தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீலகிரி மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா, உதகையை அடுத்த ஃபிங்கர்போஸ்டில் நடைபெற்றது. இந்த அலுவலகத்தைத் திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா,

“அரசின் பிளாஸ்டிக் தடை சட்டம் பாரபட்சமாக உள்ளது. 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களை வியாபாரிகள் விற்கக்கூடாது என்று அரசு தடை செய்துள்ளது, இந்த வகை பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்யலாம். ஆனால், பெரு நிறுவனங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களில் பொருள்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவும் ஜி.எஸ்.டி சட்டத்தில் தொடர் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. இவை பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளன, மேலும் இப்பிரச்சினை தொடர்ந்தால் 10 ஆண்டுகளில் இவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லாமல் போய்விடும். வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்” என்று கூறினார்.

ஏ.எம்.விக்கிரமராஜா

 இது பற்றி ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் கேட்டோம். அதற்கு விரிவாக விளக்கம் அளித்து அவர் கூறியதாவது, ‘‘இந்திய அரசானது 19 வகை பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது. இதில் வணிக சங்கத்திற்கு மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், இன்றைய சூழலில் ஆவின் பால் உட்பட அனைத்தும் பிளாஸ்டிக்கில்தான் பேக்கிங் செய்யப்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் செய்தித்தாளில் பொருள்களை மடித்துத் தருவது வழக்கமாக இருந்தது. ஆனால், இன்று பல சாதாரண கடைகளில் உள்ளவர்களுக்கு இது தெரியவில்லை. எனவே, இங்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு பல கட்டாயங்கள் உள்ளது.

மேலும், இதுபோன்ற பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், அவர்களின் கண்களுக்கு தெரிந்தே ஐ.டி.சி, பிரிட்டானியா, குர்கூரே மற்றும் பெப்சி போன்ற பல நிறுவனங்கள் ஒருமுறை மட்டும் பயன்படுத்த தகுந்த பிளாஸ்டிகையே பயன்படுத்தி வருகிறது. ஆனால் இதனை கவனிக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இது சிறிதும் நியாயமாக தெரியவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசாங்கம் செயல்படுகிறா என்பதுதான் என் கேள்வி. 

அது மட்டுமின்றி, சாதாரண உற்பத்தியாளர்களால் நிறுவனத்தின் பேர் வைத்து இது போன்ற பிளாஸ்டிக் கவருகளை சாயம் அடிக்க வேண்டும் எனில், அதற்கு நிறைய செலவாகும். எனவே உற்பத்தியாளர்களோ அல்லது வியாபாரிகளோ தங்களின் பொருள்களை பெரிய நிறுவனங்களுக்கு விற்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய நிறுவனங்களின் முகவரிகளே மக்களுக்கு தெரிகிறது.

சிறிய வியாபாரிகள் இதனை நம்பி பலருக்கும் வேலை கொடுத்து தனது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்கிறார்கள்.. பெரிய நிறுவனங்களோடு கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டால் சிறிய வியாபாரிகள் மற்றும் அவர்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

ஜி.எஸ்.டி மற்றும் பிளாஸ்ட்டிக் தொடர்பான சட்டங்களில் பல நடைமுறை சிக்கல் உள்ளன.  ஆகவேதான் இது மல்ட்டி நேஷனல் கம்பெனிகளுக்கு ஆதரவாக இருக்கிறது என்கிறோம். கார்ப்பரேட் கம்பெனிகள் தருகிற சட்டத்தைத்தான் அரசு அமல்படுத்துகிறதா என்கிற அச்சம் வணிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சாமானிய மனிதர்களைப் பாதுக்காக்க முதலமைச்சரும் பிரதமரும் இந்த விஷயத்தில் உடனே தலையிட வேண்டும்.

வேதனை அளிக்கும் மற்றொரு விஷயம் என்னவெனில், அமேசான், ரிலையன்ஸ் மற்றும் டி-மார்ட் ஆகிய நிறுவனங்களின் முக்கிய குறிக்கோளே, சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளின் வியாபாரத்தை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதுதான். சாதாரண வியாபாரி 70 ரூபாய்க்கு சக்கரை விற்றால் அந்த 70 ரூபாய்க்கு ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். இதுவே பெரிய நிறுவனங்கள் தள்ளுபடி என்னும் பெயரில் 9 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, அந்த 9 ரூபாய்க்கு மட்டும் ஜி.எஸ்.டி வரி செலுத்தி வருகின்றன. 40 லட்சம் ரூபாய்கீழ் உள்ளவர்கள் ஜி.எஸ்.டி எடுக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு இருக்கிறது. ஆனால் டேஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் ஒவ்வொரு கடைக்கும் 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வணிகர் சங்கம் நவம்பர் 29-ம் தேதி நடத்திய மாநிலம் தழுவிய போராட்டத்தால் வரி செலுத்துவதை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இன்னும் தடை செய்யவில்லை.

மளிகைக் கடை (Representational Image)

நடைமுறை சட்டங்கள் அனைத்தும் பெரிய நிறுவனங்களுக்குத்தான் ஆதரவாக இருக்கிறது சாமானியர்களுக்கு ஆதரவாக இல்லை. வணிக வரித் துறையில் போடப்படும் சட்டகங்கள் நேரடியாக அனைவருக்கும் தெரிவிக்கப்படுவதில்லை; மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பப்படுகிறது, பெரிய கடைகள், பெரும் நிறுவனங்களில் மட்டும்தான் கணினிகள் இருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் லட்சக்கணக்கான சிறிய கடைகளும் இருக்கிறது. அவர்களால் தினந்தோறும் ஜி.எஸ்.டி வரிக் கணக்கு பார்த்து அதனை செலுத்துவது என்பது கடினமான விஷயம்.

ஜி.எஸ்.டி மூலம் வருகிற வாருவாயில் கஷ்டப்படும் வணிகர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற வணிகச் சங்கத்தின் கோரிக்கையானது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

கொரோனா காலங்களில் எந்த ஆன்லைன் நிறுவனமும் உதவவில்லை. சாதாரண வியாபாரிகள்தான் மக்களுக்கு நேரில் சென்று உதவினார்கள். அமேசான் போன்ற நிறுவனங்கள் வணிகத்திற்கு உள்ளே வரும்போது நாங்கள் 3 லட்சம் பேருக்கு வேலை தருவோம் என்றது. ஆனால், சில நாட்களில் நாங்கள் நஷ்டத்தில் இருக்கிறோம் என்று சொல்லி வேலையிலிருந்து விலக்கிவிடுகிறார்கள். இது வேலைவாய்ப்ப்பின்மையை அதிகரிக்கிறது.

இன்றைய வணிகர்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெரிவதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள்கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன. இதற்கு ஜி.எஸ்.டி, பிளாஸ்டிக் சட்டம் போன்றவை ஆதரவாக இருக்கிறது’’ என்றார் ஏ.எம்.விக்கிரம ராஜா.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.