கர்நாடகாவில், பா.ஜ.க அரசின் வீட்டு வசதி துறை அமைச்சரான சோமன்னா, தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணை அறைந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அப்பெண்ணிடம் அமைச்சர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில் உள்ள பெண், கர்நாடகாவின் கெம்பம்மா என்ற பகுதியை சேர்ந்தவர். கடந்த சனிக்கிழமை, அங்கு 173 பேருக்கு அரசு சார்பில் வீட்டு வசதி செய்து தரப்பட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களில் ஒருவராக இந்தப் பெண்ணும் இருந்துள்ளார்.

நிகழ்ச்சியில், அடையாளத்துக்கு 10 பேருக்கு அமைச்சர் நேரடியாக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள், சலுகைகளை வழங்கினார். அந்த 10 பேரில் தான் இல்லாததால், ஏன் தன்னுடைய பெயர், அரசின் வீட்டு வசதி பெறுவோர் பட்டியலில் இல்லை என அமைச்சரிடம் விவரம் கேட்க முற்பட்டிருக்கிறார் அந்தப் பெண். அமைச்சரை நெருங்கிச் சென்று அப்பெண் காலில் விழுந்து கேட்க முயன்றுள்ளார். இந்தத் திட்டத்தில் பயன்பெற சுமார் 4,500 ரூபாய் வரை தான் செலவு செய்திருப்பதாகக் கூறி, ஏன் தனக்குக் கொடுக்கவில்லை என அவர் கேட்க முற்பட்டதாகத் தெரிகிறது. அப்பெண், அமைச்சரின் காலில் விழ முயன்றபோது அவர் அறைந்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அப்பெண்ணை தான் அறையவில்லை என்று அமைச்சர் சோமன்னா விளக்கம் தந்தார். அவர், “பெண்கள் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பவன் நான். பொதுவாழ்வில் சுமார் 45 வருடங்களாக இருக்கிறேன். அன்றைய நிகழ்வில், அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறவே சென்றேன். அவரின் பிரச்னையை சரிசெய்கிறேன் என சொல்ல முயன்றேன். அதை சொல்லிவிட்டு, அங்கிருந்து அவரை நகரும்படி கூறினேன். மற்றபடி அறையவில்லை” என்று கூறி, வருத்தம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சோமன்னா

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “அமைச்சரின் கை என் முகத்தில் தவறுதலாகவே பட்டிருக்கும். அவர் எனக்கு உதவுவதாக வாக்களித்தார். அதேபோல உதவினார். அவர் பேரில் நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். எனினும் கர்நாடக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அமைச்சரின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

– இன்பென்ட் ஷீலா

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.