வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

சைனா மொபைல் போல கலர் கலராக மின்னிக் கொண்டிருந்தது அந்தக் கட்டிடம். அந்தக் கட்டிட முகப்பில் ஒருபக்கம் ஆர்வமாக வாங்க வாங்க என சிலர் வரவேற்றுக் கொண்டிருக்க… இன்னொரு பக்கம் வெளியே செல்லும் அனைவரின் முகங்களில் புன்னகையும், கைகளிலும் இனிப்பும் காரமும் கொண்ட ஒரு துணிப்பையும் இருந்தது. அந்தப் பையில் பெயர் அச்சிடப்பட்டிருந்து அந்த பெயருக்கு பின்னால் எம்.பி.பி.எஸ். எப்.ஜி.ஓ என அவரின் மருத்துவத் தகுதியும் குறிப்பிடப் பட்டிருந்தது. அனைத்து வசதிகளுடன் 24/7 என்ற அளவில் செயல்படும் மகளிருக்கான சிறப்பு மருத்துவமனை என்ற வாசகம் ஹைலைட் செய்யப்பட்டிருந்தது.

நோயாளிகளை விட மருத்துவமனைகள் தான் அதிகமாக உள்ளது என நினைத்துக் கொண்டே நகர முற்படுகையில் அந்தக் கட்டிட்டத்தின் உள்ளே இருந்து என்னை உற்று கவனித்த படியே வெளியே வந்தார் அவர். எங்கேயோ பார்த்தது போல உள்ளதே என யோசிக்கும் நேரத்தில் “டேய் கார்த்திக் எப்படி இருக்க?” என கை அசைத்தவாறு என்னை நோக்கி உற்சாகமாக வந்தார். “ அட நம்ம பிரபு… டேய்… பிரபு…? எப்படி டா இருக்க..? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சி..! ஸ்கூல் படிக்கும் போது பார்த்தது. பிளஸ் டூ முடிஞ்சதும் ஊரு விட்டு போய்ட்ட அதுக்கப்புறம் உன்ன பாக்கவே முடியல..? ப்பா… அதுக்குள்ள பதினாலு வருஷம் ஆகிடுச்சு இல்ல…

Representational Image

“பதினாலு வருஷம் ஆச்சி தான். நா பிளஸ் டூ முடிச்சதும் அப்பாவுக்கு டிரான்ஸ்பரும் வந்திடிச்சி. அதுக்கப்புறம் பாத்து பேச வழி இல்லாம போச்சி” என என் கைகள் இரண்டையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு சொன்னான்.

அந்த இறுக்கத்தில் நீண்ட நாள் கழித்து சந்திக்கும் அவனது நட்பின் நெருக்கத்தை உணர்ந்தேன்.

“ ஆமா நீ என்ன பண்ற?” என கேட்டான் பிரபு.

“நான் ஒரு கவர்மெண்ட் ஸ்கூல்ல டீச்சரா வொர்க் பண்றேன் டா ”என்றேன்.

“செம டா… நீ அப்பவே நல்லா படிப்ப. படிச்சி உள்ளூர்லயே வேல வாங்கிட்ட அதுவும் கவர்மெண்ட் வேல சூப்பர் டா” என உள்ள மகிழ்வோடு பாராட்டினான்.

“நான் என்ன இதே ஊர்ல தான் இருக்கேன். ஆனா நீ தான் என்ன விட நல்லா படிச்சி ஃபாரின் போய்ட்டு செட்டில் ஆகிட்ட..! “வொய்ஃப் என்ன பண்றாங்க. குழந்தைங்க எப்படி இருக்காங்க..?”

“ஃவைப் டாக்டர்.ரெண்டு பெண் குழந்தைங்க.”

அப்போ இந்த ஹாஸ்பிடல்… எனக் கேட்க நினைப்பதற்குள்,

“ நாங்க தான் புதுசா ஓபன் பண்ணி இருக்கோம்” என்றான்.

“ஏய்… மச்சி சூப்பர் டா” என அவன் கையை வேகமாக குலுக்கினேன். ஆனால் அவன் அதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அவனுக்குள் ஒரு வெறுமை இருப்பதை உணர்ந்தேன்.

