வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

வணக்கம் நண்பர்களே! இந்த முறை நம் பயணம், ஐரோப்பாவிலேயே சிறந்த ‘தீம் பார்க்’என்றழைக்கப்படுகின்ற ‘இரோப்பா பார்க்’ நோக்கித்தான்! இது ஜெர்மனியில் உள்ளது!எனவே இதனை,சுவிஸ் பயணக்கட்டுரை என்றழைப்பதை விட சுவிஸ்-ஜெர்மன் பயணக்கட்டுரை என்றழைப்பதே மிகவும் பொருத்தமாகும். ஆனாலும் ஜெர்மனியின் அந்தப் பகுதி சூரிக்கிலிருந்து ரெண்டு,ரெண்டரை மணி நேரக் கார்ப் பயணத் தூரத்தில் மட்டுமே! ஏறுங்கள் காரில்!

ஓ! ’சுவிசை விட்டு ஜெர்மனி செல்ல விசா வேண்டாமா?’என்று நீங்கள் மனதிற்குள் முணகுவது எமக்கும் கேட்கிறது. நம்மிடம் ‘செங்கன் விசா’என்றழைக்கப்படுகின்ற விசா இருப்பதால், ஐரோப்பாவின் 20 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாம் சென்று வரலாம்! அந்த நாடுகளுக்குச் செல்கையில் பாஸ்போர்ட்டை எப்பொழுதும் உடன் எடுத்துச் செல்வது நல்லது. நாமும் எடுத்துக் கொண்டோம்.

Europa-Park

நாம் செல்லும் இந்த இரோப்பா பார்க் மிகப்பெரியது என்பதாலும், ஒரு நாளில் அனைத்தையும் பார்த்து வருவது இயலாத காரியம் என்பதாலும், நாம் காலையில் ஏழு மணிக்கே புறப்பட்டு விட்டோம். சாலைகளின் நேர்த்தி, பயணத்தில் அதிகக் களைப்பு தருவதில்லை! இந்தச் சாலையில் இரண்டு,மூன்று மலைக் குகைச் சாலைகளைக் கடந்து போக வேண்டியுள்ளது.ஒரு குகைச் சாலை சுமார் 7 கி.மீ.,தூரத்திற்கு நீண்டு கிடக்கிறது.உள்ளே பகல் போல ஒளி வெள்ளம்.100 கி.மீ.,வேகத்தில் இருபுறமும் கார்கள் வேகமெடுத்துப் போகின்றன.

‘ரைன்’ நதியோரமாகச் சென்று ஜெர்மனிக்குள் நுழைகிறோம். சாலையின் இரு புறமும் உள்ள விவசாய வயல்கள், நமது தஞ்சை மாவட்டத்தை ஞாபகப்படுத்துகின்றன.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை விளை நிலங்கள்! சமீபத்தில்தான் அறுவடை முடிந்திருக்க வேண்டும். காய்ந்த தாள்கள் வானத்தைப் பார்த்தபடி நின்றன. ஒரு சில இடங்களில் இள நாற்றுக்களையும் பார்க்க முடிந்தது. உலகத்தில், பார்ப்பதற்கு ஒரே மாதிரியான ஏழு மனிதர்கள் இருப்பார்களென்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட,நமது சூப்பர் ஸ்டார் ரஜினியைப்போல, பாகிஸ்தானில் ஓய்வு பெற்ற ஒரு தாசில்தார் இருப்பதாகச் செய்திகள் வந்தன. அவர்கூடத் தனது ஒரே ஆசை,’ரஜினியை நேரில் சந்திப்பதுதான்!’ என்று கூறியதாகவும் செய்திகள் மேலும் தெரிவித்தன. அது போலவே பூவுலகில், ஏழு இடங்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்குமோ! என்ற எண்ணம் ஜெர்மனியின் விளைநிலங்களைப் பார்த்தபோது மனதில் ஓடியது!

