கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்… நாட்டையே உலுக்கிய அந்த இனக்கலவரத்தின் அனல், 20 ஆண்டுகள் கடந்தும் இன்னும் தகித்துக்கொண்டிருக்கிறது.

கடந்த 2002-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி. உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது.

கோத்ரா ரயில் எரிப்பு…

குஜராத் மாநிலம் கோத்ரா நகருக்கு வந்தபோது, அந்த ரயிலில் கரசேவகர்கள் பயணித்த இரண்டு பெட்டிகள் மீது மர்ம நபர்கள் தீ வைத்தனர். அங்கு பற்ற வைக்கப்பட்ட ஆதிக்க தீ, பல மாநிலங்களிலும் வன்முறையாக வெடித்து, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிக்க காரணமானது.

அப்போது அரங்கேறிய கொலை, கொள்ளை, வன்முறை நிகழ்வுகள், இந்திய வரலாற்றில் அழியாத கரையாகவும் ஆறாத வடுவாகவும் மாறின. அதில், அகமதாபாத் ரந்திக்பூரில் நடந்த சம்பவம், மனித மாண்பைக் கூறுபோடும் வெறியாட்டம். ரந்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற பெண்ணின் குடும்பத்தினர் 13 பேரைக் கடுமையாகத் தாக்கிக் கொன்றது கலவர கும்பல் ஒன்று. மேலும், கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அந்தக் கும்பல், பானுவின் குழந்தையையும் இரக்கமின்றி கொலை செய்தது.

உச்ச நீதிமன்றம்

அந்தக் குடும்பத்தினருக்கு நிகழ்ந்த அநியாயம், மனிதநேயத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. இந்தக் கொடுங்குற்றத்தைச் செய்த 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது, மும்பை செசன்ஸ் நீதிமன்றம். பின்னர், குஜராத் அரசு அமைத்த சிறப்புக் குழு, குற்றவாளிகள் 11 பேரின் தண்டனை காலத்தைக் குறைத்து, அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யப் பரிந்துரை செய்தது. அதை குஜராத் அரசும் ஏற்றுக்கொண்டது. பிறகென்ன, அந்தக் குற்றவாளிகள் 11 பேரும் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.

குஜராத் அரசின் இந்த முடிவானது, ஆட்சியும் அதிகாரமும் கையிலிருந்தால், சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் என்பதற்கு முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து. இந்தக் கருத்தை வலியுறுத்தும் நடுநிலையாளர்கள், சட்டத்தின் மீதான நம்பிக்கையை நீர்த்துப்போகச் செய்வதுடன், குற்றம் செய்பவர்களுக்குத் துணை போவதாகக் குஜராத் அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர்.

குஜராத் கலவரம்

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் குஜராத் அரசின் இந்த முடிவுக்கு எதிராகச் சிலர் ஒன்றிணைந்தனர். அவர்களின் மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதற்கான பரிசீலனைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விஷயத்தில், நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசினோம்.

“ஆயுள் தண்டனை என்பது ஆயுட்காலம் முழுக்க குற்றவாளிகள் சிறைவாசம் அனுபவிப்பதுதான். அந்தத் தண்டனைதான், இதுபோன்ற குற்றத்தை யாரும் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தும் பாடம். பல வழக்குகளில், ஆயுள் தண்டனை பெற்றவர்களின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு, முன்கூட்டியே குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் யாரையெல்லாம் விடுதலை செய்யலாம் என்பதற்கு எளிமையான வரையறைகள் இருக்கின்றன.

குஜராத் கலவர வழக்கு…

தற்காப்புக்காக அல்லது ஆத்திரமூட்டும் செயலுக்கான செய்த எதிர்வினை பெரிய விபரீதத்தை ஏற்படுத்தியிருக்கலாம். வன்முறையை ஏற்படுத்தும் நோக்கமின்றியும், திட்டமிட்டுச் செய்யாத ஒரு செயலும் பெருங்குற்றமாக மாறியிருக்கலாம். இதுபோன்ற குற்றங்களைச் செய்து தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளின் நன்னடத்தை மற்றும் அவர்கள் செய்த குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் அவர்களுக்கான தண்டனை குறைக்கப்படும். இதைத் தவறாகப் பலரும் கருதப்போவதில்லை. ஆனால், பில்கிஸ் பானுவுக்கும் அவரின் குடும்பத்துக்கும் நிகழ்ந்தது மிகப்பெரிய அநீதி. இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு, தண்டனை குறைப்பு செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பில்கிஸ் பானுவுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் நேர்ந்த அநீதிக்கு ஏற்ப, பெருங்குற்றம் செய்த வேறு சிலருக்குத் தண்டனைக் குறைப்பு எதுவும் வழங்கப்படாமல் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆனால், பில்கிஸ் பானு வழக்கில், மனித இனத்துக்கு எதிரான வன்முறைக் குற்றத்தைச் செய்த குற்றவாளிகளின் தண்டனையைக் குறைத்த குஜராத் அரசின் முடிவுக்குப் பின்னால், எவ்வளவு பெரிய சூழ்ச்சி இருக்கிறது என்பதை எளிதில் உணர முடிகிறது.

