குஜராத் ஏக்தா நகரில் 2 நாள் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை காணொலி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய இந்தியா புதிய சிந்தனை மற்றும் புதிய அணுகுமுறையுடன் முன்னேறி வருவதாக பேசியுள்ளார்.

குஜராத் மாநிலம் ஏகத்தா நகரில் இன்று மற்றும் நாளை நடைபெறும் அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை டெல்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. மாநாட்டில் பேசிய பிரதமர், அரசியல் பின்புலம் கொண்ட நகர்ப்புற நக்சல்கள் மற்றும் வளர்ச்சிக்கு எதிரான விரோத கும்பல்கள் சர்தார் சரோவர் அணை கட்டும் பணியை முடக்கினர். இந்த திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என அவர்கள் பிரச்சாரம் செய்தனர். இந்த காலதாமதத்தால் பெரும் பணம் விரயமானது. இப்போது அணை கட்டி முடிக்கப்பட்டதும் அவர்களின் பிரச்சாரம் எவ்வளவு சந்தேகத்திற்குரியவை என்பதை நீங்கள் நன்றாக அறிந்துகொள்ள முடியும்.

image

வணிகத்தை எளிதாக்க, மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இது போன்ற திட்டங்கள், தேவையில்லாமல் முடங்கிப் போகாமலும், தடைபடாமல் இருப்பதையும் பார்த்துக் கொள்ளுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இத்தகைய நகர்ப்புற நக்சல்கள் இன்னும் செயலில் உள்ளனர். இப்படிப்பட்டவர்களின் சதியை முறியடிக்க நாம் ஒரு சமநிலையான அணுகுமுறையைக் கையாள வேண்டும். பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. எந்த சமரசமும் இல்லாமல் திட்டங்களுக்கான அனுமதி விரைவாக வழங்கப்பட்டால் மட்டுமே வளர்ச்சி வேகம் பெறும்.

பல்வேறு மாநிலங்களில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி சுமார் 6,000 விண்ணப்பங்களும், வன அனுமதிக்கு கிட்டத்தட்ட 6,500 விண்ணப்பங்களும் இன்னும் நிலுவையில் உள்ளன. மேம்பாலங்கள், சாலைகள் மற்றும் ரயில்வே திட்டங்கள் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க உதவுகின்றன என்பதையும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவோர் நினைவில் கொள்ள வேண்டும்.

image

இன்றைய புதிய இந்தியா புதிய சிந்தனை, புதிய அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது. இந்தியாவும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது. நமது காடுகளின் பரப்பளவு வேகமாக அதிகரித்து வருகிறது. நமது கடமைகளை நிறைவேற்றியதன் மூலம் தான் இன்று உலகம் இந்தியாவுடன் இணைந்துள்ளது. வனப்பகுதிகளை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளால் கிர் இன சிங்கங்கள் புலிகள், யானைகள், ஒற்றை கொம்புடைய காண்டாமிருகங்கள் மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. மத்தியப் பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு சீட்டா வகை சிறுத்தை வந்ததன் மூலம் ஒரு புதிய உற்சாகம் திரும்பியுள்ளது. இப்போது நாட்டின் கவனம் பசுமை வளர்ச்சியில், பசுமை வேலைகளில் உள்ளது. இந்த இலக்குகளை அடைய, ஒவ்வொரு மாநிலத்தின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பங்கு மகத்தானது.

image

நீர்வளம் அதிகமாக இருந்த மாநிலங்களில் நிலத்தடி நீர் மேலே இருந்து, இன்று தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதை காண்கிறோம். இந்த சவால் நீர் சம்பந்தப்பட்ட துறைக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் துறையும் இதை ஒரு பெரிய சவாலாக கருத வேண்டும். மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை தொடங்கலாம். காட்டுத்தீயை அணைக்கும் வழிமுறையானது வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இது மிகவும் அவசியமானது. தண்ணீர் பாதுகாப்பிற்காக கடுமையாக வாதிட்ட மகாத்மா காந்தியிடம் இருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நாம் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி முறையை கையாள வேண்டும்” என பிரதமர் மோடி பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.