Europa-Park

ஒன்பதரை மணியளவில் நாம் பார்க் வளாகத்தை அடைந்தோம். பார்க்கிங் லாட்டுகள் நிரம்பி வழிய, கடைசிக்கு,முன்னால் உள்ள வரிசையில் இருந்த இடத்தில் காரை நிறுத்தி விட்டு இறங்கினோம். அங்கிருந்து மெயின் என்ட்ரன்சை அடைய,பெரிய விமான நிலையங்களில் உள்ளது போன்ற பாதை உள்ளது.அதில் நடந்தும்,நடக்காது தானாகவே நகரும் தளத்தில் நின்றும்,உள்ளே சென்றோம்!நாம் ஏற்கெனவே ஆன் லைனில் புக் செய்து விட்டதால், செல்லைக்காட்டி உள்ளே சென்றோம்.விபரங்கள் மற்றும் வரைபடம் அடங்கிய கையேட்டைப் பெற்று பிரவேசித்தோம்.நம்மூர் பெரிய கோயில்களின் திரு விழாக்களின் போது கூடுகின்ற கூட்டம் போல்,மக்கள் கூட்டம் அலைமோதியது.

உள்ளே அடேங்கப்பா! எவ்வளவு ஏரியா! எத்தனையெத்தனை ரைடுகள், அப்படியே நம்மை அசத்துகிறார்கள்! வயது வித்தியாசமின்றி, ஆண், பெண் பேதமின்றி,தங்கள் வளர்ப்புப் பிராணிகளுடனும் வலம் வரும் மக்களைப் பார்க்கையில்,மனதுக்குள் ஒரு குதூகலம் தானாகவே நுழைந்து விடுகிறது. ஊர்வன,நடப்பன,பறப்பன என்று நாம் உயிரினங்களை வகைப் படுத்தியிருப்பதைப்போல,அவர்களும் ரைடுகளில் அத்தனை வகைகளை,பார்த்துப் பார்த்து படைத்திருக்கிறார்கள். நடமாட்டத்திற்காகப் போதுமான இடத்தை ஒதுக்கியிருப்பதுடன்,எந்த இடமும் வீணாகாமல் உபயோகித்திருப்பது, ஐரோப்பியர்களின் திட்டமிடலுக்குக் கிடைத்த சான்று!

சிறிய ட்ரெயினிலிருந்து மானோ ரயில்,எக்ஸ்பிரஸ் ரயில் என்று கூட்டிக் கொண்டே போகிறார்கள்.சிறிய ரயில் கீழே ஓட,மானோவும்,எக்ஸ்பிரசும் உயரமான தடங்களில் ஓடுகின்றன!மேலிருந்து பார்க்கையில் இயற்கையின் அழகு பல மடங்கு கூடிவிடுமல்லவா?மானோவும்,எக்ஸ்பிரசும் பார்க்கின் பல இடங்களுக்கும் செல்வதால்,ஆங்காங்கே நிலையங்களை அமைத்துள்ளார்கள்.அங்கே நாம் இறங்கி,அங்குள்ளவற்றைப் பார்த்து விட்டு,வாங்க வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு,அடுத்த ட்ரெயினைப் பிடிக்கலாம்.

Europa-Park

தண்ணீரை மையமாக வைத்துப் பல ரைடுகளை அமைத்திருக்கிறார்கள். இரண்டு/நான்கு பேர் அமர்ந்து,பூங்காவுக்குள்ளே சிறிய கால்வாயில் சுற்றி வரும் படகுகள்! அடுத்து,சற்றே பெரிய கால்வாயில் ஓடும் படகுகள். மற்றொன்று நான்கு பேரை ஏற்றிக்கொண்டு,உயரத்தில் ஏறி,பள்ளத்தில் அதி வேகத்தில் கீழிறங்கி,அடி வயிற்றை உருட்டச் செய்வதுடன்,

அணிந்திருக்கும் ஆடைகளைத் தொப்பலாக நனைக்கும் ஒன்று!மற்றொன்று, நீண்ட கால்வாயில் நம்மூர் பரிசல்கள் போல்,ஓடும் நீரின் வேகத்திற்கேற்ப கரைகளில் முட்டி மோதி,சுழன்று ஓடுபவை! வேறென்றோ,நீண்ட தடாகத்தில் அன்னபட்சி வடிவப் படகு நம்மை அனாயாசமாக சுமந்து செல்கிறது.ஒரு கட்டத்தில், மலைக்குகைக்குள் செல்லும் ரயில் போல், இது மலர்க் குகைக்குள் புகுந்து புறப்பட்டு வெளி வருகிறது!

