மத்திய உள்துறை அமித் ஷா தலைமையிலான, இந்திய ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்கு எதிராகத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ உட்பட பல அரசியல் தலைவர்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும். இந்தியாவிலுள்ள மாநிலங்களையும், ஒன்றிய பிரதேசங்களையும் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி, தேசிய இனங்கள் மீது இந்தி மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் பரிந்துரைகளை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சீமான்

இது இந்திய நாடா? இந்தியின் நாடா? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டும்தான் இந்நாட்டுக்கு வரிசெலுத்துகிறார்களா? இல்லை இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் விடுதலைக்குப் பங்களிப்பு செலுத்தினார்களா? இல்லை இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் குடிமக்களா? எதற்கு இந்திக்கு மட்டும் இத்தகைய முக்கியத்துவம்? இந்த நாட்டில் பிரிவினைவாதிகள் என்று யாரும் தனியாக இல்லை. உண்மையில் ஒரே மொழியைத் திணிப்பதன் மூலம் நாட்டைத் துண்டாட நினைக்கும் பா.ஜ.க ஆட்சியாளர்கள்தான் உண்மையான பிரிவினைவாதிகள்.

சீமான் அறிக்கை

பா.ஜ.க அரசு, தனது அதிகார வலிமையைக் கொண்டு நாடெங்கிலும் இந்தியைத் திணிக்க முற்பட்டால், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அதனை ஏற்றுக் கொண்டாலும், அம்முடிவினை ஏற்றுக் கொண்டாடித்தீர்த்தாலும் தமிழ் மண் போர்க்கோலம் பூண்டு, வன்மையான எதிர்ப்பினை வெளிப்படுத்தும். தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் என எச்சரிக்கிறேன். ஆகவே, இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால், இந்த நாட்டிலுள்ள தேசிய இனங்களின் மொழிகள் யாவும் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய முன்னுரிமையும், முதன்மைத்துவமும் அளிக்கப்பட வேண்டும். மாறாக, இந்தி எனும் ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்குப் பல நாடுகள் பிறக்க நேரிடுவதை ஒருபோதும் தவிர்க்க இயலாது என உறுதிப்படத் தெரிவிக்கிறேன்” என சீமான் கூறியிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.