“2023 – பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்திற்கு தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்களைக்  கொள்முதல் செய்திட அரசாணை வெளியிட வலியுறுத்தியும், வெளிமாநில வணிகக் கொள்முதலை கைவிட கோரியும், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியிருக்கிறார் விவசாயிகள் சங்க தலைவரான சுவாமிமலை விமலநாதன்.

சுவாமிமலை விமலநாதன்

இதுபற்றி சுவாமிமலை விமலநாதனிடம் பேசினோம்.

“தமிழ்நாட்டிலுள்ள சுமார் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ‘பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்திற்கு’ இலவச வேட்டி மற்றும் புடவைகள் கொள்முதல் செய்திட தமிழ்நாடு துணி ஆலைகளிடமிருந்து ஒப்பந்தம்  செய்வது தொடர்பான பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாக அறிகிறேன். இத்திட்டத்திற்கான வேட்டி – சேலைகளை தமிழ்நாட்டிலுள்ள துணி உற்பத்தி ஆலைகளிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டுமென்ற நல்ல கொள்கை முடிவிலிருக்கின்ற தமிழக அரசைப்  பாராட்டுகிறேன்.

பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டம்

அதுபோலவே வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு, சென்ற ஆண்டைப் போன்று அரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், வெள்ளை உளுத்தம் பருப்பு, நெய், மிளகு, மிளகாய் பொடி, மல்லித்தூள், கடுகு, சீரகம், மஞ்சள் தூள், உப்பு உள்ளிட்ட 22 வகையான மளிகைப்  பொருட்களையும்  இவ்வாண்டும் வழங்கவுள்ள நிலையில், அப்பொருட்கள் அனைத்தையும் தமிழகத்தில் உற்பத்தி செய்யும் உழவர்களிடமிருந்து மட்டுமே நேரடியாக, இடைத்தரகர்கள் தலையீடில்லாமல் [ COMMISSION, CORRUPTION, COLLECTION இல்லாமல்], தரமான பொருட்களாக நியாயமான விலைக்கு கொள்முதல் செய்வதன் மூலம், தமிழக உழவர்களுக்கு, நியாயமான, ஓரளவு லாபகரமான விலைக் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்

சென்றாண்டு, தமிழ்நாட்டில் விளைவிக்கப்பட்ட பொங்கல் கரும்பினை கொள்முதல் செய்த பொழுது அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள், சில ஊழல் அலுவலர்களின் கையே  மேலோங்கியிருந்தது. இதனால் அரசுக்கும் கெட்டப் பெயர் ஏற்பட்டது. 

பொங்கல் செங்கரும்பை தமிழ்நாட்டிலேயே கொள்முதல் செய்த அரசு, வெல்லம் கொள்முதலை வெளி மாநிலங்களில்  செய்தது.  இக்காரியம் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம்  கணபதிஅக்ரஹாரம், ஒக்கக்குடி, வீரமாங்குடி, பெரமூர், மாகாளிபுரம், கருப்பூர், திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டி, சேலம் செவ்வாய்பேட்டை, பிலிக்கள் பாளையம், அணைக்குடி, இளங்கார்குடி மற்றும் கரூர் பகுதிகளிலுள்ள வெல்லம் உற்பத்தியாளர்களை கவலையடையச் செய்தது.

பொங்கல் சிறப்புத் தொகுப்பில் ஊழல் வேண்டாமே!

மேலும்  அரசே வெளிமாநிலங்களிலிருந்து வெல்லத்தினை கொள்முதல் செய்து இலவசமாக வழங்கியதால், தமிழ்நாட்டில் மேற்கண்ட ஊர்களில் உற்பத்தியான வெல்லம் முழுவதும், உற்பத்தி செலவைவிட குறைவான விலைக்கு, உழவர்கள்  விற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டதை மறக்க முடியவில்லை. 

மேலும், வெளிமாநிலத்தில் அரசு கொள்முதல் செய்து விநியோகித்த வெல்லம் மிகத்தரக்குறைவாக இருந்ததை பொதுமக்கள் அதிருப்தியுடன் வாங்கியதை  உணர்ந்து, இந்தாண்டு பொங்கலுக்கு  தரயிருக்கின்ற வெல்லம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உழவர்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்துப்  பொருட்களுக்கும் முன்னுரிமை அளித்து,  தமிழ்நாடு அரசு கொள்முதல் கொள்கையினை அறிவிப்பதோடு, இதுகுறித்த நிரந்தர அரசாணையை வெளியிட்டு, தமிழ்நாட்டில் உற்பத்தியாகாத பொருட்களை மட்டுமே பிற மாநிலங்களில் கொள்முதல் செய்யும்  நடைமுறையைப் பின்பற்றிட உழவர்கள் சார்பில் வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் ” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.