புதுச்சேரியில் ஹெல்மெட் எனப்படும் தலைக்கவசம் அணியாததால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பதாக போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “முறையற்ற வகையில் மோட்டார் வாகனங்களை இயக்குவதால் அன்றாடம் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் புதுச்சேரியில் நான்கு பேரும், காரைக்காலில் ஒரு சிறுவனும் இருசக்கர வாகன விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்திருக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்வதற்கு அனுமதி உள்ளது.

புதுச்சேரி அரசு

அவ்வாறு பயணம் செய்யும் இருவருமே ஹெல்மெட் எனப்படும் தலைக்கவசத்தை அணிந்து பயணம் செய்வது அவசியம். தலைக்கவசம் அணிந்து பயணம் செய்வதால் விபத்தில் தலையில் காயம் ஏற்படுவது 80% தடுக்கப்படுகிறது. கடந்த 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரையில் மட்டும் தலைக்கவசம் அணியாததன் காரணமாக 181 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனம் விற்பனை செய்யும்போது, அதனுடன் தரமான தலைக்கவசத்தை விற்பனை செய்வதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50% குறைக்கும் என்பதால், எந்த வாகனத்தை ஓட்டினாலும் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவோருக்கும், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவருக்கும், அதில் பயணிப்பவருக்கும் முதல் முறை ரூ.1000/- அபராதத்துடன், 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செல்போனில் பேசாமல், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவோர் வாகன விபத்தினை தவிர்க்கலாம். சாலை விதிகளை கடைபிடித்து விபத்தினை தவிர்ப்போம். அதேபோல புதுவையில் சமீப காலமாக ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் வாகனத்தை இயக்குவதற்கு சட்டப்படி அனுமதி இல்லை. அத்துடன் அப்படியான சிறுவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் வாகனத்தை ஓட்டுவதாக தெரிகிறது. அவ்வாறு வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு 3 வருடம் வரை சிறை தண்டனையுடன், ரூ.25,000/- அபராதமும் விதிக்கப்படும்.

அத்துடன் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் 12 மாதங்கள் வரை ரத்து செய்யப்படும். மேலும் வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துக்கான தகுதி ரத்து செய்யப்படும். அத்துடன் அவர்கள் மீது சிறார் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்படும். எனவே, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, பொது மக்கள் அனைவரும் தகுதியான தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, செல்போனில் பேசிக்கொண்டு ஓட்டுவது, தவறான திசையில் ஓட்டுவது, இரு சக்கர வாகங்னளில் இருவருக்கு மேல் செல்வது போன்றவற்றை தவிர்த்து, சாலை விபத்துகளை தவிர்க்குமாறு போக்குவரத்து துறை அறிவுறுத்துகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.