கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் 13 ஜாம்பி வைரஸ்களை ரஷ்யாவிலுள்ள ஒரு சைபீரிய உறைபனி ஏரியிலிருந்து கண்றிந்தனர். bioRxiv இதழில் இந்த வைரஸ்கள் குறித்து வெளியான தகவல்கள் மக்களிடையே பெருந்தொற்று குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம், அந்த வைரஸ்களில் ஒன்றான Pandoravirus yedoma, 48,500 வருடங்கள் பழமையானது. மற்ற வைரஸ்களும், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் புத்துயிர் கொடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியதில், இவை பொதுவாக ஒற்றைசெல் அமீபா நுண்ணியிரிகளை பாதிக்கும் திறன் கொண்டவை எனவும், மனிதர்களை பாதிக்கும் திறன் குறைவு எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜாம்பி வைரஸ் என்றால் என்ன?

ஜாம்பி வைரஸ் என்றவுடன் ஹாரர் சினிமாக்களில் வருவதுபோல் ஜாம்பியாக மாறக்கூடியது என்று அர்த்தம் இல்லை. நீண்டகாலமாக பனியில் உறைந்து செயலற்ற நிலையில் உள்ளதால் இதனை ’ஜாம்பி வைரஸ்’ என்று அழைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இருப்பினும், சினிமா ஜாம்பிக்களைப் போன்று இவை இறந்துபோகவில்லை என்பதுதான் அபாயத்தை ஏற்படுத்துகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இவை பனியில் புதைந்திருந்தும், இன்றுவரை இறக்கவில்லை, அவற்றை மீண்டும் புத்துயிர் பெற செய்யமுடியும். மேலும், சில் சூழ்நிலைகளில் அவற்றை சுறுசுறுப்பாக இயங்கச்செய்ய முடியும். குறிப்பாக இவை மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகள் குறைவு என்றாலும், தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகள் உள்ளது என்பதுதான் நம்மை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.

image

ஜாம்பி வைரஸ் புத்துயிர் பெற்றது ஏன்?

இத்தனை ஆபத்து மிகுந்த வைரஸ்களுக்கு புத்துயிர் கொடுத்தது ஏன்? என்ற கேள்வி நமக்கு எழுகிறதல்லவா? இதற்கு ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்களென்றால், ”இந்த வைரஸால் ஆபத்து எந்த அளவுக்கு என்பதை சுட்டிக்காட்டவே ஆய்வு விரிவுபடுத்தப்பட்டதாக” கூறுகின்றனர். மேலும், புவி வெப்பமயமாதல் காரணமாக, இந்த வைரஸ்கள் மீண்டும் புத்துயிர் பெற்று, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்திக்கூறுகள் இருப்பதாகவும் கூறியுள்ளனர். தற்போது வைரஸ்கள் உறைபனிக்குள் சிக்கியுள்ளது. புவி வெப்பமயமாதலால் பனி உருகும்போது, வைரஸ்களை வளிமண்டலத்தில் வெளியிடுகிறது. அதாவது, உறைபனிக்குள் அசைவற்று இருக்கும் வைரஸுக்கு உயிர்பெறும் சூழல் உருவாவதால் அவை புத்துயிர் பெற்று கொடிய வைரஸாக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். இது பொதுநலனை அச்சறுத்துவதாக இருப்பதாக, முன்னணி ஆராய்ச்சியாளர் ஜீன்-மேரி அலெம்பிக், சயின்ஸ் அலர்ட் இதழில் எழுதியுள்ளார்.

image

இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்குமா?

அனைத்து ஜாம்பி வைரஸ்களும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்குமா என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை என்றாலும், அவற்றில் சில தீங்கு விளைவிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருப்பதாக எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஏற்கெனவே கூறியதுபோல, பொதுவாக பனிக்கட்டிகள் உருகுவது மனித உயிர்களை பறிக்கும். புவி வெப்பமயமாதலால் பனிகட்டிகள் உருகும்போது கடல் நீர் மட்டத்தின் அளவு அதிகரிக்கும். இது நிலப்பரப்பை குறைத்து மனிதர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். 2016ஆம் ஆண்டு சைபீரியாவில் பரவிய ஆந்த்ராக்ஸ் நோய் காரணமாக உயிரிழப்பு மற்றும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆந்த்ராக்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து, உறைபனிக்குள் புதைந்துகிடந்த ஒரு கலைமானின் சடலமானது, வெப்ப அலையால் பனிப்பாறை உருகியதில் வெளிப்பட்டதே இந்த தொற்று வெடிப்பு காரணம் என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். தற்போது ஜாம்பி வைரஸ்களின் வெளிப்பாடும் இதுபோன்ற பெருந்தொற்றுக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சம் ஆராய்ச்சியாளர்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.

image

ஆபத்து உள்ளதா?

ஜாம்பி வைரஸ்கள் பெருந்தொற்றை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை என்றாலும், வெப்பம், ஆக்சிஜன் மற்றும் புற ஊதாக்கதிர்களால் இந்த வைரஸ்கள் தீங்கு விளைவிக்கக்கூடியவையாக மாறலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஏற்கெனவே பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால், ஆர்க்டிக் பனிப்பாறைகள் உருகிக்கொண்டிருக்கின்றன. வணிகம் மற்றும் தொழில்துறைக்கு அந்த இடங்களை மக்கள் ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கின்றனர். இது ஆண்டாண்டு காலமாக உறைந்து கிடக்கும் வைரஸ்கள் புத்துயிர் பெற்று தொற்று பரவும் ஆபத்தை அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர்.

அதேசமயம், ஆய்வுக்காக புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ள வைரஸ்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த வைரஸானது அமீபா நுண்ணுயிரிகளுக்கே அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

image

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

ஜாம்பி வைரஸானது தீங்கு விளைவிக்கக்கூடியதாக மாறி, பெருந்தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் வாய்ப்புகள் குறைவு என்றாலும், எதிர்காலத்தில் ஒருவேளை இது பெருந்தொற்றாக உருவெடுத்தால் அதனிடமிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது அவசியம். ஏற்கனவே கொரோனா தொற்றானது, எப்படி முன்னெச்சரிக்கையாக இருப்பது, தொற்றிலிருந்து குணமடைவது எப்படி என நமக்கு நிறைய கற்றுக்கொடுத்துவிட்டது. எந்த தொற்று எந்த நேரத்தில் உருவெடுத்து, நமது உயிருக்கு ஊறு விளைவிக்கும் என்பதை கணிக்கமுடியாத காலகட்டத்தில் இருப்பதால், எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்திருக்க வேண்டும். சுகாதாரமாக இருக்கவேண்டும். தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டு உடல்நிலையை பேணிகாக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.