ஸ்பீல் பெர்க்கின் தி டெர்மினல் படத்துக்கு அடித்தளமாக அமைந்த ஈரானைச் சேர்ந்தவர் தன்னுடைய 77வது வயதில் காலமானார். மெஹ்ரான் கரிமி நாசேரி என்ற இந்த ஈரானியர் 18 ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் 18 ஆண்டுகள் வசித்து வந்தவர். யார் இந்த கரிமி நாசேரி? எதற்காக 18 ஆண்டுகளாக பாரிஸ் விமான நிலையத்திலேயே தங்கினார் என்பது குறித்து விரிவாக காணலாம்.

1945ம் ஆண்டு ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்ஜித் சுலைமான் என்ற இடத்தில் ஈரானிய தந்தைக்கும் பிரிட்டானிய தாய்க்கும் பிறந்தார். தன்னுடைய மேல் படிப்புக்காக 1974ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற நாசேரி அதன்பிறகு சொந்த நாட்டுக்கு திரும்பியிருக்கிறார்.

image

அங்கு, அப்போதைய ஈரானிய மன்னர் ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் பாஸ்போர்ட் உட்பட எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் நாசேரி நாடு கடத்தப்பட்டிருக்கிறார். இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளிடம் புகலிடம் கேட்டு விண்ணப்பித்திருந்த வேளையில் பெல்ஜியத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு, நாசேரிக்கு அகதிகளுக்கான அந்தஸ்தை அளித்திருக்கிறது. ஆனால் அந்த சான்றிதழ்கள் அடங்கிய சூட்கேஸ் பாரிஸ் நகரின் ரயில் நிலையத்தில் திருடப்பட்டிருக்கிறது.

இதனால் கரிமி நாசேரியிடம் எந்த ஆவணமும் இல்லாததால் பிரஞ்சு போலீஸ் அவரை கைது செய்திருக்கிறார். இருப்பினும் நாசேரியிடம் வேறு எந்த ஆவணமும் இலலாததால் நாடு கடத்தவும் முடியாமல் போயிருக்கிறது. இதனால் 1988ம் ஆண்டு பாரிஸின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்திலேயே தங்கியிருக்கிறார் நாசேரி. அங்கிருந்த போலீசாருடனும், விமான நிலைய அதிகாரிகளுடனும் நட்பாகவும் பழகியிருக்கிறார்.

image

ஆவணம் இல்லாததால் விமான நிலையத்தில் தற்காலிகமாக தங்கிய நாசேரிக்கு அதுவே வாழ்விடமாக போயிருக்கிறது. சார்லஸ் டி கோல் விமான நிலையத்தின் 2F என்ற முனையத்தில் தங்கிய அவர், அந்த இடத்திலேயெ தன்னுடைய உடைமைகளையும் வைத்திருந்திருக்கிறார். அங்கு தன்னுடைய வாழ்க்கை குறித்து எழுதிக்கொண்டும், புத்தகங்கள், செய்தித் தாள்களை படித்துக் கொண்டும் இருந்த கரிமி நாசேரி, விமான நிலைய அதிகாரிகளுக்கும் அவ்வப்போது சிறு சிறு வேலைகளை செய்து வந்திருக்கிறார்.

இதனால் அவரை சர் ஆல்ஃபிரைட் என அழைத்திருக்கிறார்கள். விமான நிலையங்களுக்கு வந்துச் செல்லும் பயணிகளிடையேவும் நாசேரி பிரபலமாகியிருக்கிறார். இப்படி இருக்கையில், அகதிக்கான ஆவணங்கள் கரிமி நாசேரிக்கு கிட்டியிருக்கிறது. ஆனால் பாதுகாப்பின்மை மற்றும் விமானத்தில் இருந்து செல்ல விரும்பாததால் ஆவணத்தில் கையெழுத்திட மறுத்து அங்கேயே தங்கியிருக்கிறார். இப்படியாக 1988ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை விமான நிலையத்தையே தன்னுடைய இருப்பிடமாக்கி இருக்கிறார்.

image

இந்த நிலையில்தான் 2006ம் ஆண்டு உடல்நலிவுற்றதால் நாசேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு பாரிஸில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அதன் பிறகு தன்னுடைய கடைசி நாட்களை 18 ஆண்டுகளாக தங்கிய விமான நிலையத்தில் கழிக்க எண்ணி அங்கு மீண்டும் வசித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமையான நவம்பர் 12ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவருடைய இறுதி காலத்தின் போது நாசேரியின் உடைமைகளில் சில ஆயிரம் யூரோக்களே இருந்தது என விமான நிலைய அதிகாரிகள் கூறியதாக பிரான்ஸ் நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மெஹ்ரான் கரிமி நாசேரியின் விமான நிலைய வாழ்க்கை குறித்துதான் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தி டெர்மினல் என்ற படத்தை டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் இயக்கியிருந்தார். இது 2004ம் ஆண்டு வெளியாகியிருந்தது. முன்னதாக 1993ம் ஆண்டு லாஸ்ட் இன் டிரான்சிட் என்ற பெயரில் நாசேரியின் கதையை மையமாக கொண்டு பிரஞ்சு திரைப்படமும் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.