காலம் எவ்வளவு கடந்திடுச்சி இல்ல டா என ஆச்சர்யத்தோடு கேட்டான் பிரபு.

கம்யூனிகேஷன் வளர்ந்திடுச்சு, டெக்னாலஜி வளர்ந்திடுச்சு, கலாச்சாரம் மாறிடுச்சு என விரக்தியோடு சொன்னான். விட்றா அறிவியல் மட்டுமா வளர்ந்திடுச்சு அதோடு சேர்ந்து நோயும் வளர்ந்திடுச்சு என சொல்லியவாறு இரும்பினேன்.

இந்த கிண்டல் பண்றது மட்டும் இன்னும் உன்ன விட்டு போகல அப்படியே ஸ்கூல்ல பார்த்த மாதிரியே இருக்க.

வா என் வைஃப் கிட்ட சொல்லி பெரிய ஊசியா போடச் சொல்றேன் என சிரித்துக்கொண்டே கொஞ்சம் ரிலாக்ஸாக பேச ஆரம்பித்தான்.

Representational Image

ஆமா நீ என்ன அதுக்குள்ள ஃபாரின்ல இருந்து இங்கு வந்து செட்டில் ஆகுற…? அங்கேயே இன்னும் கொஞ்ச நாள் வொர்க் பன்னிருக்கலாமில்ல… வயசும் அவ்வளவு ஒன்னும் ஆகிடலயே… நாற்பதுகூட தாண்டல இல்ல…? அதுவும் இல்லாம உங்க குழந்தைகளும் அட்வான்ஸ்டா நிறைய விஷயங்கள் கத்துப்பாங்க இல்ல என ஆர்வத்தோடு கேட்டேன்.

கொஞ்சம் தயக்கத்தோடு… அது தான் பயமா இருக்கு நண்பா என்றான்.

நான் குழப்பத்துடன் அவனை பார்க்க.

அட்வான்ஸா நிறைய விஷயங்கள் கத்துக்கிறதை விட என் குழந்தைங்க நம்ம கலாச்சாரத்த கத்துக்கிட்டு வளரனும் ஆசைப்படுறேன். குழந்தையில இருந்த அவங்க ஃபாரின்லயே இருக்கிறதுனால நம்ம கலாச்சாரம் என்னான்னுத் தெரியாம போயிடுச்சு. குழந்தையா இருக்கும் போது வெஸ்டர்ன்ல பழகிட்டா… அப்புறம் நம்ம கல்சர்க்கு கொண்டு வர்றது தலையை விட்டு வாலை பிடிச்ச கதையாகிடும் இல்ல என்றான்.

அவன் என்ன சொல்ல வர்றான் என்று நான் புரிந்துக் கொள்ள முயற்சிக்கும் போது நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

அவளுக்கு இன்னும் தாத்தா பாட்டிங்கிற பாண்டிங்கே இல்லாம போயிடுச்சி. பெட் டைம் ஸ்டோரினா என்னான்னு கூட தெரியாத அளவுக்கு வளர்ந்துட்டா. அதனாலதான் எல்லோரும் சொந்த ஊருக்கே திரும்பிட்டோம். என் பொண்ணு இனிமேல் அவங்க தாத்தா பாட்டி கூட வளருவா. அவங்க பார்த்துப்பாங்க. இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. ஏதோ அச்சீவ் பண்ண மாதிரி இருக்கு என பெருமூச்சு விட்டான். நான் மௌனமாக இருந்தேன். அவன் தொடர்ந்தான்…

அன்பு, பாசம், கருணை, பாதுகாப்பு, நல்லொழுக்கம் இதெல்லாம் காட்டுறதுக்கும், சொல்றதுக்கும் அவங்களை விட்டா வேறு யாரு இருக்காங்க..!? இன்னைக்கு யூடியுப்ல ஒரு நாலஞ்சு பேர பாத்துட்டு இவங்க தான் சிறந்த கதை சொல்லிகள்னு கொண்டாடுறோம் நம்ம காலத்துல இந்த யூடியுப் மட்டும் இருந்திருந்தா..!!!

