பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு உட்பட்ட புனெர் மாவட்டத்த்தில் சீக்கியர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆக்ஸ்ட் 20ஆம் தேதி மாலை ஒரு சீக்கிய பெண் கடத்தப்பட்டு வலுகட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது.

குருசரண் சிங் என்பவரிடன் மகள் தினா கவுர் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், தன்னை துன்புறுத்திய நபரையே உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவலர்களின் கட்டாயத்தின்பேரில் திருமணமும் செய்துவைக்கப்பட்டுள்ளார். இந்த பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறையை எதிர்த்து, நியாயம் கேட்டு நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சீக்கியர் ஒருவர் கூறுகையில், ‘’நாங்கள் இங்கு ஒடுக்கப்பட்டு தாக்கப்படுகிறோம் என்பதை பாகிஸ்தான் மக்கள் மற்றும் வெளிநாடு வாழ் மக்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் எங்கள் மகளை திரும்ப பெறும்வரை இந்த போராட்டம் தொடரும். அவள் உள்ளூர் நிர்வாகத்தின் துணையுடன் வலுகட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார். மேலும் மதம் மாற்றப்பட்டு திருமணமும் செய்துவைக்கப்பட்டுள்ளார்.

image

அவர்கள் காவல் நிலையத்தில் இதுவரை எங்கள் புகாரை முதல் தகவல் அறிக்கையாக பதிவுசெய்யவில்லை. உயர் அதிகாரிகளை சந்தித்துவிட்டோம். அவர்களும் எந்தவிதமான திருப்திகரமான பதிலையும் எங்களுக்கு அளிக்கவில்லை. அவர்களும் இந்த குற்றத்தில் பங்காளிகள்தான். உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் எங்கள் மகள் ஆவணங்களில் கையெழுத்துப்போட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக போராட உலகளவிலுள்ள சீக்கிய சமூகத்தினரை எங்களுடன் இணைய அழைக்கிறேன். எங்களுடைய பிள்ளை எங்களுக்கு திரும்ப கிடைக்கும்வரை இந்த போராட்டத்தை தொடருவோம்’’ என்று கூறியுள்ளார்.

மற்றொரு சீக்கிய போராட்டக்காரர் கூறுகையில், ‘’நாங்கள் எங்கள் அண்டை இஸ்லாமியர்களுடன் நல்ல உறவை கொண்டுள்ளோம். ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் மற்றும் எங்கள் மகளை கட்டாய மதமாற்றம் செய்தல் போன்றவற்றை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுக்காக குரல் கொடுத்து, நாங்கள் நீதி பெற உதவ இஸ்லாம் மற்றும் பஷ்துன் சகோதரர்களுக்கு அழைப்புவிடுக்கிறேன். நீங்கள் எங்களுடன் நிற்காவிட்டால் நாங்கள் இங்கு இருக்கமாட்டோம்’’ என்று கூறினார்.

image

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிறைய சீக்கிய குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் தொழிலதிபர்களாக உள்ளனர். பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வாழும் சிறுபான்மை சமூகத்தினர்களான சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அவ்வப்போது இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுடைய பெண் பிள்ளைகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அந்த நபருக்கே கட்டாய திருமணமும் செய்துவைக்கப்படுகின்றனர். இதனால் தங்கள் மகள்களை பாதுகாக்க நிறைய குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.