முதன் முதலாக டி20 உலகக் கோப்பை 2007 ஆம் ஆண்டில்தான் அறிமுகமானது. முதல் கோப்பையையே இந்திய கிரிக்கெட் அணி தட்டித் தூக்கியது. இதே நாளில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதும் கேப்டனாக தனது வெற்றிப்பயணத்தை தொடங்கினார் தோனி.

ஒதுங்கிக் கொண்ட சீனியர்கள்.. ஒத்துக் கொண்ட தோனி!

முதன் முதலாக டி20 உலகக் கோப்பை 2007 ஆம் ஆண்டில்தான் அறிமுகமானது. முதல் கோப்பையையே இந்திய கிரிக்கெட் அணி தட்டித் தூக்கியது. எல்லோரும் அறிந்ததே. இந்த உலககத்திற்கு மகத்தான ஒரு கேப்டனை அறிமுகம் செய்தது இந்த தொடர்தான். ஆம், தோனியை ஒரு சிறந்த கேப்டனாக வெளிக் கொண்டு வந்தது 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் தான். இந்த உலகக் கோப்பை தோனி கேப்டனாக ஆனதே தனி கதை தான்.

2003 ஆம் ஆண்டு மிகச் சிறந்த அணியை கொண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி வரை சென்றது கங்குலி தலைமையிலான இந்திய அணி. ஆனால், 2007 உலகக் கோப்பை தொடரில் டிராவிட் தலைமையிலான அணி படுதோல்வி அடைந்து தொடக்கத்திலேயே வெளியேறியது. அப்பொழுது இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. சச்சின், கங்குலி, டிராவிட் ஆகிய சீனியர்கள் கொண்ட அந்த அணிக்கு ஒரு இருண்ட காலம் அது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை முடிவடைந்த நிலையில், அதே ஆண்டு செப்டம்பரில் டி20 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் வந்தது.

சீனியர் வீரர்கள் யாரும் கேப்டன் பொறுப்பை ஏற்க முன் வரவில்லை. யுவராஜ், காம்பீர் போன்ற சீனியர் வீரர்கள் அந்த அணியில் இடம்பெற்ற போதும் கேப்டன் பொறுப்பு தோனியிடம் வந்து சேர்ந்தது. எல்லோரும் மறுத்ததால் அவருக்கு வந்து சேர்ந்ததா? இல்லை யாராவது ஒருவரை பலிகடா ஆக்க வேண்டிய நிலையில், தோனி வசம் வந்ததா என தெரியவில்லை. ஆனால், எல்லோரும் பின் வாங்கிய நிலையில், தோனி அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

image

நெருக்கடியை உருவாக்கிய முதல் போட்டி!

தோனிக்கு கேப்டனாக முதல் போட்டி 2007 டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டிதான். ஆனால், அந்தப் போட்டி வெறும் டாஸ் மட்டுமே போடப்பட்ட நிலையில் தொடர் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தியா – ஸ்காட்லாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. முதல் போட்டியில் வெற்றி பெறாததால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.

ஏனெனில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி இருந்தது. இந்திய அணி மோசமான தோல்வியை அடைந்தால் அது ஸ்காட்லாந்து அணிக்கு சாதகமாக அமைந்துவிடும். இது ஒரு புறம் இருந்தாலும் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியையே தோனியால் விளையாட முடியாமல் போனதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தடை இருந்த போதும் இன்று உலகின் தலைசிறந்த கேப்டன்களில் முதன்மையானவராக தோனி திகழ்கிறார்.

image

17.4-வது ஓவர் வரை இந்திய அணி வசமே போட்டி இருந்தது! ஆனால்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்தவாகவே இருந்தது. அதற்கு காரணம், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. 36 ரன்களுக்கு 4 விக்கெட் பறிபோன நிலையில், ராபின் உத்தப்பாவும், தோனியும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருந்தும் பாகிஸ்தான் அணியின் முகமது ஆசிப்பின் அற்புதமான பந்துவீச்சில் இந்திய அணியால் 150 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை.

142 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்ற பாணியில் 47 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்தாலும் கேப்டன் மிஸ்பா உல் ஹாக் மட்டும் அணியின் வெற்றி இலக்கை தோள் மேல் சுமந்து போராடினார். 17 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்த 18 பந்துகளில் 42 ரன்கள் தேவை. ஹர்பஜன் வீசிய 18வது ஓவரில் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் சாய்த்திருந்தார். அப்போது, 17.4 ஓவர்கள் வரை கிட்டதட்ட ஆட்டம் இந்திய அணியின் பக்கம் தான் இருந்தது. 14 பந்துகளில் 39 ரன்கள் தேவை. ஆனால், அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார் மிஸ்பா. இந்திய அணிக்கு சற்றே கலக்கம் உண்டானது.

ஆட்டத்தில் எப்போதுமே 19வது ஓவர்தான் முக்கியமானது. 19வது ஓவரில் ரன்களை கட்டுப்படுத்துவதன் மூலமே 20வது ஓவரில் வெற்றிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும். சீனியர் வீரர் அகர்கர் வீசினார். முதல் 3 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததால் அவர் மீது நம்பிக்கை வைத்து தோனி வீசச் சொன்னார். ஆனால், அந்த ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார் அகர்கர். மூன்று பவுண்டரிகள் விளாசப்பட்டது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ரீசாந்த கடைசி ஓவரை வீசினார். 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 4 பந்துகளில் 11 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆட்டம் டை ஆனது. கடைசி 2 பந்துகளில் ஒரே ஒரு ரன் மட்டுமே தேவை. களத்தில் அரை சதம் விளாசிய மிஸ்பா இருக்கிறார். ஆனாலும், இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை. 5வது பந்து டாட் ஆனநிலையில், கடைசி பந்தில் மிஸ்பா ஆட்டமிழந்தார். போட்டி சூப்பர் ஓவர் பவுல் அவுட் முறைக்கு சென்றது.

image

பவுல் அவுட் முறை:

அப்போது, போட்டி டை ஆனால் பவுல் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் சேவாக், ஹர்பஜன், உத்தப்பா ஆகியோர் பந்துவீசி க்ளீன் போல்ட் ஆக்கினர். ஆனால், பாகிஸ்தான் சார்பில் அராபட், குல், அஃப்ரிதி ஆகிய மூவருமே ஸ்டம்பை மிஸ் செய்தனர். அதனால் இந்திய அணி அசத்தலான வெற்றி பெற்றது. கேப்டனாக தோனி தலைமையிலான இந்திய அணிக்கு முதல் வெற்றி.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற தோனி செய்த சின்ன வித்தியாசமான விக்கெட் கீப்பிங்கும் காரணமாக அமைந்தது. இந்திய வீரர்கள் பந்துவீசும் போது தோனி ஸ்டம்பிற்கு பின் புறம் நேராகவும் நெருக்கமாகவும் நின்று கொண்டார். ஆனால், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சற்றே ஸ்டம்பிற்கு பின் புறம் நின்றார். ராபின் உத்தப்பா தன்னுடைய பேட்டி ஒன்றில் பவுல் அவுட் முறையில் ஸ்டம்பை தகர்த்தது குறித்து இந்த கருத்தினை வலியுறுத்தி இருந்தார். அத்துடன் தோனி மீடியமாக பந்துவீசும் பவுலர்களையே தேர்வு செய்தார். ஆனால், பாகிஸ்தானில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசினர்.

image

கேப்டனாக தோனி கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை படைத்துள்ளார். ஆனால், அதெற்கெல்லாம் துவக்கமாக அமைந்தது பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டி தான்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.