தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம்(மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்டு 15) காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி தினம் (நவம்பர் 1) ஆகிய தினங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இதில் மக்களின் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்படும். தற்போது கிராம சபைக் கூட்டம் போல நகர சபை, மாநகர சபைக் கூட்டமும் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

கிராம சபைக் கூட்டம்

இந்த நிலையில், அரசின் இந்த முடிவை மக்கள் நீதி மய்யம் வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “1994-ல் இயற்றப்பட்ட தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் மூலம் அறிமுகமானது கிராம சபை. இதன் அதிகாரம் சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு சற்றுக் குறைந்தது என்றாலும், மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் சபை இதுவேயாகும். கிராம சபையின் சிறப்பை உணர்ந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஒவ்வொரு மேடையிலும் இதுகுறித்து தவறாது எடுத்துரைத்தார். மேலும், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, செயல்படாமல் இருந்த கிராம சபையை, வருடத்தின் குறிப்பிட்ட நாட்களில் நடத்த வேண்டுமென உறுதி செய்ய உறுதுணையாக இருந்தார்.

இதுமட்டுமின்றி, கிராம சபைக் கூட்டங்களைப்போல, நகரப் பகுதி மக்களின் கருத்துகளை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் நகர, மாநகர சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏரியா கமிட்டி, வார்டு கமிட்டி, நகர சபை போன்ற, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வலு அளிக்கக் கூடிய விஷயங்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்தான்.

ஸ்டாலின்

உள்ளாட்சி அமைப்புகளில் மக்களாட்சி மலர, ஏரியா சபைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தி, தமிழக அரசின் தலைமைச் செயலரை நேரில் சந்தித்து தலைவர் கமல்ஹாசன் மனு அளித்தார். கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, கிராம சபையைப் போல, ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தேர்தல் வாக்குறுதி அளித்தது. இந்நிலையில், தமிழகத்தில் கிராமசபைக் கூட்டம்போல நகர சபை, மாநகர சபைக் கூட்டங்களும் நடைபெறும் என முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம் அருகேயுள்ள பம்மல் 6-வது வார்டில் வரும் நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் மாநகர சபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் இந்த முடிவை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒரு விஷயம் நடைமுறைக்கு வந்திருப்பது பாராட்டுக்குரியது. நகர, மாநகர சபைகளிலும், உள்ளாட்சிகளில் நடைபெறும் பணிகள், அடுத்ததாக நடைபெற வேண்டியத் திட்டங்கள், மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு, தீர்மானம் நிறைவேற்றி, அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

கமல், மக்கள் நீதி மய்யம்

மேலும், குடியரசுத் தினம், தொழிலாளர் நாள், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர் தினம், உள்ளாட்சி தினம் என கிராம சபை நடைபெறும் நாட்களில், நகர, மாநகர சபைகளையும் நடத்த வேண்டும். உரிய விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளின்படி இவற்றை அமைத்து, கிராம சபைக் கூட்டங்கள் செம்மையாக செயல்படுவதையும், சரியான முறையில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், வெறும் கண் துடைப்பாக இது இருந்துவிடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.