கனியாமூர் மாணவி மரண வழக்கில், அவரின் மரணத்திற்கு பாலியல் வன்கொடுமை காரணம் இல்லை’ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் அம்மரணம் தற்கொலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனியாமூர் மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஆக.26-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் முழு விவரம், இன்று வெளியானது. அதில் நீதிபதி குறிப்பிட்டிருப்பவை: “பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது. 

image

மாணவியின் தற்கொலை குறிப்பில் இருந்து கூட, ஆசிரியர்கள் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. நன்றாக படிக்க வேண்டும் என்று மாணாக்கருக்கு ஆசிரியர்கள் உத்தரவிடுவது என்பது ஆசிரியப் பணியின் ஒரு அங்கம். அதனால் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொருந்தாது. இந்த மரணத்தின் பின்னணியில் பாலியல் வன்கொடுமை இல்லை.

முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, பின்னர் இந்திய தண்டனை சட்டத்தின் மைனர் பெண்ணை தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவு, போக்சோ சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளை சேர்த்துள்ளனர். 12ஆம் வகுப்பு என்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு முக்கியமானது என்பதால், குடும்ப சூழ்நிலை குறித்து சிந்திக்காமல், தன் மனதை படிப்பில் செலுத்தி நன்றாக பிள்ளைகள் படிப்பார்கள் என்று பல பெற்றோர் தங்களது பிள்ளைகளை உணவு உறைவிட (ஹாஸ்டல் இருக்கும்) பள்ளியில் சேர்க்கின்றனர்.

image

மாணவி எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தின்படி, மனுதாரர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறவில்லை. நன்றாக படிக்கச் சொல்வது ஆசிரியர் பணியில் ஒரு அங்கமாகுமே தவிர, தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல. இரண்டு முறை செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் தமிழக மருத்துவ குழு எடுத்த முடிவுகளை நீதிமன்றம் நியமித்த ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் குழு ஏற்றுக்கொள்வதாக அதன் அறிக்கையிலிருந்து தெரியவருகிறது.

எனவே மாணவி மரணத்திற்கு காரணம் பாலியல் வன்கொடுமையோ அல்லது கொலையோ இல்லை. அவ்வாறு பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு மாறாக மாணவியின் பெற்றோர் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. மாணவி மாடியிலிருந்து விழும்போது மரத்தில் அடிபட்டதாலேயே உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் ஏற்பட்ட ரத்தக்கசிவுதான் உடலில் இருந்ததாக அறிக்ககளில் இருந்து தெரியவருகிறது.

image

பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்தது மாணவி ரத்தத்தின் கறை அல்ல என்றும், வண்ணப்பூச்சு என என நிபுணர்களின் அறிக்கை கூறுகிறது. மாணவியின் தற்கொலை கடிதம், சக மாணவிகளின் சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில், வேதியியல் பாடம் படிப்பதில் உயிரிழந்த மாணவி சிரமப்பட்டிருந்தது உறுதியாகி உள்ளது. அதுதொடர்பாக இரு ஆசிரியைகள் அறிவுரை கூறியுள்ளார். ஆனால் அவர்கள் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்ததும் தவறு” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.