உள்ளேயே தியேட்டர்களும் இருக்கின்றன.நிறையப் பேர் அமரும் வசதி இருக்கிறது. சிறுவர்கள் மற்றும் உயரம் குறைந்தவர்கள் திரையை நன்கு பார்ப்பதற்கு ஏதுவாக,பல குஷன் சீட்டுகளை ஓரங்களில் அடுக்கி வைத்துள்ளார்கள். தேவைப்படுபவர்கள் எடுத்து வந்து தங்கள் சீட்டில் பொருத்தி உயரத்தைக் கூட்டிக்கொண்டு, படத்தை நன்கு ரசிக்கிறார்கள். நம்மூர் தியேட்டர்களில் இதுவரை இந்த வசதி இருப்பதாகத் தெரியவில்லை. இதனை தியேட்டர்காரர்கள்இனியாவது அறிமுகப்படுத்தி,உயரம் குறைந்தவர்களின் மனதில் உற்சாகம் ஏற்படுத்தலாம்.

ஆங்காங்கே ‘போட்டோ ஷூட்’டுக்கென்றே மேடைகளையும்,பொம்மைகளையும் அமைத்துள்ளார்கள். புகைப்படக் கலைதான் இப்பொழுது செல் வடிவில் குழந்தைகள் கைகளுக்கும் வந்து விட்டதே!சிறு குழந்தைகள் கையில் செல்லைக் கொடுத்தாலும்,அவர்கள் அங்கே இங்கேயென்று தடவி,எதையெதையோ அழுத்தி,எப்படியோ அதனை ஆன் செய்து ஆச்சரியப்படுத்துகிறார்களே. செய்திப் பரிமாற்றத்திலும், புகைப்படக் கலையிலும் உலகம் அடைந்துள்ள வளர்ச்சி, அபரிமிதமானதல்லவா?ஆச்சரியப்பட வைப்பதல்லவா!

பல இடங்களிலும் குடி நீர் கிடைக்க ஏற்பாடுகள் உள்ளன. அதைப்போலவே கழிவறை வசதிகளும் நிறையவே உள்ளன.’அப்பாடா!’என்றமர்ந்து ஓய்வு எடுக்கவும்,சிறுவர்கள் விளையாடச் சின்னச் சின்ன பூங்காக்களும் நிறையவே உள்ளன.நாங்கள் ஒன்றரை வயதுப் பேரனுடன் சென்றதால்,பல ரைடுகளில் ‘குழந்தைகளுக்கு அனுமதி இல்லை’என்று கூறி விட்டார்கள். குழந்தைகள் நலம் பேணுவதில் மேலை நாடுகள் ரொம்பவும் கறார்!

ரெஸ்டாரெண்டுகளுக்கும் குறைவில்லை.நாம் ஆர்டர் செய்து விட்டு இருக்கையில் அமர்ந்து விட்டால்,மேலிருந்து கம்பிகள் வழியாக நம் டேபிளைத் தேடி வருகின்றன,நாம் ஆர்டர் செய்த உணவு வகைகள்!நவீன ரெஸ்டாரண்ட் அது!

