கிட்டத்தட்ட தங்களது கடைசி கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்று விளையாடவிருக்கின்றனர், இரண்டு தற்கால கால்பந்து ஜாம்பவன்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டினோ ரொனால்டோ இருவரும். இந்நிலையில் லியோனல் மெஸ்ஸி குறித்து ஒரு சுவாரசியமான கருத்தை தெரிவித்துள்ளார் ரொனால்டோ.

தற்கால கால்பந்து ஜாம்பவான்களாக விளங்கும் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வருகின்றனர். என்ன தான் கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்களாக இருந்தாலும் இன்னும் இருவரும் உலகக்கோப்பைக்கான வெற்றி அணியில் இருந்தது இல்லை என்பது சோகத்திற்குரிய ஒரு விசயமாகவே இருந்து வருகிறது.

உலகக்கோப்பையில் ரொனால்டோ சாதனை

image

போர்ச்சுக்கல் அணியின் ஜாம்பவான் பிளேயரான ரொனால்டோ, உலகக்கோப்பை தொடர்களில் 11 போட்டிகளில் 7 கோல்களை அடித்துள்ளார். நாக் அவுட் போட்டிகளில் ஒருமுறை கூட கோல் அடித்ததில்லை என்ற மோசமான ரெக்கார்டை இந்த உலகக்கோப்பை தொடரில் உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா காலத்திற்க்குமான ஜாம்பவான் வீரராக பார்க்கப்படும் இவர், உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்ததே இல்லை என்பது வேதனையான விசயமாகவே இருக்கிறது.

உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் ரெக்கார்டு

image

அதேபோல் அர்ஜென்டினா அணியின் ஜாம்பவான் மற்றும் நட்சத்திர வீரரான மெஸ்ஸியும், உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்ததில்லை என்ற மோசமான ரெக்கார்டை உடைக்கும் முனைப்பிலும், முதல் முறையாக உலகக்கோப்பையை தன் அணியை எடுத்துச் செல்லும் முனைப்பிலும் களமிறங்க உள்ளார். கால்பந்து உலகக்கோப்பையில் 11 போட்டிகளில் 6 கோல்களை அடித்துள்ளார் மெஸ்ஸி. 2014ஆம் ஆண்டு இறுதி போட்டிவரை அவரது அணியை அழைத்துச்சென்றார் மெஸ்ஸி. இருப்பினும் இறுதிப்போட்டியில் அவருடைய அர்ஜென்டினா அணி ஜெர்மனியிடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. அந்த தொடரில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் மழைகளை பொழிந்த மெஸ்ஸி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

image

இரண்டு ஜாம்பவான் வீரர்களுக்கும் கடைசி உலகக்கோப்பை தொடராக பார்க்கப்படும் இந்த உலகக்கோப்பையில் சுவாரசியம் கூட்டும் வகையில், செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

image

முன்னதாக லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய விளம்பரத்தில் செஸ் விளையாடியது வைரலான நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரொனால்டோ, “ இது எனது 5ஆவது உலகக் கோப்பையாகும், அது சிறப்பாக நடக்கும் என்பதில் நான் கவனம் செலுத்தி வருகிறேன், மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். கால்பந்தும் செஸ் விளையாட்டைப்போல் தான், நாங்கள் செஸ்ஸில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் செக்மேட் செய்கிறோம். நான் இந்த உலகக்கோப்பையில் மெஸ்ஸிக்கு எதிராக செக்மேட் ஆக விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ”அப்படி மெஸ்ஸியை செக்மேட் செய்து 2022 FIFA உலகக் கோப்பையை வென்றால் நிச்சயம் அது அழகாக இருக்கும். பார்ப்போம், சதுரங்கத்தில் நடப்பது போல், கால்பந்திலும் நடப்பது மாயாஜாலமாக இருக்கும்” என்று ரொனால்டோ கூறியுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

image

இன்று நடக்கும் மூன்று போட்டிகளில் மெஸ்ஸி, ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி, கிளியான் பாப்பே என 3 சூப்பர் ஸ்டார் பிளேயர்கள் களம் காண்கின்றனர். இன்றைய மூன்று போட்டிகள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

image

முதல் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி சவுதி அரேபியாவையும், ராபர்ட் லெவன்டோவ்ஸ்கியின் போலந்து அணி மெக்சிகோவையும், கிளியான் பாப்பேவின் பிரான்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.