வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

‘மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை’

என்று கவிஞர் கண்ணதாசன் தன் திரைப்பாடலில் எழுதியிருப்பார்.

எங்கள் கால மார்கழிதான் எவ்வளவு இனிமையானது!

கொண்டாட்டம் கார்த்திகை மாதத்தின் கடைசி நாளே ஆரம்பித்து விடும். அகிலாண்டேஸ்வரி சமேத ஆத்மநாதசுவாமி கோயிலில், அதாங்க சிவன் கோயிலில், அன்று மாலையே ஸ்பீக்கர் செட் கட்ட ஆரம்பிக்கும்போதே எங்கள் உற்சாகம் கரை புரள ஆரம்பித்து விடும்.

ஐந்தாறு கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள எடையூரிலிருந்து ‘வாணி சவுண்ட் சர்வீஸ்’ மூர்த்தி அண்ணனும் அவர் உதவியாளரும் வண்டி மூலமாக வேண்டிய உபகரணங்களைக் கொண்டு வந்து இறக்குவார்கள்.

Sivan Temple

சிவன் கோயிலின் மடப் பள்ளிக்குள் ரிகார்ட் போடும் பெட்டியை வைத்து, வெளியே உயரத்தில் இரண்டு ஸ்பீக்கர்களைக் கட்டி விடுவார்கள்.

அன்று மாலையே கணபதி பாடலுடன் களை கட்டத் தொடங்கி விடும் மார்கழி!

நாங்களெல்லாம் ‘சடுகுடு’, ’பளிங்கு’, ’நொண்டிக்கோடு’, ’பம்பரம்’, ’குச்சிப்பந்து’, ’வாலி பால்’, ’புட் பால்’ ‘சில்லுக்கோடு’, என்று பலவித விளையாட்டுக்களை விளையாடுவோம். தரும கோயில் எதிரேயுள்ள மைதானம் விழி பிதுங்கும்.

நாலரை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் கோயில் ரிகார்ட் ஆறரை, ஏழு வரை கூட நீடிக்கும். அது நின்ற பிறகுதான், பிடாரி குளம் சென்று கை, கால்களைக் கழுவி வீடு திரும்புவோம்.

வாசலின் ஓரத்தில் பக்கத்துத் தெருப்பெண் போட்டுச் சென்ற ஐந்தாறு பறங்கி மொட்டுகள் கிடக்கும். அதை ஞாபகமாக எடுத்து சொம்பிலுள்ள தண்ணீரில் போட்டு வைப்போம்.

Representational Image

இரவு படுக்கை எங்கள் ஊர் ஆரம்பப் பள்ளியில். நான், எனது உடனடி மூத்த சகோதரர், கசின் மற்றும் பக்கத்து வீட்டு அண்ணன் என நால்வரும் பள்ளியில்தான் படுப்போம், ஆளுக்கொரு சிம்னி விளக்குடன் படிப்பதற்கு.

காலையில் நாலரை மணிக்கே ரெங்கசாமி மாமா ரிகார்ட் போட ஆரம்பித்து விடுவார். சில நாட்களில் அவர் தூக்கக் கலக்கத்தில் பெட்டிக்குப் போதுமான ‘கீ’ கொடுக்காமல் விடுவதாலோ, முள்ளைச் சரியாகப் பொருத்தாததாலோ ஸ்பீக்கர் ‘கிர்ர்ர்’ என்ற வினோத ஒலியை எழுப்பும். ’மாமா தூங்கிட்டார்டோய்!’ என்று எங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொள்வோம்.