வழக்கறிஞர் அஜிதா

அரசு அமைத்த குழுவில் இடம்பெற்ற ஒருவர், ‘குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கர்மவினையின் அடிப்படையில் இவர்கள் பல்வேறு நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். மத நம்பிக்கையையும் தனி நபர் செய்த குற்றத்தையும் ஒப்பிடுவதும், ஒரு சமூகத்தினரை உயர்த்திப் பிடிக்க, சிறுபான்மை சமூகத்தினரை மட்டுப்படுத்துவதும் நியாயமானதா? இந்தப் பேச்சுகளெல்லாம், சட்டத்துக்கு முன்பு இவர்களுக்கு எந்த விதமான நல்ல விழுமியங்களும் இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றன.

நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் தண்டனை காலத்தைக் குறைப்பது அல்லது தண்டனைக் காலத்துக்கு முன்பே அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம், சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கும், ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும்தான் இருக்கிறது. இந்த வகையில், தண்டனை பெற்றவர்கள் பல காரணங்கள் கூறி கருணை மனுக்களை முன்வைக்கலாம். இதுபோன்ற தருணங்களில், தண்டனை பெற்றவர்கள் மற்றும் அவர்கள் செய்த குற்றம், சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம், குற்றத்தின் தன்மையைப் பொறுத்தே முடிவு எடுக்கப்பட வேண்டும்” என்றவர், உச்ச நீதிமன்றத்தில் விசாரணையின் போக்கு எப்படி இருக்கும் என்பதையும் விவரித்தார்.

“இந்த வழக்கில் குற்றவாளிகளின் தண்டனையைக் குறைத்தது தவறான நடைமுறை என்று கூறும் சிலரின் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. மிக அரிதாக நடக்கும் மேல்முறையீட்டு வழக்குகளில் இதுவும் ஒன்று. மாநில அரசு தனக்கிரும் அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டத்தின்படி சரியாகக் கையாண்டிருக்கிறதா என்பதை உறுதி செய்வதுதான் இந்த மேல்முறையீட்டு வழக்கின் சாராம்சமாக இருக்கும்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் என்பதாலேயே அங்கு எல்லாமே சரியாக நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. இந்த மனுக்களை விசாரிக்கும் நீதிபதிகளின் பார்வை, இந்த வழக்கை அவர்கள் அணுகும் விதம் என பல காரணிகளைப் பொறுத்துதான் தீர்ப்பு வெளியாகும். சரியான முறையில் விசாரணை நடைபெற்று, மனசாட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நீதிபதி அல்லது அமர்வு தீர்வு சொல்லும்பட்சத்தில்… இந்த மோசமான குற்றத்துக்குக் காரணமானவர்களை விடுதலை செய்யும் குஜராத் அரசின் முடிவு தவறானது என தீர்ப்பு வெளியாகலாம். அப்படித் தீர்ப்பு வெளியானால், குஜராத் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை குறைப்பு செய்ததை ரத்து செய்யலாம்.

குஜராத் அரசின் முடிவு சரியானது என தீர்ப்பு வெளியானால், குற்றவாளிகளின் தண்டனைக் குறைப்பு உறுதிசெய்யப்படும். தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அது இந்தியா முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்கிறது அரசியல் சாசனம். அதனை, குஜராத் அரசு தற்போது எடுத்திருக்கும் இந்த முடிவு, மிகவும் துச்சமாக மதிப்பதுபோல அமைகிறது. மிக மோசமான முன்னுதாரணத்துக்கு இந்த முடிவு காரணமாகிவிடக் கூடாது” என்று முடித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.