பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்புக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனையை நடத்தி வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்துள்ள நிலையில், தேச விரோத நடவடிக்கைகள் மற்றும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன்முறையான பல போராட்டங்களை நடத்தியது மற்றும் மதக் கலவரங்களை தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீது வைக்கப்படுகிறது. இவையே தடை விதிக்க முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. 

image

மேலும் `ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது மற்றும் ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது’ உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்கான ஆதாரங்கள் இரண்டு கட்டங்களாக நடந்த சோதனைகளில் கிடைத்துள்ளன என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிரான ஷாகின்பாக் போராட்டம் மற்றும் கிழக்கு டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை போராட்டங்கள் ஆகியவற்றின் பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் அமலாக்கத்துறை செப்டம்பர் 22ஆம் தேதி அன்று நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தின. இந்த சோதனைகளில் 120 கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிவர்த்தைக்கான ஆதாரங்கள் கிட்டியுள்ளதாகவும் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி திரட்டப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் மத்திய உள்துறை  அமைச்சகத்துக்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 image

அடுத்த கட்டமாக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சோதனைகளில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பைச் சேர்ந்த 270 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்திர பிரதேசம், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, அசாம், மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற அந்த சோதனைகளை அந்தந்த மாநில போலீசார் நடத்தி உள்ளனர். டெல்லியில் உள்ள ஜாமியா நகர் மற்றும் நிஜாமுதீன் ஆகிய இடங்களில் கடும் போலீஸ் பாதுகாப்புடன் சோதனைகள் நடைபெற்றன. இதே போல சோதனைகள் நடைபெற்ற பிற மாநிலங்களிலும் கடும் போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்ய ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் எந்த ஒரு அமைப்பை தடை செய்தாலும் சட்டரீதியாக தடை உத்தரவுக்கான காரணங்கள் வலுவாக இருக்க வேண்டும் எனவும், அதனால் ஆதாரங்கள் விரிவாக பரிசீலனை செய்யப்படுகின்றன  எனவும் அவர்கள் தெரிவித்தனர். சட்டரீதியான ஆலோசனைகள் முடிவடைந்த பிறகு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

– கணபதி சுப்ரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.