கோயிலுக்கு மிக அருகாமையில் பள்ளி என்பதால், நாலரைக்கு ரிகார்ட் போட்டதும் எழும்பி, துண்டைக் கட்டிக்கொண்டு குளிரும் பனியில், அரை கிலோ மீட்டர் தாண்டியுள்ள பிடாரி குளத்துக்கு ஓடுவோம். ஓட்டத்தில் வியர்த்து விடத் தொப்தொப்பென்று குளத்து நீரில் குதித்து எழுந்து வந்து படிக்க உட்காருவோம். ஒவ்வொருவராகச் சாமியாடி, அடுத்த அரை மணி நேரத்தில் எல்லோரும் தூங்கி விடுவோம்.

வேறொரு பக்கத்தில் படுத்திருக்கும் எனது மூத்த சகோதரரும், அவரது ஆசிரிய நண்பர் நமசிவாயமும் ‘ஏன்டா இப்படிப் பண்ணுறீங்க? என்று ஆசுவாசப் படுவார்கள்.

Representational Image

நன்கு விடிந்ததும் வீட்டுக்கு வந்தால், வாசலில் அக்காவின் கை வண்ணத்தில் கோலமும், அம்மாவின் கை வண்ணத்தில் சாணிப் பிள்ளையாரும் அவர் தலையில் மலர்ந்த பறங்கிப் பூக்களும், தும்பைப் பூக்களும் காட்சியளிக்கும். மஞ்சள் வண்ணப் பறங்கிப் பூக்களுடன், வெள்ளை நிறத் தும்பைப் பூக்கள் சேர்ந்து மங்கலகரமாகவும், மனதுக்கு இதமளிப்பதாகவும் இருக்கும்.

அம்மா சற்று ஓய்வெடுக்கும் நேரங்களில் நான், ’ஏம்மா! இத்தனை பூக்களும் காயானால் எவ்வளவு பறங்கிக்காய் கிடைக்கும். அந்தப் பொண்ணு ஏம்மா இதை நம்ம வீட்டுக்குக் கொடுக்குது?’என்று கேட்பேன்.

‘நம்ம வீட்டுக்கு மட்டுமில்ல… இன்னும் நாலஞ்சு வீட்டுக்கும் அவதான் போடறா! இது நீ நெனக்கற மாதிரி காய்க்கற பூ இல்ல. பொய்ப்பூ… பறிக்காம விட்டாலும் வீணாக் காய்ஞ்சிடும்.’ என்பார் அம்மா. அதற்கு மேல் அவர் விளக்கியதில்லை.

என்னுடைய நெருங்கிய உறவுப்பெண் ஒருவர் ‘ருது’ ஆகாத காரணத்தால், கல்யாணம் காட்சி என்று எந்தச் சுப நிகழ்ச்சியுமின்றி, அண்ணன், அக்கா குடும்பத்தாரின் அரவணைப்புமின்றி, இறுதியில் தனியாகவே வாழ்ந்து இறந்து போனார்கள்.

இப்பொழுது இதை எழுதும்போதும் என் கண்களில் நீர் கோர்க்கின்றன. யார் செய்த பாவமோ?

“பூக்களிலே நானுமொரு பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்!

பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன் பொன்விரல்கள் தீண்டலையே!

பொன் விரல்கள் தீண்டலையே பூமாலை ஆகலையே!

பூமாலை ஆகலையே நின் பொற்கழுத்து சேரலையே!”

என்று எங்கோ படித்தது, இப்பொழுதும் மனதில் ஊஞ்சல் போட்டு ஆடுகிறது!

அவசரமாகச் சாப்பிட்டு விட்டுப் பள்ளிக்குப் புறப்படுவோம். பெரும்பாலும் பழைய சோறு. தொட்டுக் கொள்ள மட்டும் தேங்காய்த் துவையல், கோசுமல்லி*, சுண்டக் கறி, பொறித்த வற்றல் என்று மெனு மாறிக்கொண்டே இருக்கும்.

விடுமுறை தினம் என்றால் ப்ரோக்ராம் அப்படியே மாறி விடும்.