அவங்க அன்னைக்கு சொன்ன கதைகள் எவ்வளவு சுவாரஸ்யமா இருந்திருக்கு. இன்னைக்கு மூடநம்பிக்கையா இருந்தாலும் அது ஏதோ ஒரு விதத்துல நம்மள காப்பாத்தி இருக்கு என்றான். என் பாட்டி எனக்கு சொன்ன ஒரு இரவுக்கதை இப்ப கூட நியாபகம் இருக்கு என்று தன் பழைய நினைவு கொசுவர்த்தி சுருலை சுழல விட்டான்.

சின்னப் பையனா இருந்தப்போ எங்க வீட்டுகிட்ட ஒரு நெடுயுர புளிமரமொன்று இருந்துச்சி. கடுமையான காற்றால் அதன் நுனிகிளையொன்று ஒடிந்துத் தொங்கிக் கொண்டிருந்துச்சு. பெரும்பொழுது நாங்கள் அந்த மரத்தடியில் ஊஞ்சல் கட்டி ஆடுறதும், அதன் நிழலில் விளையாடறதும் வழக்கம்.

ஒருநாள் இரவு சிறுநீர் கழிக்க வெளியே போன நான் எதேச்சையாக அந்த மரத்தை பார்த்தேன். காற்றில் அசைந்த மரக்கிளையைக் கண்டு அஞ்சி ஓடிவந்து என் பாட்டியை கட்டிப் பிடிச்சுக்கிட்டேன். நடந்ததைப் பாட்டியிடம் சொன்னேன். அதற்கு பாட்டி ஒரு கதை சொன்னாள். ஆமா… மாரியாத்தா சாமி வானத்துல இருந்து பூமிக்கு குதிச்சு வர நெனச்சா. அது இருட்டு நேரமா இருந்துச்சா மின்னல் அப்பப்போ வெளிச்சம் காட்டிட்டே இருந்துச்சு. மின்னலை பிடிக்க இடிசாமி ஓடிவந்துச்சு. மாரியாத்த பூமிக்கு வரக் கூடாதுன்னு காத்துப்பேயி கடும் கோபத்துல சொலட்டி சொலட்டி அடிச்சது. அப்படி சொலட்டி அடிச்சதுல நீ பார்த்த அந்த மரத்துல மோதி அந்தக் காத்துப்பேயி தொங்கிட்டு இருக்கு. அதனால அந்த மரத்தடிக்கு யாரும் மூனு நாளைக்குப் போகக் கூடாது. அப்படி யாராச்சும் போன இரத்த வாந்தி எடுத்துச் செத்திடுவாங்க என்றாள். அதை நான் உண்மையென நம்பி சில நாட்கள் அந்தப் பக்கம் போகக் கூடாதென முடிவெடுத்தேன். மூன்றாவது நாள் அந்த மரக்கிளை தானாக முறிந்து கீழே விழுந்தது.

Representational Image

ஒருவேளை என் பாட்டி சொன்னக் கதை பொய்யென எனக்குத் தெரிந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நான் வழக்கம் போல அந்த மரத்தடிக்கு விளையாட சென்றிருப்பேன். மரக்கிளை என் பாட்டி சொன்ன நாட்களுக்கு முன்போ அல்லது பின்போ முறிந்து விழுந்திருக்கும். தலையில்பட்டு இரத்த வாந்தி எடுத்து இறந்திருக்கலாம். என்னை அங்க போகவிடாமல் தடுத்தது என் பாட்டி சொன்ன கதையும், பேய் என்ற கற்பனை கதாபாத்திரமும் தான் என்றான்.

சில கதைகள் கட்டுக்கதையாகவே இருந்திருந்தாலும் அந்தக் கால ஓட்டத்திற்கு அவசியப்பட்டவையாக இருந்திருக்கலாம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் குறித்த அறிவு எந்த சாமானியனுக்கும் இருந்ததில்லை. ஏன் இன்றும் கூட இல்லை என்பதே நிதர்சனம்.

