வெளிநாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை நாடு திரும்ப உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை சோனியா காந்தியை நியமிக்க வேண்டும் என காந்தி குடும்ப விசுவாசிகள் அதற்கான ஆலோசனைகளை தொடங்கியுள்ளனர்.

கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட இதுவரை ராகுல் காந்தி ஒப்புதல் தெரிவிக்காத நிலையில், சோனியா காந்தி கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் அல்லது அடுத்த தலைவரை சோனியாவே நியமிக்க வேண்டும் என்பது சோனியா-ராகுல் ஆதரவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த தேவையில்லை எனவும், நியமன முறையில் அடுத்த தலைவர் பொறுப்புக்கு வர வேண்டும் எனவும், இவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவரே கட்சியின் அடுத்த தலைவராக வேண்டும் என்கிற கருத்தை இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ராகுல் காந்தி கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட முன்வராத நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கட்சியின் தலைவராக வேண்டும் என சோனியா காந்தி கருதுவதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்லும் முன் சோனியா காந்தி டெல்லியில் அசோக் கெலாட்டை சந்தித்து ஆலோசனை நடத்தினார் என அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இடையில் அவரது தாயார் இத்தாலி நாட்டில் காலமானதை தொடர்ந்து, சோனியா காந்தி இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

image

வெள்ளிக்கிழமை அவர் இந்தியா திரும்பியவுடன் காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்த ஆலோசனைகள் விறுவிறுப்படையும் என காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். ராகுல் காந்தி தற்போது “பாரத் ஜோடோ” யாத்திரையில் பங்கேற்று கேரளாவில் தங்கி உள்ளார். அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவது காங்கிரஸ் தலைமையை பொறுத்தவரை “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” போல என காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். கட்சியின் தலைமைப் பதவிக்கு வரும் நிலையில் அவர் ராஜஸ்தான் முதல்வர் பதவியை துறக்க நேரிடும். அப்படிப்பட்ட சூழலில் இளைய தலைவரான சச்சின் பைலட் அடுத்த வருடம் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வராக வாய்ப்பு கிட்டும்.

அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயங்கும் நிலையில், அவருக்கு பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்படும் என பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தன்னுடைய ஆதரவாளர் ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என அசோக் கெலாட் முன்வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மூத்த தலைவரான அவருடைய மகனுக்கு ராஜஸ்தான் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கலாம் என திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒருவேளை அசோக் கெலாட் கட்சித் தலைவர் பதவியை ஏற்க மறுத்தால், சோனியா காந்தி ஆதரவாளர்கள், முகுல் வாஸ்நிக் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். தலித் தலைவரான முகுல் வாஸ்நிக்குக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

image

சோனியா காந்தி வெள்ளிக்கிழமை நாடு திரும்பியவுடன் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரை சந்திப்பார்கள் எனவும் பிரியங்கா காந்தியும் ஆலோசனைகளில் பங்கேற்பார் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சார்பாக சோனியா காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் அல்லது புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. கேரளா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தகவல் கேட்டு உள்ளது.

இந்நிலையில் கட்சியின் அதிருப்தி தலைவர்களும் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றனர். சசிதரூர் அல்லது மணீஷ் திவாரி கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட வேண்டும் என அவர்கள் சார்பில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆனால் ராகுல் காந்தி ஒருவேளை தலைவர் பதவிக்கு போட்டியிட ஒப்புதல் தெரிவித்தால், வெளிப்படையாக அவருக்கு ஆதரவாக பல முக்கிய தலைவர்கள் அறிக்கை வெளியிடுவார்கள் எனவும் அத்தகைய சூழ்நிலையில், அதிருப்தி தலைவர்கள் தங்கள் சார்பாக வேட்பாளரை களம் இறக்குவது சரியாக இருக்காது எனவும் அவர்கள் கருதுகின்றனர்.

– புது டெல்லியிலிருந்து கணபதி சுப்ரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.