ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, நயினார் கோவில் ஒன்றியம் போகளூர் ஊராட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையிலிருந்த பள்ளத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. அதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இறங்கி இதனை சரி செய்யுமாறு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இரு தினங்களில் புதிய குழாய் அமைக்கப்பட்டு, பள்ளமான சாலைகளும் சீர் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில், பா.ஜ.க தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “அடேய் உ.பிஸ் இதெல்லாம் எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?” என அந்த வீடியோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தி.மு‌க மாவட்டப் பொருளாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் ஆணைக்கிணங்க நடு ரோட்டில் நீச்சல் குளம் அமைத்து கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த வாலிபர் கூறுவது போன்று இருந்தது.

சீர் செய்யப்பட்ட படங்களை வெளியிட்டு பதிவிட்டுள்ள தி.மு.க நிர்வாகி

ஆனால் இந்த வீடியோ கடந்தாண்டு எடுக்கப்பட்டது எனவும் வீடியோ வெளியாகி, இரு தினங்களில் அது சீர் செய்யப்பட்டது எனவும் சீர் செய்யப்பட்ட புகைப்படங்களுடன் பதிவிட்டிருக்கிறார் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “கடந்தாண்டு அக்டோபர் மாதம் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக சாலையில் இருந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது. அதில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இறங்கி முதலமைச்சர் இதனை சீர் செய்து கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். அதன் பின்னர் இரண்டு நாள்களில் குழாய் மாற்றப்பட்டு, பள்ளமான சாலையும் சரி செய்யப்பட்டது.

ராஜீவ் காந்தி – தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்

ஆனால் பா.ஜ.க தொழில் நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், அந்த வீடியோவில் வாய்ஸை மாற்றி தி.மு.க-வுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு பதிவிட்டுள்ளார். தற்போது பரமக்குடி சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க-வைச் சேர்ந்த முருகேசன் என்பவர் உள்ளார். ஆனால் அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் ஆணைக்கிணங்க என அந்த வாலிபர் கூறுகிறார். இதிலிருந்தே அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு வாய்ஸ் மாற்றி வெளியிடப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. அதன் காரணமாகத்தான் அவரது பதிவு பொய் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக சீர் செய்யப்பட்ட படங்களை பதிவிட்டேன்” எனக் கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.