துபாயில் இன்று வானிலை வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் இன்று இரவு  மோதுகிறது. கடந்த 2013-க்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நேரடி கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. அதனால் எப்போதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழும். அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கிட்டத்தட்ட உலகக் கோப்பை போட்டிக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

image

ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2018இல் இதே துபாயில் 50 ஓவர் தொடராக நடைபெற்ற ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் வங்கதேசத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வகையில் தற்போது நடப்புச் சாம்பியனாக களமிறங்கும் இந்தியா 8வது முறையாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இதுவரை 9 டி20 ஆட்டங்களில் மோதியுள்ளன. இந்தியா 6 வெற்றியும், பாகிஸ்தான் 2 வெற்றியும் பெற்றன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. வரும் அக்டோபா் மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில் ஆசியக் கோப்பை போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக உள்ளது.

image

இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான்  அணிகள் மோதும் போட்டி நாளான இன்று துபாயில் வானிலை எப்படி இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி துபாய் சர்வதேச மைதானம் அமைந்துள்ள பகுதியில் மழைக்கான வாய்ப்பு இல்லையென்றாலும் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும் என வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. துபாயில் இன்று வானிலை சற்று சூடாக இருக்கும். அதே நேரத்தில், இரவு 7.30 மணிக்கு வீரர்கள் விளையாட களத்திற்கு வரும்போது, அதிக வெப்பத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். இருப்பினும், போட்டியின் போது வீரர்கள் ஈரப்பதத்தின் சவாலை எதிர்கொள்வார்கள். தொடர் முழுவதும் பகல் நேர வெப்பநிலை 36 டிகிரி செல்ஷியசாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அக்யூவெதரின் அறிக்கைப்படி, ஈரப்பதம் சுமார் 30 சதவிகிதம் இருக்க வாய்ப்புள்ளது மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 26 கிமீ வேகத்தில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: ஆசிய கோப்பை ‘ஹை வோல்டேஜ்’ போட்டி: இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.