நம் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தில் இருக்கும் கெளதம் அதானி நாட்டில் செய்யாத தொழிலே இல்லை. துறைமுகம், மின் விநியோகம், மின் உற்பத்தி, நிலக்கரி உற்பத்தி, கட்டுமானம், காஸ் விநியோகம், பெட்ரோலிய உற்பத்தி, விமான நிலையத்தை நிர்வகித்தல், மின்சார டிரான்ஸ்மிசன், சமையல் எண்ணெய் தயாரிப்புபோன்ற அனைத்து விதமாக தொழிலையும் செய்துவருகிறார். மீடியா துறையில் நுழைய என்.டி.டி.வி நிறுவனத்தின் 29% பங்குகளை ஏற்கெனவே வாங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளையும் வாங்க முயற்சி செய்துவருகிறார்.

கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்ட கெளதம் அதானி, மும்பையில் வைர வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அதன்பிறகு தனது சகோதரனுக்குத் தொழிலில் உதவுவதற்காக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்குச் சென்றார். தனது சகோதரனுக்குத் தேவையான பி.வி.சி பைப்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்காக 1988-ம் ஆண்டு அதானி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பணிகளையும் செய்துவந்தது.

குடும்பத்துடன் அதானி

1994-ம் ஆண்டு குஜராத் அரசு முந்த்ரா துறைமுகத்தில் அதானி நிறுவனத்தின் சரக்குகளைக் கையாள சொந்தமாக துறைமுக வசதிகளை செய்துகொள்ளும்படி அதானி நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தது. அந்தத் துறைமுகத்தை அதானி தற்போது நாட்டின் மிகச்சிறந்த துறைமுகமாக வளர்ச்சியடைய செய்துள்ளார். இந்தத் துறைமுகத்திற்குத் தேவையான ரயில் மற்றும் சாலை வழித்தடங்களைத் தானே சொந்தமாக அமைத்த அதானி, அதற்கு தேவையான நிலத்தை 500-க்கும் மேற்பட்டோரிடம் பேசி வாங்கினார். அத்துறைமுகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலமும் அதானியின்கீழ் செயல்பட்டு வருகிறது.

அத்துடன், எண்ணெய் சுத்திகரிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலையையும் அதானி இதே முந்த்ரா துறைமுகத்தில் தொடங்கினார். 1994-ம் ஆண்டே தனது நிறுவனத்திற்கு தேவையான நிதியைப் பங்குச்சந்தை மூலம் திரட்டினார். 2009-2010-ம் ஆண்டில் மட்டும் அதானி தனித்தனி தொழிலுக்கு மொத்தம் 11 கம்பெனிகளைத் தொடங்கினார்.

இரண்டு மகன்களுடன் அதானி

2009ம் ஆண்டு மின் உற்பத்தியில் ஈடுபட்டார். மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை வெட்டி எடுக்கும் தொழிலையும் சேர்த்து செய்ய ஆரம்பித்தார். மின் உற்பத்தி மட்டுமல்லாது, மின்சாரத்தை எடுத்துச் செல்லும் டிரான்ஸ்மிசன் லைனையும் நாடு முழுவதும் அமைக்க ஆரம்பித்தார். அதானி தற்போது 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் வழித்தடத்தை அமைத்து பராமரித்து வருகிறார்.

சரக்குகளைக் கையாள கப்பல்களை வாங்கி குவித்த அதானி, மின் உற்பத்தியில் எதிர்காலத்தில் நிலக்கரிப் பற்றாக்குறை ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொண்டு சோலார் மின் உற்பத்தியிலும் ஈடுபட ஆரம்பித்தார். மத்திய அரசு நாட்டில் 2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் அளவுக்கு சோலார் மின் உற்பத்தியை தொடங்க இலக்கு நிர்ணயித்தது. மத்திய அரசின் அந்த வாய்ப்பை அதானி சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

குஜராத்தில் 2012ம் ஆண்டு நாட்டிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தியை அதானி தொடங்கினார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு அதானியின் வளர்ச்சி அபரீதமாக இருந்தது. புதிதாக நாடு முழுவதும் விமான நிலையங்களை பராமரிக்கும் தொழிலையும் தொடங்கினார்.

மத்திய அரசு நாட்டில் எட்டு விமான நிலையங்களைத் தனியார் மூலம் பராமரித்து வருகிறது. 2019-ம் ஆண்டிலிருந்து ஏழு விமான நிலையங்களை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் பராமரிக்கிறது.

நாட்டில் எந்த கம்பெனி விற்பனைக்கு வந்தாலும் அதனை அதானி விலைக்கு வாங்க ஆரம்பித்தார். முகேஷ் அம்பானி வெறும் பெட்ரோல் மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிலில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருந்தபோது அதானி நாட்டின் என்ன துறைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்து அத்துறையில் கவனம் செலுத்தினார்.

கவுதம் அதானி.

நம் நாட்டில் சிலிண்டர்கள் மூலம் காஸ் சப்ளை செய்யப்படும் போது வீடுகளுக்கு பைப் மூலம் காஸ் சப்ளை செய்யும் பணிகளையும் அதானி தொடங்கினார். தற்போது நாட்டில் 19 நகரங்களில் பைப் மூலம் காஸ் சப்ளை செய்யும் மிகப் பெரிய நிறுவனமாக அதானி டோடல் காஸ் நிறுவனம் இருந்து வருகிறது.

இந்திய பங்குச் சந்தையில் மட்டும் அதானி ஏழு நிறுவனங்களைப் பட்டியலிட்டு இருக்கிறார். இது தவிர, அதானிக்கு பட்டியலிடப்படாத கம்பெனிகள் எண்ணிக்கையில் அடங்காமல் இருக்கிறது.

2014-ம் ஆண்டு அதானியின் சொத்து 7.1 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், இப்போது சொத்தின் மதிப்பு ரூ.152 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்டு பங்குச் சந்தையின் வீழ்ச்சியால் தற்போது மூன்றாவது பெரிய பணக்காரனாக இருக்கிறார்.

கடந்த ஒரு ஆண்டில் பங்குச் சந்தையில் அதானி பங்குகளின் விலை அபரீதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதானி பவர் உட்பட அதானி பங்குச்சந்தையில் பட்டியலிட்ட ஏழு நிறுவனங்களின் பங்குகள் பல மடங்கு அதிகரித்ததால், அதானியின் சொத்தும் மளமளவென அதிகரித்தது.

அதானி குழுமம்

2020-ம் ஆண்டு அதானியின் சொத்து வெறும் 10 பில்லியன் டாலராகும். ஆனால், பங்குச் சந்தையில் நடந்த கிடுகிடு வளர்ச்சி காரணமாக அவரின் சொத்து 2022-ம் ஆண்டு 152 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், முதலீட்டாளர்கள் அதானி நிறுவனத்தின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை என்றே கூறவேண்டும்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அதானியின் சொத்து 14 மடங்கு அதிகரித்து யாரும் எட்ட முடியாத உயரத்திற்கு அதானி சென்று இருக்கிறார். ஆனால், அவரது சொத்து மதிப்பீட்டில் குளறுபடி இருப்பதாகவும், பல லட்சம் கோடி அளவுக்கு கடனை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் தயவால் அதானி கேட்கும் போதெல்லாம் வங்கிகள் கடனை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது. அதனை அதானி சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார்.

மும்பை தாக்குதல் மற்றும் கடத்தலில் உயிர் தப்பிய அதானியின் வளர்ச்சி அடுத்த சில மாதங்களில் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்த்தை அடைய நிறையவே வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள் பிசினஸ் வல்லுநர்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.