இன்று நள்ளிரவில் (டிச.14 00.30) நடைபெற்ற பிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது அர்ஜென்டினா.

குரோஷியா அணிக்கு எதிரான ஃபிஃபா உலகக் கோப்பையின் அரையிறுதியில், குரோஷியாவை தோற்கடிப்பதற்காக ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் லியோனல் மெஸ்ஸி இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் 10 வருடத்திற்கு முன் உலககோப்பை கனவுகளோடு இருந்த ஒரு 12 வயது சிறுவன், நட்சத்திரவீரர் மெஸ்ஸியிடம் ஒரு புகைப்படம் வேண்டும் என எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

பல சுவாரசியமான போட்டிகளை கடந்து பரபரப்பான இறுதிகட்ட போட்டியை அடைந்துள்ளது 2022ஆம் ஆண்டின் பிஃபா உலகக்கோப்பைத்தொடர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா மற்றும் மொராக்கோ ஆகிய 4 அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இந்நிலையில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதிப்போட்டி இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் தொடங்கியது.

Lionel Messi: Argentina captain

தொடங்கப்பட்ட முதல் அரையிறுதி ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைக்க, அதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜென்டினா அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி துல்லியமாக முதல் கோல் அடித்தார். பின்னர் அர்ஜெண்டினா ரசிகர்களின் குதூகலத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர் அர்ஜென்டினா அணி வீரர்கள்.

2 கோல்கள் அடித்து மிரட்டிய ஜூலியன் அல்வாரெஸ்!

image

விறுவிறுப்பாக சென்ற போட்டியின் 39ஆவது நிமிடத்தில் மிடில் அட்டாக்கிங் பொசிசனில் இருந்து பந்தை விரட்டிக்கொண்டு சென்ற ஜூலியன் அல்வாரெஸ், பல எதிர்ப்புகளையும் மீறி லாவகமாக எடுத்துசென்று கோல்கீப்பரை தாண்டி ஒரு அபாரமான கோலை பதிவு செய்தார். நீண்ட தூரத்தில் இருந்து அவர் பந்தை எடுத்து வந்து கோல்போஸ்ட்டில் அடித்த விதம் அனைவரது ஆரவாரத்தையும் அள்ளிச்சென்றதோடு, பார்க்கும் ரசிகர்களுக்கும் அற்புதமான காட்சியாக இருந்தது.

image

பின்னர் அர்ஜென்டினா கார்னர் கிக் ஹெட் சாட், மெஸ்ஸியின் ஃபார்வர்டு கிக் என கோல்களை மிஸ் செய்ய, போட்டியின் 69ஆவது நிமிடத்தில் விங்கர் பொசிசனில் இருந்து பந்தை எடுத்துகொண்டு விரட்டிய மெஸ்ஸியை பார்த்து எதிரணி வீரர்கள் சற்று கலக்கம் அடைந்தனர் என்றே சொல்லமுடியும், எவ்வளவு எதிர்ப்பார்ட்டங்களை கொடுத்தாலும் சமாளித்து பார்வர்டு வரை எடுத்து வந்த மெஸ்ஸி அதை ஜூலியன் அல்வாரெஸ்-டம் தட்டிவிட, அதை சரியாக பயன்படுத்தி கொண்ட அல்வாரெஸ் அர்ஜென்டினா அணிக்கு 3ஆவது கோலை அடித்து அசத்தினார். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜூலியன் அல்வாரெஸ் போட்டியின் நாயகனாகவே மாறினார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியிடம் புகைப்படம் எடுத்துக்கொண்ட சிறுவன்!

image

10 ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜெண்டினா அணியின் கோப்பை கனவுகளோடு தனது சிறு வயதை கடத்தி வந்த சிறுவன், நட்சத்திர வீரர் மெஸ்ஸியிடம் ஒரு போட்டோ ப்ளீஸ் என புகைப்படும் எடுத்துக்கொண்டு, தற்போது அவருடனே சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

ஆம் 10 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியிடம் புகைப்படம் எடுத்துகொண்ட அந்த சிறுவன் ஜூலியன் அல்வாரெஸ். அப்போது அவருக்கு 12 வயது தான் இருக்கும். தற்போது 3-0 என அரையிறுதியில் வென்றதற்கு பிறகு ஜூலியன் அல்வாரெஸ்-ன் 10 வருடங்களுக்கு முன்பு 12 வயதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.


நாளை நள்ளிரவு பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையேயான 2ஆவது அரையிறுதிப்போட்டியில் வெல்லும் அணி ஞாயிற்று கிழமை அர்ஜெண்டினாவை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும்.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.