மகாராஷ்டிரா மாநிலத்தில் அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட இருந்த வேட்பாளர் திடீரென வாபஸ் பெற்றதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி எளிதாக வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து கொண்டிருந்த சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவில் அக்கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவர் தலைமையில் இரு அணிகளாக பிரிந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தற்போது அம்மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறது.

Andheri bypoll: BJP & Shinde for joint contest, Uddhav nominee alleges  pressure | Mumbai news - Hindustan Times

இந்நிலையில், கடந்த மே 11 அன்று மாரடைப்பால் மும்பை புறநகர் பகுதியான அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதி சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கே உயிரிழந்த காரணத்தால், அவரது தொகுதிக்கு நவம்பர் 3 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த இடைத்தேர்தலில் சிவசேனாவின் இரு பிரிவினரும் கட்சியின் பெயரையும் அதன் தேர்தல் சின்னத்தையும் பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணிக்கு “சிவசேனா – உத்தவ் பாலாசாகேப் தாக்கரே”, மற்றும் ஏக்நாத் ஷிண்டே முகாமுக்கு “பாலாசாஹேபஞ்சி சிவசேனா” (பாலாசாஹேப்பின் சிவசேனா) என்ற புதிய பெயர்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

அந்தேரி கிழக்கு தொகுதிக்கு நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தல், இந்த ஆண்டு சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு அம்மாநிலத்தில் நடந்த முதல் தேர்தல் ஆகும். உத்தவ் தாக்கரே தலைமையிலான சேனா பிரிவு இந்த தேர்தலில் மறைந்த எம்எல்ஏ ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கேவை நிறுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாஜக மற்றும் சிவசேனா பிரிவின் கூட்டு வேட்பாளராக முர்ஜி படேல் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

image

இந்நிலையில், அந்தேரி (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சி தலைவர் ராஜ் தாக்கரே பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும் அம்மாநிலத்தின் துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸிடம் வலியுறுத்தினார்.

இதையடுத்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா வேட்பாளர் ருதுஜா லட்கேவுக்கு எதிரான வேட்பாளரை வாபஸ் பெறுவதாக பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலே அறிவித்தார். “அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று பாஜக முடிவு செய்துள்ளது. பாஜகவில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்த முர்ஜி படேல் இப்போது அதை வாபஸ் பெறுவார். போட்டியிட்டு இருந்தால் நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம்” என்று நாக்பூரில் சந்திரசேகர் பவான்குலே கூறினார்.

Bypolls in Maharashtra, Bihar first test of new alliances - Rediff.com  India News

இந்த அறிவிப்பு வெளியானதும், முர்ஜி படேலின் வேட்புமனு வாபஸ் பெறப்பட்டதால் வருத்தமடைந்த பாஜக தொண்டர்கள், பாஜக மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியினர் பாஜக தோல்வி பயத்தால் வாபஸ் பெற்றுள்ளதாக விமர்சனம் செய்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.