உலக அளவில் பெரும்பலானவர்களுக்கு பிடித்த விளையாட்டாக இருப்பது கால்பந்து தான். ஏன் ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் வென்ற நமது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூட பயிற்சி நேரங்களில் அதிக அளவிலான நேரத்தை கால்பந்து விளையாடுவதில் செலவிடுவதை நாம் பார்த்திருக்க முடியும். மற்ற விளையாட்டுப் போட்டிகளில் உள்ள வீரர்கள் முதல் மேலைநாட்டு ரசிகர்கள் வரை பலருக்கும் பிடித்தது கால்பந்து போட்டி. குறிப்பாக ஃபிஃபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை தொடர் என்பது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. இந்த கால்பந்து திருவிழா பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு மிகப்பிரம்மாண்டமாக வரும் 20-ம் தேதி முதல் கத்தாரில் நடைபெறவுள்ளது.

32 அணிகளின் முழுவிவரம்

இந்தத் தொடரில் அமெரிக்கா, ஈரான், கனடா, பிரேசில், போலந்து, மெக்சிக்கோ, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்பட 32 அணிகள் பங்குபெற உள்ளன. 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் கத்தார், ஈக்குவடார், செனகல், நெதர்லாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் அணிகளும், குரூப் சி பிரிவில் அர்ஜென்டினா, சௌதி அரேபியா, மெக்சிக்கோ, போலந்து அணிகளும், குரூப் டி பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிஷியா நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

குரூப் இ பிரிவில் ஸ்பெயின், கோஸ்டோ ரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளும், குரூப் எஃப் பிரிவில் பெல்ஜியம், கனடா, மொரொக்கோ, குரேஷியா அணிகளும், குரூப் ஜி பிரிவில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் அணிகளும், குரூப் ஹெச் பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தியா இந்தப் போட்டியில் விளையாடவில்லை.

image

பரிசுத்தொகை இத்தனை கோடி ரூபாய்களா??

இந்த கால்பந்து உலகக் கோப்பையில் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை கேட்பவர்களை தலை கிறுகிறுக்க வைத்துள்ளது என்றே கூறலாம். அதன்படி, தற்போது நடைபெற உள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் வெற்றி வாகைசூடும் அணிக்கு, இந்திய ரூபாயின் மதிப்பில் 344 கோடி ரூபாய் முதல் பரிசாக ஃபிஃபா வழங்கவுள்ளது. இறுதிப்போட்டியில் 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் 245 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. 3-வது இடம் பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் 220 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

4-வது இடம் பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் 204 கோடி ரூபாயும், அதேபோல் கால் இறுதி சுற்றுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் இந்திய மதிப்பில் தலா 138 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது. 2-வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.106 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.74 கோடியும் பரிசாக வழங்கப்படும் என ஃபிஃபா அறிவித்துள்ளது.

image

கடந்த ஆண்டு பரிசுத்தொகை

ரஷ்யாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு $38 மில்லியன் (ரூ.310.75 கோடி) பரிசு தொகையாக வழங்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு 4 மில்லியன் டாலர்கள் அதிகரிக்கப்பட்டு வெற்றிபெறும் அணிக்கு 42 மில்லியனாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் கடந்த உலகக் கோப்பையில் 2-ம் இடம் பிடித்த குரேஷியாவுக்கு $28 மில்லியன் பரிசாக வழங்கப்பட்டது.

டி20 உலகக்கோப்பை வென்ற அணிக்கு பரிசுத்தொகை

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை டி20 தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு 13 கோடி ரூபாயும், 2-ம் இடம் பிடித்த பாகிஸ்தானுக்கு 6.5 கோடியும், அரையிறுதியுடன் வெளியேறிய நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு தலா 3,25 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.