ஃபோக்ஸ்வாகன் கார் வாடிக்கையாளர்களைக் கேட்டால் தெரியும்… “கார் ஓட்டும் வரை ஜாலியாகத்தான் இருக்கு. ஆனா சர்வீஸ்னு வந்துட்டாதான் பர்ஸ் பழுக்குது!” என்பார்கள்.

உண்மையில் சர்வீஸ் மற்றும் பராமரிப்பில் எகிற வைப்பவை ஃபோக்ஸ்வாகன் கார்கள். அப்படி ஒரு வாடிக்கையாளரின் புலம்பல்தான் இப்போது இன்டர்நெட் முழுக்க வைரலாகி வருகிறது.

பெங்களூரு வெள்ளம் கர்நாடகாவையே புரட்டிப் போட்டது எல்லோருக்கும் தெரியும். வெள்ளத்தில் பெரும்பான்மையாகச் சிக்கியவை காஸ்ட்லி கார்கள்தான். லெக்ஸஸ், ஆடி போன்ற பெருநிறுவனங்கள், வெள்ளத்தில் சிக்கிய தங்கள் கார்களின் வாடிக்கையாளர்களுக்கு இலவச சர்வீஸ், மலிவு விலை உதிரிபாகங்கள், சர்வீஸ் பேக்கேஜ் என்று வசதிகளை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் அனிருத் கணேஷ் எனும் பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர், வெள்ளத்தில் மூழ்கிய தனது ஃபோக்ஸ்வாகன் போலோ காரை சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்ல முயன்றபோது, தான் நொந்து போன அனுபவத்தைத் தனது லிங்க்டுஇன் வலைதளப் பக்கத்தில் கொட்டியிருக்கிறார்.

Flood affected Polo

பெங்களூரு வெள்ளத்தில் மூழ்கிய தனது போலோ TSI எனும் தனது பெட்ரோல் காரை, ஒயிட்ஃபீல்டில் உள்ள ‘ஆப்பிள் ஆட்டோ’ எனும் சர்வீஸ் சென்டருக்கு அனிருத் காரை ட்ரக்கில் டோ செய்து எடுத்துப் போயிருக்கிறார். 20 நாள்கள் கழித்து ஃபோக்ஸ்வாகன் சர்வீஸ் சென்டரிலிருந்து ஒரு போன் கால். ‘‘உங்கள் கார் டோட்டல் டேமேஜ்… இந்தாங்க கொட்டேஷன்!’’ என்று அவர்கள் சொன்னதுதான் செம ஹைலைட்டான விஷயம்.

11 லட்ச ரூபாய் காருக்கு அவர்கள் கொடுத்த கொட்டேஷன் தொகை – 22 லட்சம். ‘‘என்னடா இது காரே 11 லட்சத்துக்குத்தான் வாங்கினேன். அப்படியே டபுள் மடங்கு பில் போடுறீங்களே… நியாயமாரே!’’ என்று கதறியவர், காரை இன்ஷூரன்ஸ் செய்த ACKO நிறுவனத்தைத் தொடர்பு கொண்டிருக்கிறார்.

அங்கேயும் அதே ‘டோட்டல் டேமேஜ்’ எனும் தேய்ந்து போன ரிக்கார்டு டயலாக்தான் சொல்லியிருக்கிறார்கள். கூடவே, ‘‘சர்வீஸ் சென்டரில் இருந்து எஸ்டிமேஷன் பில் கொடுங்க! அதுக்கு ஏற்ற மாதிரி க்ளெய்ம் பண்ணிக்கலாம்!’’ என்று அவர்கள் கேட்டதற்கிணங்க அனிருத்தும் சர்வீஸ் சென்டரைத் தொடர்பு கொண்டிருக்கிறார்.

அவர்கள் ஒரு எஸ்டிமேஷன் பில்லை அனுப்பியிருக்கிறார்கள். அதிலும் ஹைலைட்கள் தொடர்ந்திருக்கின்றன. பொதுவாக, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு கார் ஷோரூம்கள் கொடுக்கும் எஸ்டிமேஷன் டாக்குமென்ட் தொகை அதிகபட்சமாக 5,000 ரூபாய்க்குள் முடிந்து விடுவதுதான் வழக்கம். அங்கேயும் விளையாடியிருக்கிறது ‘ஆப்பிள் ஆட்டோ’ ஃபோக்ஸ்வாகன் சர்வீஸ் சென்டர். எஸ்டிமேஷன் டாக்குமென்ட்டுக்கே சுமார் 44,840 ரூபாய் பில் போட்டு அசத்தியிருக்கிறார்கள்.

இதில் கொடுமையான ஹைலைட் என்னவென்றால், ஒரு வாரம் அந்த காரை பார்க் செய்ததற்கு பில் என்று 4,000 ரூபாயோடு ஜிஎஸ்டி சேர்த்து பில் போட்டிருக்கிறது அந்த ஷோரூம்.

Estimation Bill

பொதுவாக, பழுதாகிப் போன காரின் சர்வீஸ் செலவு, அந்த காரின் IDV (Insured Declared Value) மதிப்பைவிட அதிகமாகும் பட்சத்தில், காரை ‘டோட்டல் டேமேஜ்’ எனும் லிஸ்ட்டில் சேர்த்து, அந்த IDV தொகையை அந்த கார் உரிமையாளருக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம், செட்டில்மென்ட்டாக வழங்குவதுதான் வழக்கம்.

இங்கே எல்லாமே தலைகீழாக நடக்க, கடுப்பாகிப் போன அனிருத், லிங்க்டுஇன்னில் தனது புலம்பலைக் கொட்ட… கவனம் ஃபோக்ஸ்வாகன் இந்தியாவுக்குப் போனது. ‘‘நீங்கள் 5,000 ரூபாய் எஸ்டிமேஷன் கட்டினாலே போதும்!’’ என்று சொல்லியிருக்கிறதாம் ஃபோக்ஸ்வாகன் கஸ்டமர் கேர்.

நல்லவேளையாக – 11 லட்ச ரூபாய் காருக்கு 22 லட்ச ரூபாய் செலவாகும் என்று அந்த சர்வீஸ் சென்டர் எழுத்து மூலமாக எழுதித் தராததால் தப்பித்தது என்கிறார்கள்.

‘‘காரு ரிப்பேர்னு போனா பேரு ரிப்பேர் ஆயிடுச்சே!’’

‘‘RIP ஃபோக்ஸ்வாகன்!’’ என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது ஃபோக்ஸ்வாகன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.