பிடாரி குளத்தில் நீச்சல், தென்னை மட்டை பேட்டால் கிரிக்கட், முழுத் தெருவில் ‘ஹைட் அன்ட் சீக்’ அதாங்க, ஒளிஞ்சு கண்டு பிடிக்கறது, அப்புறம் வயல்களுக்குப் போய் பயிர்களுக்குள் இறங்கி, வரும் மாட்டுப் பொங்கலுக்கு மாட்டின் கொம்பில் சுற்ற குஞ்சம் செய்வதற்காக வெள்ளியாக மின்னும் நெற்பதர்களை தாளுடன் சேகரிப்பது என்று பொறுப்புக்கள் நீண்டு கொண்டே போகும்.

Representational Image

மார்கழி மாதம் முழுவதும் இரவில் சேகண்டி அடித்தபடி ஊரைச் சுற்றி வரும் ஒருவர், ஓரிரு மாதங்கள் மட்டுமே தன் குடும்பத்துடன் வந்து மேலத்தெருவில் வீரப்பண்ணன் வீட்டில் தங்குவார். இரவு இரண்டு மணிக்கு ஆரம்பித்து ஏதேதோ பாடல்களைப் பாடியபடி எங்கள் கீழப்பெருமழையின் முக்கியத் தெருக்களுக்குச் செல்வதுடன், பக்கத்திலுள்ள மேலப் பெருமழைக்கும் சென்று வருவார். மார்கழி மாதம் முழுவதும், அந்தக் காலத்தில் தொடர்ந்து சில வருடங்கள் இந்தச் சேவையை அவர் செய்து வந்தது எனக்கு இப்பொழுதும் நன்றாக ஞாபகத்தில் உள்ளது.

மாலையாகி விட்டால் மறுபடியும் சிவன் கோயிலடி அதகளப்படும்.

நகரங்கள் மார்கழி மாதம் முழுவதும் இசை விழாக்களால் அல்லோல கல்லோலப்படும்.

திருவையாறு இசை விழா உலகறிந்த ஒன்று. வெளி நாட்டவர்கள் நம் நாட்டில் சுற்றுலா மேற்கொள்ள,குறிப்பாகத் தமிழகத்தைச் சுற்றிப்பார்க்க இந்த மார்கழி மாதமே உகந்ததென்று கூறப்படுகிறது.இதமான சீதோஷ்ணமே இதற்குக் காரணம்.

Representational Image

அந்த அழகு மார்கழிதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது!

அமைதியாக உட்கார்ந்து யோசித்தால் எத்தனையோ அற்புத நிகழ்வுகள் மனதை நிறைக்கின்றன. மனது சிறுபிள்ளையாகிச் சுறுசுறுப்பாகிறது.

ஓடியாடி ஊரைச் சுற்றிய நாட்கள் உதிரத்தைச் சூடாக்குகின்றன. இன்னொரு முறை அந்த நாட்கள் வராதா என்று ஏங்குகிறது மனசு!

60 ஸ் கிட்சுகளே! ஒன்றும் முடிந்து போய்விடவில்லை.

மெல்ல எழுங்கள்!

மெதுவாய் நடங்கள்!

கள்ள மனதைக்

கழற்றி எறிங்கள்!

எல்லாம் இங்கு

இறைவன் விருப்பில்

நடந்ததே என்று

நம்பிக் கடங்கள்!

நடந்ததும் நடப்பதும்

நாளை வருவதும்…

நல்லதற் கென்றே

நம்பி இருங்கள்!

மார்கழியை மகிழ்வுடன் அனுபவியுங்கள்!

பொங்கல் வருகிறது…தையும் பிறக்கிறது!

தை பிறந்தால் வழி பிறக்குந்தானே!

-அனைத்துக்கும்!

பி.கு:*கோசுமல்லி செய்ய விருப்பமுள்ளவர்கள் கமெண்டில் தெரிவித்தால், விபரம் தருகிறேன்.

-ரெ.ஆத்மநாதன்,

கூடுவாஞ்சேரி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.