விளையாட்டின் மீது ஆர்வம் இல்லாதவர்களை பார்ப்பதே அரிது. ஒவ்வொருவரும் கால்பந்து, கிரிக்கெட், கூடைபந்து, வாலிபால், கபடி என ஏதாவது ஒரு விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். ஆனால் அவர்கள் பார்க்கும் அந்த விளையாட்டைப் பற்றிய புரிதல் இருக்குமா என்பது கேள்விக்குறியே?

ஒரு விளையாட்டின் விதிகளை தெரிந்து கொண்டு அந்த விளையாட்டை பார்க்கும் போது அந்த விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த விளையாட்டின் விதிகளை விரிவாக பார்க்கலாம்…

image

கால்பந்தில் இத்தனை வகைகளா!

உலகம் முழுவதும் விளையாடும் விளையாட்டு மட்டுமல்ல உலகம் முழுவதம் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரே விளையாட்டும் கால்பந்து விளையாட்டு என்றால் அது மிகையில்லை. பந்தை கால்களால் உதைத்து எதிர் அணியின் கோல் கம்பத்தின் உள்ளே பந்தை அடிப்பதால் இந்த விளையாட்டு கால்பந்து விளையாட்டு என்றழைக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் மூவர், ஐவர், ஏழுவர், ஒன்பது பேர், மற்றும் 11 பேர் விளையாடும் கால்பந்து போட்டிகள் நடந்தாலும், ஐவர் மற்றும் 11 பேர் விளையாடும் கால்பந்து போட்டிகளை மட்டுமே சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) அங்கீகரித்துள்ளது. அதேபோல் சர்வதேச அளவில் 11 பேர் விளையாடும் கால்பந்து போட்டிகளே அதிகம் நடத்தப்படுகிறது.

image

களத்திற்கு உள்ளே, வெளியே எத்தனை வீரர்கள்?

ஒரு திசையில் இருந்து மறு திசைக்கு பந்தை கடத்திச் செல்ல, அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஒருவரை ஒருவர் முட்டி மோதி ஆக்ரோஷத்துடன் விளையாடும் போது அதிக காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இரு அணி வீரர்களையும் கட்டுப்படுத்த கால்பந்து விதிகள் கடுயாக உருவாக்கப்பட்டு கடைபிடிக்கப் படுகின்றன.

சர்வதேச அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் ஒரு அணியில் 3 கோல் கீப்பர் உட்பட மொத்தம் 26 பேர் இடம்பெறுவர். அவர்களின் 11 பேர் களத்தில் விளையாடுவர். இதில், மாற்று ஆட்டக்காரர்களாக 5 பேரை களமிறக்க வாய்ப்புண்டு. இதுதான் ஒரு டீம்.

image

கோல் கீப்பர்!

இந்த விளையாட்டில் முக்கியமானவர் கோல் கீப்பர். அதாவது எதிர் அணியினர் அடிக்கும் பந்தை கோலாக விடாமல் தடுப்பவர். இவர் மட்டுமே பந்தை கைகளால் அதுவும் கோல் ஏரியாவுக்கு உள்ளே மட்டும் தொட முடியும். மற்றவர்கள் கைகளால் தொட விதியில் இடமில்லை. அவ்வாறு மீறி தொட்டல் ஆட்டம் நிறுத்தப்பட்டு எதிரணிக்கு பந்தை அடிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும்.

பின்கள, நடுகள, முன்கள வீரர்கள்!

ஒவ்வொரு அணியிலும் கோல் கீப்பர் தவிர பின்கள வீரர்கள், நடுகள வீரர்கள், மற்றும் முன்கள வீரர்கள் என விளையாடுவார்கள். இவர்களில் யார் வேண்டுமானாலும் எதிர் அணி திசையில் கோல் அடிக்கலாம்.

சேம்சைடு கோல்!

ஒரு அணியின் வீரர் தாங்கள் விளையாடும் திசையிலேயே கோல் அடித்தால் அது சேம்சைடு கோல் என அழைக்கப்படும். அப்படி அடிக்கப்படும் கோலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

image

நடுவர்கள்!

சர்வதேச அளவில் 45, 45 நிமிடங்கள் இரண்டு பாதியாக கால்பந்து போட்டி நடைபெறும். கால்பந்து போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 11 பேர் இடம்பெறுவர், இவர்களை கட்டுப்படுத்தி கண்காணிக்க களத்தில் ஒரு நடுவர் இருப்பார். இவருக்கு மட்டுமே போட்டியின் அனைத்து முடிவுகளை எடுக்கும் உரிமை உள்ளது. இவர் தவிர இரண்டு நடுவர்கள் களத்தின் வெளிப்பகுதியில் செயல்படுவர். இவர்களை தவிர வெளியே இரண்டு துணை நடுவர்கள் செயல்படுவர்.

கூடுதல் நேரம்

ஆட்டம் தொடங்கியது முதல் ஆட்டம் முடியும் வரை அதற்கான நேரம் சரியாக ஒதுக்கப்படும். அதாவது ஒருபாதி 45 நிமிடம் என்றால், வீரருக்கு அடிபடும் போது ஏற்படும் நேர விரையம், மாற்று ஆட்டக்காரர்களை அனுப்பும் போது ஏற்படும் நேர விரையம் அனைத்தையும் கணக்கிட்டு கூடுதல் நேரம் அளிக்கப்படும். உதாரணத்துக்கு 45105 என்பன போன்று கூடுதலான நேரம் வழங்கப்படும்.

இனி களத்தில் விளையாடும் போது ஒரு வீரர் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது. மஞ்சள் அட்டை, சிவப்பு அட்டை எப்போது காட்டப்படும் என்பதை நாளை பார்க்கலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.