திமு.க அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தேர்தல் வாக்குறுதியில்  தெரிவித்தவாறு ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்புக்குப் பின்னர் ஆவின் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்தவாறு  இருக்கிறது. அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் ஆவினில்  உற்பத்தி செய்யப்படும் இனிப்பு பொருள்களின் விலையை ரூ.20-லிருந்து ரூ.80 வரை உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் பால் கொள்முதல் விலையை ரூ.3 அதிகரித்துவிட்டு, ஆரஞ்சு நிற பாலுக்கான விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது. 

ஆவின் பால்

அதாவது, ஆவின் ‘பிரீமியம்’ (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.60-ஆக (ரூ.12 உயர்வு) உயர்த்தப்பட்டது. கொள்முதல்  விலையை ரூ.3 மட்டும் உயர்த்திவிட்டு ஆரஞ்சு பால் பாக்கெட்  விற்பனை விலையை ரூ.12 வரையில் உயர்த்தியதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த விலை உயர்வால் ரூ.10-லிருந்த டீ, காபியின் விலை ரூ.12 -ஆக அதிகரித்தது. ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிராக பா.ஜ.க  உள்ளிட்ட ஏதிர்க்கட்சிகள் தமிழ்நாடு முழுவதும்  ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

அமைச்சர் நாசர்

அந்த சமயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பால் வளத்துறை அமைச்சர் நாசரோ, “கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தியிருக்கிறோம். ஆவின் முழுக்க முழுக்க மக்களுக்கானது. கொரோனா நேரத்தில்கூட விவசாயிகளிடமிருந்து தனியார் ரூ.15, ரூ.18-க்கு கொள்முதல் செய்தபோதுகூட நாங்கள் ரூ.30-க்கு கொள்முதல் செய்தோம். இனிமேல் விலையேற்றம் இருக்காது” என்றார். இந்த நிலையில், ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.50 உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன்படி 1 லிட்டர் பிரீமியம் நெய் ரூ.630-லிருந்து ரூ.680 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.340-லிருந்து ரூ.365 ஆகவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. 

விலை ஏற்றம்

கடந்த 9 மாதங்களில் 3-வது முறையாக ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ஒரு லிட்டர் நெய் ரூ.515-லிருந்து ரூ.535 ஆகவும், ஜூலை மாதம் ரூ.535-லிருந்து ரூ.580 ஆகவும் உயர்த்தப்பட்ட நிலையில்… தற்போதும் உயர்த்தப்பட்டுள்ளது. நெய்யை தொடர்ந்து வெண்னை விலையும் அதிகரித்திருக்கிறது. அதன்படி, சமையல் வெண்ணெய் 500 கிராம் விற்பனை விலை ரூ.250-லிருந்து ரூ.260 ஆகவும், உப்பு வெண்ணெய் 500 கிராம் ரூ.255-லிருந்து ரூ.265 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பொருள்களின் தொடர்ச்சியான இந்த விலை உயர்வு சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.