ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (25.09.2022) ஞாயிற்று கிழமை மாலை ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடி 187 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களில் அவுட்டாகி நடையைக் கட்டினார். இமாலய இலக்கை நோக்கிய சேசிங்கில் இந்திய அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்ததால் ரோகித் சர்மா மீது இந்தப் போட்டியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதனால், அவர் ஆட்டமிழந்த போது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. 

Image

அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் சூர்யகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் இறங்கினர். களத்தில் இறங்கிய 2வது பந்திலேயே எல்லைக்கோட்டுக்கு பந்தை விரட்டி பவுண்டரியுடன் தனது இன்னிங்சை துவங்கினார் சூர்யகுமார். பின்னர் சூர்யகுமார் நிதானித்து விளையாட, பந்தை பவுண்டரிகளாக்கும் பொறுப்பை கோலி எடுத்துக் கொண்டார். பின்னர் மேக்ஸ்வெல் வீசிய ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி மீண்டும் அதிரடியாக விளையாடத் துவங்கினார் சூர்யகுமார்.


டேனியல் சாம்ஸ், ஆடம் சம்பா, பாட் கம்மின்ஸ் என அனைவரது ஓவர்களிலும் தலா ஒரு சிக்ஸரை விளாசி அணியின் ரன் ரேட் சரியாமல் பார்த்துக் கொண்டார் சூர்யகுமார். இவரது இந்த அதிரடி ஆட்டம்தான் மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த கோலிக்கு அழுத்தத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டது. இதையடுத்து க்ரீன் வீசிய ஓவரில் அடக்கி வாசித்த சூர்யகுமார், ஆடம் சம்பா ஓவரில் 2 சிக்ஸர்களை நொறுக்கி 29 பந்துகளிலேயே அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் ஹசில்வுட் வீசிய ஓவரில் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசிவிட்டு அதே ஓவரில் கடைசி பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார் சூர்யகுமார்.

Image

சூர்யகுமாரின் இந்த அதிரடி இன்னிங்சை அடுத்து கோலி சரியாக முன்னெடுத்து அரைசதம் கடந்தவாறு அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 3வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது. அச்சமின்றி இமாலய இலக்கு தரும் அழுத்தத்தை பெரிதாக பொருட்படுத்தாமல், அதே வேளை உடன் விளையாடிய விராட் கோலிக்கு நெருக்கடியும் ஏற்படுத்தாமல் விளையாடிய சூர்யகுமாரின் நேற்றைய ஆட்டம் ரசிக்கும்படி இருந்தது.

Image

போட்டிக்கு பின்னர் பேசிய விராட் கோலி சூர்யகுமாரை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். “ஆடம் சம்பா ஒரு முக்கியமான பந்து வீச்சாளர். சூர்யா அவரது ஓவரில் அப்படி அடிக்க ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சமா டக்-அவுட்டை பார்த்தேன். ரோஹித் மற்றும் ராகுல் இருவரும் என்னிடம் சொன்னார்கள், ‘நீங்கள் தொடர்ந்து பேட்டிங் செய்யலாம்’ ஏனெனில் சூர்யா அவ்வளவு நன்றாக அடித்தார். நாங்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கத் துவங்கினோம். நான் என் அனுபவத்தை கொஞ்சம் பயன்படுத்தினேன். சூர்யாவுக்கு என்ன செய்ய விரும்புகிறோம் என்பதில் முழுமையான தெளிவு இருக்கிறது.

எந்த சூழ்நிலையிலும், எந்த நிலையிலும் பேட் செய்யும் திறமை அவரிடம் உள்ளது. அதை அவர் ஏற்கனவே காட்டியிருக்கிறார். அவர் இங்கிலாந்தில் சதம் அடித்தார், ஆசிய கோப்பையில் அழகாக பேட்டிங் செய்தார். இங்கேயும் அவர் அருமையாக விளையாடினார். கடந்த 6 மாதங்களாக, அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் தனது ஷாட்களை விளையாடுவதைப் பார்த்து நான் பிரமித்துப் போனேன்.” என்று பாராட்டி தள்ளினார் கோலி.

Image

சூர்யகுமாரின் இந்த மிரட்டல் பேட்டிங் பற்றி பேசிய ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் சூர்யகுமார்தான் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் ஆபத்தான வீரர் என்று குறிப்பிட்டுள்ளார். “களத்தின் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை சூர்யகுமார் யாதவ் இன்று காட்டியிருக்கிறார். இன்று அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அடுத்த டி20 உலகக் கோப்பையில் அவர்தான் ஆபத்தான வீரராக இருப்பார்” என்று கூறியுள்ளார் ஆண்ட்ரூ மெக்டொனால்ட்.

இப்படி சீனியர் வீரர்களின் பாராட்டு மழையில் நனைந்து வரும் சூர்யகுமார் இந்த போட்டியில் 69 ரன்களை குவித்ததன்மூலம் மேலும் ஒரு புதிய சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். நடப்பாண்டில் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குவித்த 69 ரன்களுடன் சேர்த்து இந்தாண்டில் 20 ஓவர் போட்டிகளில் அவர் எடுத்த ரன்களின் எண்ணிக்கை 682 ஆக உயர்ந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.