நடனமாடும் போது, நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, சிரித்து பேசிக் கொண்டிருந்த போது என எதிர்பாராத நேரத்தில் திடீரென எவரேனும் மயங்கி சுருண்டு விழுந்து மாரடைப்பால் இறந்துப்போவது தொடர்பான பல வீடியோக்களை நாள்தோறும் கடந்துக் கொண்டே வருகிறோம். இது இளைஞர்கள், முதியவர்கள் என எந்த வயது பாகுபாடும் இல்லாமல் நடந்து வருகிறது.

அந்த வகையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது திருமணத்தின் போது மாலை மாற்றும் சமயத்தில் சரிந்து விழுந்து இறந்திருக்கிறார். அவரது மறைவுக்கு மாரடைப்பு காரணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் லக்னோ அருகே உள்ள மலிஹாபாத்தில் உள்ள பாத்வனா கிராமத்தில் நேற்று முன் தினம் (டிச.,02) நடந்திருக்கிறது. ராஜ்பால் என்பவரின் மகள் ஷிவாங்கி ஷர்மா என்ற 21 வயதுடைய அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருந்திருக்கிறது.

இதற்கான பார்ட்டி நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு திருமணத்துக்கான வரமாலை சடங்குக்காக மணமேடைக்கு ஷிவாங்கி சென்றிருக்கிறார். சடங்கு முடிந்த பிறகு மணமக்கள் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்கள். அப்போது திடீரென மணப்பெண் ஷிவாங்கி மயங்கி விழவே திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றிருக்கிறார்கள். இதனையடுத்து ஷிவாங்கியை உடனடியாக அருகே இருந்த சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் இறந்திருக்கிறார். மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது அவர் திடீர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.

image

இறந்த ஷிவாங்கி கடந்த 15-20 நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார். காய்ச்சல் இருந்ததோடு அவருடைய ரத்த அழுத்தமும் குறைவாக இருந்திருக்கிறது. இருப்பினும் ஒரு வாரத்தில் குணமடைந்திருக்கிறார். இந்த நிலையில், திருமணம் நெருங்கும் வேளையில் மீண்டும் ஷிவாங்கியின் ரத்தஅழுத்தம் குறைந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில்தான் திருமணத்தின் போது அந்த பெண் இறந்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீசிடம் தெரிவிக்காமல் நேற்று (டிச.,03) ஷிவாங்கியின் இறுதிச் சடங்குகளை குடும்பத்தினர் முடித்திருக்கிறார். ஆனால் சமூக வலைதளங்கள் மூலம் மலிஹாபாத் காவல்துறையினருக்கு இந்த விவகாரம் தெரியவரவே சம்பந்தப்பட்ட கிராமத்தில் விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான் நடந்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது. தீவிரமான உடற்பயிற்சி செய்பவர் முதல் பலரும் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வரும் வேளையில், உடல்நலனில் ஏதேனும் சிறிய மாற்றங்கள் இருந்தாலும் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சையை பெற்றுக்கொள்வதே வருமுன் காத்தலுக்கு சான்றாக இருக்கும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.