ஒரு நல்ல நூலகத்தை அமைக்க ஆகும் செலவை செலவு என்று கருதாமல் அதை ஒரு அறிவீட்டும் முதலீடாக பாக்குற மாதிரி வீட்டின் முதியோர்களைப் பராமரிப்பது சுமைன்னு நெனைக்காம கடுமையான சூழலைக் கையாள தெரிந்த அனுபவ புத்தகம்ன்னு அவங்கள பாத்தா இன்னைக்கு குடும்பங்கள் எல்லாம் பிரிஞ்சி இருக்காது என்றான்.

எப்படியோ நண்பா, குழந்தைகளை சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்துட்ட… நீயும் வந்து சேர வேண்டிய இடத்துல சேர்ந்துட்ட… உன்ன பார்த்ததுல பெரும் மகிழ்ச்சி. உன் வொர்க் எல்லாம் முடிச்சிட்டு ஃவைப் குழந்தைகள கூட்டிட்டு வீட்டுக்கு வாடா அதே வீடு தான் என சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

நல்ல தாத்தா பாட்டிகளை இழந்த சமுதாயம் தான் நல்ல கதைச் சொல்லிகளைத் தலையில் தூக்கிக் கொண்டாடுகிறது. தமிழில் சிறந்த இலக்கியம் தோன்றியக் காலத்தில் கூட குழந்தை இலக்கியம் என்ற சொல்லாடல் கூட அவசியமற்றதாக இருந்தது. ஏனெனில், குழந்தை இலக்கியவாதிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள் என்பதை அன்று உணர்ந்தவர்களாக இருந்தனர். குழந்தை இலக்கியத்தின் உண்மையான தாய் தந்தையர் – அவரவர்களின் தாத்தா பாட்டிகளே..!

இன்றும் கூட  நாம் நல்ல குழந்தை இலக்கியப் படைப்பாளிகளைத் தேடுகிறோம். தேடிப் போற்றுகிறோம். எந்தவொரு புத்தக திருவிழாவோ, அமைப்போ அல்லது  அங்காடியோ குழந்தைகளுக்கென அரங்குகள் அமைப்பதைப் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு அது அவசியமாக உள்ளது என்பதும் மறுக்க கூடாத உண்மை. 

முதுமையென்பது அனுபவங்களின் தொகுப்பு. நாம் அதை உணர தவறும் பட்சத்தில் மீளமுடியாத சங்கடத்தில் சிக்கிக் கொள்கிறோம் என்பதைக் காலம் கடந்தே உணர முடிகிறது. நகரத்தை நோக்கிய நகர்வு, ஆடம்பர நுகர்ச்சி, கலாச்சார மேன்மை, தனிக் குடித்தனம், கூடுதல் செலவீனம், ஆரோக்கிய குறைவு, கவனித்தல் குறைவு, நேரமின்மை போன்ற பல காரணங்களால் வீட்டின் முதியவர்கள் புறக்கணிக்க பட்டாலும் “கிழவி… பேசாம சும்மா இரு ” என்று இன்றைய பேரப்பிள்ளைகள் அழைக்கப்படும் போதும் அவர்களைத் துரத்திப் பிடித்துக் கட்டியணைக்கும் தாத்தா பாட்டிகள் அன்பின் ஃபீனிக்ஸ்கள் அல்லவா..!

என்னைப் பொறுத்தவரை தாத்தா பாட்டிகளுக்கு இன்று நாம் செய்யும் மரியாதை எதிர்காலத்தில் நமக்கு கிடைக்கப் போகும்  மரியாதை. எனவே,  நம்மை பண்படுத்திக் கொண்டிருக்கும்  நல்ல கதைச் சொல்லிகளை, பண்பாட்டு சிற்பிகளை புறந்தள்ளிவிட்டு புதுமை ஆடைப் போர்த்தி நவநாகரீக பொம்மைகளாகி விடக் கூடாது என்பதே எனது பேராவா.

கௌரிலிங்கம்,பென்னாகரம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.