விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் தங்கப்பாண்டியின் உறவினர்கள் உடலை 2 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால், காவல்துறையினரே உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வது போன்று அடக்கம் செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த தங்கமாரி,

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது இளைய மகன் தங்கப்பாண்டிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 13ம் தேதி அருப்புக்கோட்டை நகர காவல் துறையினர் எனது மகனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மறுநாள் செப்டம்பர் 14 தேதி அதிகாலையில் போனில் எங்கள் தொடர்பு கொண்ட காவல் துறையினர், விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு தெரிவித்தனர். அங்குச் சென்றபோது எனது மகன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

17ம் தேதி எனது மகனின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், 11 இடங்களில் காயம் இருந்ததாகவும், அவர் இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக அந்தக் காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. காவல்துறையினர் காவலில் வைத்து தாக்கியதன் காரணமாகவே, எனது மகன் உயிர் இழந்துள்ளார். ஆகவே சட்டவிரோத காவலில் உயிரிழந்த எனது மகனின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுகுமார குரூப் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு, ‘ இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஆனால் அவரது உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. அந்த கிராமத்திற்குள் நுழையவும் மக்கள் அனுமதிக்கவில்லை” எனத் தெரிவித்தது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ” உறவினர்கள் உடலை 2 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால், காவல்துறையினரே உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வது போன்று அடக்கம் செய்யலாம்” என உத்தரவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.