தஞ்சாவூர் மாநகர மாவட்ட தி.மு.க செயலாளராக, தஞ்சை ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம் பதவி வகித்துவந்தார். சமீபத்தில் நடந்த உட்கட்சித் தேர்தலில் வாக்கெடுப்பு நடத்தாமல், முதல்வர் மு.க.ஸ்டாலினின் உறவினரான தஞ்சை மேயர் சண்.ராமநாதன் மாநகரச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

சண்.ராமநாதன்

நீலமேகத்தையும் சம்மதிக்க வைத்துத்தான் இந்த நியமனம் நடந்தது என்றாலும், “நீங்க கட்சிக்காக எவ்வளவு காலமா உழைச்சிருக்கீங்க… தன்னோட உறவினருக்குப் பதவி கொடுக்கணும் என்ற ஒரே காரணத்துக்காக உங்களை நீக்கியிருக்காங்களே… இது நியாயமா?” என்று அவரைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள் சில உடன்பிறப்புகள். இதை ஸ்டாலினிடமே கேட்டுவிடலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் நீலமேகம்.

பட்டாசு மாவட்டத்தில், சமீபத்தில் நடந்த அரசுக் கட்டட பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்த அமைச்சர், தான் கழற்றிவிட்ட செருப்பைத் தேடித் தடுமாறினார். இதை கவனித்த ஊராட்சி மன்றப் பெண் தலைவர் ஒருவர், அமைச்சரின் செருப்பைக் கையிலெடுத்து, அவர் அணிய உதவியிருக்கிறார். அடுத்த கணமே, பதறிச் சிதறிவிட்டார் அமைச்சர். “இந்த விஷயம் மீடியாக்காரங்களுக்குத் தெரியாம பாத்துக்கோங்கய்யா… யாராவது வீடியோ, போட்டோ எடுத்துருக்காங்களான்னு கேட்டுக்கோங்கய்யா” என அதிகாரிகளையும் உடன்பிறப்புகளையும் உஷார்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார் அமைச்சர். “திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி ஆனானப்பட்ட அமித் ஷா வரைக்கும் சிக்கிய சர்ச்சையில், நம்ம அமைச்சர் உஷாரா தப்பிச்சுட்டார் பார்த்தீங்களா?” என்று பெருமை பேசுகிறார்கள் உடன்பிறப்புகள்.

தமிழ்நாடு காவல்துறையில் டி.ஐ.ஜி ரேங்க்கில் இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதாம். அதன் காரணமாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மண்டலங்களில் டி.ஐ.ஜி பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் எழுந்திருக்கிறது.

டி.ஜி.பி அலுவலகம்

அதனால் `2009-ம் ஆண்டு பேட்ச்’ தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு எஸ்.பி அந்தஸ்திலிருந்து டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு வழங்க காவல்துறையில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். மொத்தம் 15 பேருக்குப் பதவி உயர்வு கொடுத்து காலிப் பணியிடங்களை நிரப்புவற்கான ஃபைல் டி.ஜி.பி-யின் டேபிளுக்கு ‘மூவ்’ ஆகியிருக்கிறதாம்.

தமிழ்நாட்டில் போதைக் கடத்தல் கும்பலுடன் தொடர்பிலிருக்கும் காவல்துறையினர்மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, போதைக் கும்பலுடன் தொடர்பிலிருப்பவர்களின் விவரங்களை உளவுத்துறையினர் சேகரித்து டி.ஜி.பி அலுவலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

காவல்துறை

முதற்கட்ட பட்டியலில், 13 அதிகாரிகளின் பெயர்கள் இருக்கின்றனவாம். அவர்களில் ஒருவர் ஐ.பி.எஸ் அதிகாரி, நான்கு பேர் டி.எஸ்.பி-க்கள், இருவர் இன்ஸ்பெக்டர்கள் மற்றவர்கள் சப்-இன்ஸ்பெக்டர்களாம். இது தவிர 40-க்கும் மேற்பட்ட காவலர்களின் பெயர்களும் பட்டியலில் இருக்கின்றனவாம். அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று டி.ஜி.பி அலுவலகத்தில் ஆலோசனை நடந்துகொண்டிருப்பதால் கிலியில் இருக்கிறார்கள் அந்தக் காவலர்கள்.

கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் தொகுதியில் கடந்த 2011-16 வரை அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர், எஸ்.காமராஜ். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சீட் எதிர்பார்த்துத் தீவிரமாகக் காய்நகர்த்தினார் காமராஜ். ஆனால், அப்போதைய அமைச்சரும், அ.தி.மு.க மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவருக்கு சீட் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்.