Europa-Park

மிக அதிகப் பரப்பில் ‘ரோலர் கோஸ்டர்’ என்றழைக்கப்படும் விளையாட்டிற்கான கம்பித் தளத்தை அமைத்துள்ளார்கள்.அவற்றின் மீது மனிதர்களைச் சுமந்துள்ள காம்பர்ட்மெண்டுகள் மின்னல் வேகத்தில் செல்வது ஒரு திகில் என்றால்,மேலும் திகிலைக் கூட்டும் விதமாக அவை தலை கீழாகச் செல்வது!அப்படிச் செல்கையில் அதில் உள்ளவர்கள் எழுப்புவது ஆனந்த ஒலியா?அல்லது பயத்தின் வெளிப்பாடா? அல்லது இரண்டும் கலந்த கலவையா?என்பதைக் கண்டுபிடிப்பது கடினமே!எது எப்படியோ!வேகங்களால் மனிதர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது மட்டும் உண்மை என்றே தெரிகிறது.

ஏகப்பட்ட ரைடுகள் இருந்தாலும்,ஒரு நாளில் பத்துப் பதினைந்தே முடிக்க முடிகிறது.இறுதியாக நாங்கள் சென்றது ஒரு சிறு படகு ரைய்டு!தண்ணீருக்குள் அது மெல்ல செல்ல,இரு பக்கமும் அழகழகான காட்சிகளை வடிவமைத்துள்ளார்கள்.மனதைக் கவர்கின்றன அவை!

பார்க் முழுவதும் பல டன் பறங்கிப் பழங்கள் குவிக்கப்பட்டுள்ளன.’ஹாலோவின் டே’

கொண்டாட்டம் காரணமாக இருக்கலாம்.மலர்களுக்கும் குறைவில்லை.மலர்களும் பழங்களும் மனதை மயக்குபவைதானே!

இப்பொழுதெல்லாம் மொத்த ரைடுகளுக்கும் சேர்த்தே டிக்கட்டுகளை விற்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் தனியே டிக்கட் வாங்க வேண்டிய அவசியமில்லை.

குடும்பத்துடன் ஒரு முறையாவது இந்தப் பார்க்குக்குச் சென்று வருவது, ஓர் உற்சாக டானிக்காக அமையும். உள்ளேயே ரிசார்ட்டுகளும் இருப்பதால் சில நாட்கள் தங்கிக் கூட அனைத்தையும் பார்த்து அனுபவித்து வரலாம்!

Europa-Park

எல்லா இடங்களிலுமே பணியாளர்கள் கனிவுடன் நடந்து கொள்வதும், நாம் விரும்பும் ரைடுகளில் பல முறை கூடச் சென்று வர அனுமதிப்பதும் பாராட்டுக்குரியவை!

இத்துடன் இந்தத் தொடரை நிறைவு செய்கிறோம். இந்த சுவிஸ் பயணக்கட்டுரைகளில் எம்முடன் பயணித்த வாசகர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி. விமர்சித்த அனைவருக்கும் நன்றிகளும்,வாழ்த்துக்களும்!தனி மனித ஒழுக்கம் மேம்பட வேண்டுமென்பதாலேயே, சில இடங்களில் சிலவற்றை நம் நாட்டுடன் ஒப்பிட்டிருந்தேன். வல்லரசாவது ஒரு புறம் இருக்க, வாழ்வில் அமைதி வேண்டுமென்பதே அனைவரின் ஆசையாக இருக்க வேண்டும். நாட்டில் அமைதியை நிலை நாட்ட, தனி மனித ஒழுக்கமே முழுமையாக உதவும் என்பதை வாசகர்களும் ஒத்துக் கொள்வீர்களென்று நம்புகிறேன்!

இந்தப் பயணத்தை உங்களுடன் மேற்கொள்ள உதவிய ‘மை விகடனை’ எவ்வளவு பாராட்டினாலும் போதாது!எனது அனுபவங்களை வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எனது கடமை என்று உள்மனது உரக்கக் கூவியபோது,அதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தது மை விகடனே!மனம் நிறைந்த நன்றியை மை விகடன் டீமிலுள்ள அனைவருக்கும் கூறி

இதனை நிறைவு செய்வோம்!

மீண்டும் வெவ்வேறு முயற்சிகளில் சந்திப்போம்!

-ரெ.ஆத்மநாதன்,

காட்டிகன்,சுவிட்சர்லாந்து

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.