மாநகர் சென்னையில் செல்லும் இடங்களெல்லாம்  குப்பைகள் சாலைகளில் கொட்டி  கிடக்கும்.  வெயில் காலங்களில்  தண்ணீர் பற்றாக்குறை,  மழைக் காலங்களில்  வெள்ளத்தால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். சென்னையில் பெரும்பாலான  நீர்நிலைகள் அரசால், தனியார் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன . டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாய்களால் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. கூடங்குளத்தில்  உள்ள அணு மின் நிலையங்களுக்கு  எதிராக இன்று வரை அங்குள்ள மக்கள் பல்வேறு போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர்.

திமுகவின் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மத்திய அரசால் பாதிப்புக்குள்ளாகும்போது, இதற்கு பெரியளவில் மாநில அரசு  தரப்பில்  எதிர்ப்பு இல்லை.  பெயரளவுக்கு எதிர்ப்பாக மட்டுமே  இருக்கிறது. பரந்தூர் விமான நிலைய  திட்டம் மத்திய அரசுடையது. அதற்காக  ஆயிரக்கணக்கன விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் கையகப்படுத்த உள்ளன.

இதற்கு மாநில அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மத்திய அரசின்  திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த உள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கல் குவாரிகள், சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள், கரியமில வாயுக்களை கக்கும் தொழிற்கூடங்கள் என சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படும் நிறுவனங்களை எந்த கேள்வியும் கேட்காமல் அவற்றுக்கு ஆதரவாகவே ஆட்சிக்கு வரும் அரசுகள் செயல்பட்டு வருகின்றன. அதற்கு தி.மு.க அரசும் விதிவிலக்கில்லை.

நிலைமை இப்படி இருக்க, திமுகவின் சுற்றுச்சூழல் அணி சார்பில் 18.10.22 அன்று  சென்னையில்கருத்தரங்கு நடைபெற்றது. திமுக சுற்றுச்சூழல் அணி நடத்தும் கருத்தரங்கில்  என்னதான் நடக்கிறது என்று சென்று பார்த்தோம்.

நிகழ்வில்

இந்த கருத்தரங்கில் ‘மண்புழு விஞ்ஞானி’ முனைவர் சுல்தான் இஸ்மாயில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஆர்.எஸ் சீனிவாசன், மருத்துவர் புகழேந்தி, திமுகவின் மாநில திட்டக்குழு கொள்கை ஆலோசகர் கார்த்திகேயன், கழக சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் மணி சுந்தர், திருக்கழுக்குன்றம் முன்னோடி இயற்கை விவசாயி இறையழகன் உள்ளிட்டவர்கள் உரையாற்றினர்.

மதியம் உணவுக்குப்பின் மத்திய அரசின் ’சுற்றுசூழலுக்கு எதிரான அணுகுமுறை’  என்ற தலைப்பில் திமுகவின் சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியும், திராவிட ஆட்சியில் சுற்றுச்சூழல் என்ற தலைப்பில் திமுகவின்  துணை செயலாளர் கனிமொழியும் உரையாற்றினர். நிகழ்வின் இறுதியில் சிறந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களுக்கான விருது ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் அகமது இஸ்மாயில், முன்னோடி இயற்கை விவசாயி திருக்கழுக்குன்றம் இறையழகன், மரபு விதை வானவன், காஞ்சிபுரம் இயற்கை விவசாயி வீரராகவன் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

கனிமொழி எம்.பி பேசும்போது, “தற்போதைய ஆட்சி சுற்றுச்சூழல் கேடுகளை கவனத்தில் எடுத்து செயல்பட்டு வருகிறது. காலநிலை மாற்றம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது.  இன்று பிளாஸ்டிக் என்பது  பெரிய பிரச்சனையாக உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் பசிபிக் கடலில் மிதந்து கொண்டிருக்கிறது. குழந்தையின் தாய்ப்பாலில் கூட பிளாஸ்டிக் கண்டறியப்படுவது ஆரோக்கியத்தை அச்சுறுத்துகிறது” என்றார்.

திமுகவின் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

திமுக சுற்றுசூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேசுகையில்,  “எதிர்பாராத காலங்களில் கடுமையான மழை பெய்கிறது. மார்கழி மாசம் பனி தானே பெய்ய வேண்டும். ஆனால் மழை பெய்கிறது.

இதற்கெல்லாம் காரணம்  காலநிலை மற்றம். இன்று புவி வெப்பமயமாதல்  அதிகரித்துள்ளது.  இதனை சரிசெய்ய  33%  பசுமைப்பரப்பை அதிகரிப்பது இன்றியமையாதது. அதைதான் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. வட இந்தியாவில் லட்சக்கணக்கான மரங்களை அழித்து வருகின்றனர்.  சுற்றுச்சூழல் பாதிப்படைவதால் முதலில் பாதிப்பது விளிம்புநிலை மக்கள் தான்” என்றார். 

திமுகவின் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

இவரது உரையை கேட்கும்போது வட இந்தியாவில் மட்டும்தான் மரங்கள் வெட்டப்படுகிறதா? தமிழ்நாட்டில் வெட்டப்படவில்லையா என்ற கேள்வி எழுகிறது. ஆறுகளில் சாக்கடை கழிவு நீரை விடுவது, தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவது என்று சூழல் சீர்கேடுகளை சரிசெய்ய ஆட்சியில் இருக்கும்போது எந்த முயற்சியும் செய்யாமல் சுற்றுச்சூழல் கருத்தரங்கு மட்டும் நடத்தினால் சூழலை பாதுகாத்து விட முடியுமா? தமிழ்நாட்டில் இப்போதும் பிளாஸ்டிக்தான் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் பற்றி கவலைப்படுகிறார்கள். திட்டங்கள், அறிவிப்புகள், குழுக்கள் அமைப்பது என்று சுற்றுச்சூழல் சார்ந்த சில முன்னெடுப்புகள் தி.மு.க அரசு மேற்கொண்டாலும், அது நடைமுறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. இன்றும் பிளாஸ்டிக் பல இடங்களில் நீக்கமற நிறைந்துள்ளது.

இதுகுறித்து தி.மு.க சுற்றுச்சூழல் அணி செயலாளரான கார்த்திகேய சேனாபதியிடம் கேட்டபோது, “இன்று காலநிலை மாற்றம் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதனை சரி செய்வது தமிழக அரசால் மட்டும் சாத்தியப்படாது. ஒன்றிய அரசும், உலக நாடுகளும் இணைந்தால் மட்டும்தான் சரி செய்ய முடியும். தமிழ்நாட்டில் சூழலுக்கு எதிரானது என்று தெரிந்தால் அரசு திட்டத்தை கைவிடுகிறது. அந்தளவுக்கு சூழலுக்கு இயைந்த அரசாக திமுக செயல்பட்டு வருகிறது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.