எஸ்.காமராஜ்

இதனால் விரக்தியில் இருந்த காமராஜைத் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, தி.மு.க-வுக்கு அழைத்து வந்தார் செந்தில் பாலாஜி. ஆனால், அந்தக் கட்சியிலும் அவர் எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அ.தி.மு.க ஒற்றைத் தலைமை பஞ்சாயத்தில் சமீபத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்ததால், ஓ.பி.எஸ்-ஸை சந்தித்த காமராஜ், அவருக்கு ஆதரவு அளித்திருக்கிறார். இப்படி மாறி மாறி கோலடித்த காமராஜ், `ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் சேர்ந்துவிடக் கூடாது… அப்படிச் சேர்ந்தால் மறுபடியும் நம்மை ஓரங்கட்டிவிடுவார்கள்’ என்று குலசாமியை வேண்டிக்கொள்கிறாராம்.

பா.ஜ.க-விலிருந்து விலகியவுடன் தி.மு.க-வில் சேர்ந்துவிடலாம் என்று நினைத்த டாக்டர் சரவணனுக்கு ஒரு முக்கியமான நிபந்தனை விதித்தாராம் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். “பா.ஜ.க-விலுள்ள ஐந்து மாவட்டத் தலைவர்கள், 10 மாநில நிர்வாகிகள், 5,000 தொண்டர்களை தி.மு.க-வுக்குக் கொண்டுவந்தால் மதுரையில் முதலமைச்சர் தலைமையில் விழா வைத்து உங்களை இணைத்துக்கொள்வோம். அதற்கான செலவுகளையும் நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்” என்பதே அந்த நிபந்தனையாம்.

டாக்டர் சரவணன்

இதற்குப் பரிகாரமாக கட்சியில் அவருக்கு முக்கியப் பொறுப்பு தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறதாம். இதற்காகத் தன் நட்பு வட்டத்திலுள்ள பா.ஜ.க நிர்வாகிகளிடம் ‘கேன்வாஸ்’ செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் சரவணன் என்கிறார்கள். `இவர் வந்தால் எங்கே நம்முடைய பதவி போய்விடுமோ…’ என்று ஏற்கெனவே மாவட்டச் செயலாளராக இருப்பவர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தகவல்.

அமைச்சர் பி.மூர்த்தியின் மகனுடைய திருமணம் செப்டம்பர் 9-ம் தேதி முதலமைச்சர் தலைமையில் மதுரையில் நடைபெறவிருக்கிறது. பாண்டிகோயில் அருகே பிரமாண்ட பந்தல் போடும் வேலைகளும் தொடங்கியிருக்கின்றன. தொகுதி மக்கள், கட்சித் தொண்டர்கள் என இரண்டு லட்சம் பேருக்குக் கறி விருந்து போடுவது மூர்த்தியின் திட்டம் என்கிறார்கள்.

பி.மூர்த்தி

திருமண வேலைகள் கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமின்றி, வணிகவரித்துறை, பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டிருக்கின்றனவாம். இரண்டு துறை அதிகாரிகளும் தீயாய் வேலை செய்துவருகிறார்கள்.

ரயில்வே மேம்பாட்டுக்கான பார்லிமென்ட் குழுவினர், அண்மையில் நீலகிரி மாவட்டத்துக்கு ஆய்வுக்காக வருகை தந்திருக்கிறார்கள்.

14 எம்.பி-க்கள் அடங்கிய இந்தக் குழுவின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் மூத்த எம்.பி ஒருவர் மட்டும் வராமல் ‘எஸ்கேப்’ ஆகியிருக்கிறாராம். வந்தவர்களெல்லாம் ஆய்வுப் பயணமாக அல்லாமல், ஃபேமிலி டூர் போலவே இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக்கொண்டதாகச் சொல்கிறார்கள். மூத்த எம்.பி ஒருவர் வராததும், வந்தவர்கள் ஊட்டியில் தடைசெய்யப்பட்ட குடிநீர் கேன்களை பெட்டி பெட்டியாக எடுத்துவந்ததும் சர்ச்சையாகியிருக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் சில உறுப்பினர் பதவிகள் காலியாக இருக்கின்றன. அந்தப் பதவிகளைப் பெற ஆளுங்கட்சியினர் பலர் குறிவைத்துக் காத்துக்கிடக்கிறார்கள். சிலர் லட்டுகளுடன் தயாராக இருக்கிறார்களாம்.

ஆனால், அந்தப் பதவிகளை நிரப்ப இதுவரை ஆளுங்கட்சியிலிருந்து கிரீன் சிக்னல் கிடைக்காததால் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள் கட்சிக்காரர்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.