நடிகர் கமல்ஹாசனுக்கு இப்போதுதான் கோவை தெற்கு தொகுதி ஞாபகம் வந்திருக்கிறது எனவும், அந்தத் தொகுதி மக்களின் மனுக்களை வாங்கிக் கொண்டு சென்று, அதனை பிக் பாஸில் வைத்து தீர்க்கலாம் என்று நினைக்கக் கூடாது எனவும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

கோவை சிவனந்தா காலனி பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பிரதமரின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தெற்கு தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை எல்லாம் சீரமைத்து அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள், அவர்களுடைய வேண்டுகோளின்படி அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய உதவிகள் என ஒவ்வொரு அங்கன்வாடி சார்பாக நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். அந்த வகையில் ஒவ்வொரு அங்கன்வாடியாக, வரக்கூடிய நான்கு மாதத்தில் மகளிர் அணி சார்பாக நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

image

நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் உள்ள மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வரும் கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “ஒரு வருடம் கழித்து இப்போதான் தொகுதி ஞாபகம் வந்திருக்கிறது போல, மனுக்கள் வாங்கலாம், வாங்கிக் கொண்டு சென்று அதனை பிக் பாஸில் வைத்து தீர்க்கலாம் என நினைக்கக் கூடாது. மக்களுக்கு சேவை பண்ணனும் என்றால், நேரடியாக களத்தில் நின்று செய்யலாம், அதனை மக்கள் கிட்ட சொல்லட்டும். இப்போது தெற்கு தொகுதியை ஞாபகம் வைத்து வந்தது நல்ல விஷயம்.

மேலும் முதலமைச்சர், ராசா உடைய பேச்சை ஆதரிக்கிறாரா, அவரின் இந்தப் பேச்சை திராவிட முன்னேற்றக் கழகம் ஒத்துக் கொள்கிறதா என தெளிவுப்படுத்த வேண்டும். ஏனென்றால் மூத்த கட்சியின் நிர்வாகி, முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் இம்மாதிரி சட்டத்திற்கு எதிரான வகையில் பேசி இருக்கிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென பாஜக புகார் கொடுத்துள்ளது. காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாதிரியான பேச்சுகளை முதலமைச்சர் மவுனமாக வேடிக்கை பார்ப்பதை, ரசிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் இதற்கென்ன உரிய விளக்கத்தை அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்” எனக் கூறினார்.

image

இன்று சமூக நீதி நாள் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது, உண்மையான சமூக நீதி நாள் என்றால் பிரதமரின் பிறந்தநாளைத்தான் சமூகநீதி நாளாக கொண்டாட வேண்டும். ஏனென்றால் பெரியார் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு என்ன கனவு கண்டாரோ அதனை பிரதமர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். பெரியார் இருந்திருந்தால் பிரதமரின் பிறந்த நாளைத்தான் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட வேண்டுமென கூறியிருப்பார்” என தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.