எப்போதும் படிக்க மட்டுமேச் சொல்லி விளையாட நேரம் கொடுக்காததால் கடும் அதிருப்தியடைந்த பள்ளிச் சிறுமி தனது தந்தையிடம் மன்றாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பலரது பள்ளிகால நினைவலைகளையும் தூண்டியிருக்கிறது.

சீனாவின் தியான்ஜின் பகுதியைச் சேர்ந்த தொடக்கப்பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் தனக்கு படிப்பை தவிர விளையாடவும் நேரம் கொடுங்கள் என கதறி அழுது கெஞ்சும் வீடியோவை அச்சிறுமியின் தந்தை Douyin தளத்தில் தன்னுடைய பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார்.

பல லட்சக்கணக்கான பார்வையாளர்களால் ஈர்க்கப்பட்ட அந்த வீடியோவில், அந்த சிறுமி தனது தந்தையிடம் அழுதபடியே சண்டையிட்டு மன்றாடும் படி பேசியிருக்கிறார். அதில், “என் கேள்விக்கு முதலில் பதில் சொல்ல முடியுமா? அது ஓகேவா? ஒரே ஒரு கேள்விதான் கேட்பேன். நான் உங்கள மோசமாகவா நடத்துறேன்? இல்லை நான் எதும் தப்பு பண்றேனா?

அது என்னவா இருந்தாலும் சொல்லுங்க. அதை மாத்திக்கிறேன். ஆனால் எனக்கு என்னோட நேரத்த கொடுங்க. எனக்குனு எந்த
சுதந்திரமும் இருக்கல. எப்போ பாரு படிக்க மட்டுமே முடியாது. படிக்க சொல்ற அதே நேரத்துல நான் ஓய்வும் எடுக்கனும்ல. அது உங்களுக்கு புரியுதா?


என் வீட்டுப்பாடம் எல்லாம் முடிச்சுட்டேன். அப்படி இருக்கப்போ நான் ஏன் விளையாட கூடாது? அதுல என்ன உங்களுக்கு பிரச்னை?” என அந்த சிறுமி கேட்க அதற்கு அவரது தந்தை, “அதுல எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ரொம்ப நேரம் விளையாட கூடாது.” என சொல்கிறார்.

அதற்கு, “தினமும் இரவு 9 மணிக்கெல்லாம் தூங்க போகிறேன். நான் என்ன நடு ராத்திரிலயா விளையாட போறேன்?” என சிறுமி கேட்க, “இப்போ நல்லா படிச்சாதான் எதிர்காலத்தில நல்ல பொண்ணா இருப்ப” என அந்த தந்தை சொல்ல, “எதிர்காலத்துல என்ன, எப்போவுமே நான் நல்ல பொண்ணுதான்” என சிறுமி கூற, “இப்படியே இருந்தால் நல்லதுதான். உன் கிட்ட இருந்து பெருசா எதுவும் எதிர்பாக்கல.” என தந்தையும் கூறியிருக்கிறார்.

இதை தொடர்ந்து, “நிறைய பண்ணனும்னு என்கிட்ட எதிர்பாக்காதீங்க. ஏன்னா நீங்க சொல்றா மாதிரி இருக்கனும்னா ரோபோட்டால் கூட செய்ய முடியாது. எனக்கு 8 கைகளே இருந்தாலும் என்னால செய்ய முடியாது. ஒன்னு மட்டும் தெளிவா சொல்லிக்கிறேன். தயவுசெஞ்சு எங்க குழந்தை பருவத்த பாதுகாத்து வைங்க.” என அந்த சிறிமி கெஞ்ச, “கண்டிப்பா செய்வேன்” என அந்த தந்தையும் வாக்கு கொடுக்கிறார்.

இந்த வீடியோதான் தற்போது எல்லா சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பலரது கமெண்ட்ஸ்களையும் பெற்று வருகிறது. ஆகவே வீடியோவில் சிறுமி கூறியது போல குழந்தைகளை எல்லா நேரமும் படிக்க மட்டுமே வைக்காமல் அவர்களது மூளையை சுருசுருப்பாக வைத்துக் கொள்ள அண்டைவீட்டு குழைந்தகளோடு அளவளாவ விட வேண்டும் எனவும், அப்போதுதான் பட்டறிவோடு பகுத்தறிவும் பெறுவார்கள் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.