கமல்ஹாசன், இரு கொள்ளுபேரன்கள் கலந்து நடக்கும் யாத்திரை இது என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிவடையும் ராகுல் காந்தியின் “இந்திய ஒற்றுமைப் பயணம்” தமிழகம், கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, மஹாராஸ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டில்லியில் கலந்துகொண்டார்.

image

முதலில் கொஞ்ச தூரம் ராகுல் காந்தியுடன் நடந்து கொண்டே கமல்ஹாசன் சென்றார். பின்னர், செங்கோட்டை அருகில் கமல்ஹாசன் கூட்டத்தின் மத்தியில் பேசினார்.

கமல்ஹாசன் பேசும்போது, “நான் இங்கு ஏன் வந்திருக்கிறேன் என பலர் கேட்கிறார்கள். நான் ஓர் இந்தியன் என்பதால் இங்கு வந்திருக்கிறேன். என் அப்பா ஒரு காங்கிரஸ் அபிமானி. எனக்கு வேறு சித்தாந்தங்கள் இருந்தன. தனியாக கட்சி தொடங்கினேன். ஆனால், இந்தியா என்று வருகிறபோது, பல கட்சிகள் ஒரே கோட்டின் கீழ் இணைய வேண்டும். அதனடிப்படையில் தான், நான் இங்கு கமல்ஹாசனாக வந்திருக்கிறேன். தமிழில் பேசுங்கள் என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டிருக்கிறார். இங்கு நிறைய தமிழ் மக்கள் வந்திருக்கிறார்கள். ராகுல் காந்தியே அவரை ஒரு தமிழர் என முன்பு ஏற்றுக்கொண்டிருப்பதால், நான் அவரின் வேண்டுகோளை முழு மனதாக ஏற்றுக்கொள்கிறேன்.

இன்னொன்று, அதனால் மட்டுமே நான் அவரை சகோதரனாக ஏற்றுக்கொண்டேன் என்றில்லை. இது இரண்டு கொள்ளுப் பேரன்மார்கள் கலந்து நடக்கும் யாத்திரை. நாங்கள் இருவரும் இந்தியாவின் கொள்ளுப்பேரன்கள். அவர் நேரு வழியில் கொள்ளுப்பேரன். நான், நாம் அனைவரையும் போல காந்தி வழியில் கொள்ளுப் பேரன். கூட்டணிக் கட்சியாக இருக்க வேண்டுமென எந்த அவசியமும் இல்லை. எந்தவொரு சிறு நெருக்கடியான சூழல் நம் அரசியல் அமைப்புக்கு வந்தாலும், நான் தெருவில் வந்து நிற்பேன். எந்தக் கட்சி ஆள்கிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் அதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்.

image

நான் முதலில் ஆங்கிலத்தில் தான் பேசுவதாக இருந்தேன். ஆனால், சகோதரர் பணித்ததால் தமிழில் பேசுகிறேன். இங்கு வருவதற்கு பலரும் என்னை ஆட்சேபித்தார்கள். என்னுடைய அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படும் என நினைத்தார்கள். இந்த தேசத்திற்காகத்தான் நான் இந்த அரசியல் வாழ்க்கையை தொடங்கினேனே ஒழிய எனக்காக அல்ல.

கண்ணாடி முன் நின்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். இப்போது இந்த தேசத்திற்கு நீ தேவையா என்று கேட்டேன். எனக்குள் ஒரு குரல் ஒலித்தது, அந்த குரல் “ கமல், இந்தியாவைப் பிரிக்க உதவியா இருக்காத. இணைக்க உதவியா இரு” என்று சொன்னது. கமல்ங்கறது என் பேரு. யாருக்கும் அதுல சந்தேகம் வேண்டாம். நானொரு பாதுகாவலன். என் தேசத்திற்கு எப்போதெல்லாம் நான் தேவையோ, அப்போதெல்லாம் நான் இங்கு வருவேன். இந்த யாத்திரையை ராகுல் தொடங்கிய தமிழ்நாட்டிலிருந்து நான் வந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இந்த யாத்திரை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. நான் மாநிலங்களின் வழி நடந்து வரும் இந்த யாத்திரையைப் பற்றி சொல்லவில்லை. நமது சந்ததியினர் அனுபவிக்கவேண்டிய சிறப்பான எதிர்காலமும், நமது பழம்பெரும் பெருமைகளும் இணைய வேண்டிய தருணமிது.

image

கூட்டணி குறித்து பலர் கேள்வி கேட்கிறார்கள். அது வேறு விஷயம். நான் இங்கு இந்தியனாக வந்திருக்கிறேன். இது ஐந்தாண்டுக்கு ஒரு முறை போடும் கூட்டணியோ ஐந்து ஆண்டு திட்டமோ இல்லை. இது பல தலைமுறைகளுக்காக பேச வேண்டிய விஷயம். இந்த தேசம் இப்படித்தான் இருக்க வேண்டும். நான் என் மக்களுக்கு, என் மாநிலத்துக்கு, என் கட்சிக்கு ஒரு உதாரணமாக இருக்க விரும்புகிறேன்.

தேசம் என வருகிற போது, கட்சிக் கொடியின் நிறத்தை மறந்துவிடுங்கள். நமக்குள் இருப்பது மூன்றே மூன்று நிற வர்ணக்கொடி தான். ராகுல் காந்தியின் இந்த சீரிய முயற்சியை நான் மதிக்கிறேன். இதற்கு முன்பும் சிலர் இதைச் செய்திருக்கிறார்கள். இப்போது மீண்டும் நடக்கிறது. நான் அவருக்கு என் வாழ்த்துகளைக் கூறுகிறேன். உங்களைப் போல் நானும் அவரை இந்த யாத்திரை முழுவதும் வாழ்த்துகிறேன். நாம் அனைவரும் மீண்டும் சந்தித்து, உரையாடுவோம். ஜெய்ஹிந்த்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.