அரையிறுதியில் இந்தியா வென்று, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோத வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகா்களின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தொடரில் நேற்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு அசத்தலாக முன்னேறியது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அடிலெய்டு ஓவலில் நடைபெறும் 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் இந்தியா வென்று, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோத வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகா்களின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. அதேபோல் 2011ம்  ஆண்டுக்கு பிறகு எந்தவித உலகக் கோப்பையும் கைப்பற்றாத இந்திய அணி, இந்தமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. இந்தியா – இங்கிலாந்து இரு அணிகளும் கடைசியாக கடந்த 1987இல் இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் மோதின. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதற்குப்பின் தற்போதுதான் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.

image

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  இதனால் இன்றைய ஆட்டத்திலும் அவர்களது பேட்டிங் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதே போல் கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோரும் சிறப்பான தொடக்கத்தை தரும் பட்சத்தில் இந்தியாவின் ஆட்டம் டாப் கியரில் நகரும் என்பது உறுதி. இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் விக்கெட் கீப்பராக யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தொடரின் முதல் 4 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இருந்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக்கில் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்ட இறங்கினார். அரையிறுதியில் யாருக்கு வாய்ப்பு என்பது சஸ்பென்ஸாக உள்ளது. அதேபோல் இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இதனிடையே இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதுவதை பார்க்க விரும்பவில்லை என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவை இறுதிப்போட்டிக்கு போக விடமாட்டோம் என்று சூசகமாக அவர் சவால் விடுத்துள்ளார். மேலும் ஜோஸ் பட்லர் கூறுகையில், ”இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவதை நடக்க விடாமல் செய்வதற்கு எங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்தியாவின் மகிழ்ச்சியை சிதைக்க முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார் அவர். அதேநேரம் இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் மற்றும் மார்க் வுட் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

image

இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. அடிலெய்ட் ஓவல் மைதானம் எப்போதுமே பேட்டிங்க்கு சாதகமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த மைதானத்தில் பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: அரையிறுதியில் அதிர்ச்சி கொடுத்த நியூசிலாந்து – தோல்விக்கு இந்த 5 விஷயங்கள் தான் காரணம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.