உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, உலக அழகிப் போட்டி. மிஸ் வேர்ல்டு, மிஸ் யுனிவர்ஸ் உள்ளிட்ட பல பிரிவுகளாக அழகுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், பிரபஞ்ச அழகிப் போட்டியில் இனி திருமணமான பெண்களும் தாய்மார்களும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு, அடுத்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது.

Miss Universe Australia

போட்டியாளர்கள் 18 – 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், திருமணம் ஆகாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் பிரபஞ்ச அழகிப் போட்டியில் கலந்துகொள்வதற்கான அடிப்படை விதியாக இருந்து வந்தது. மேலும், போட்டியாளர்கள் குழந்தை பெற்றவராக இருக்கக் கூடாது. பிரபஞ்ச அழகியாகப் பட்டம் சூடும் வெற்றியாளர், அடுத்த வெற்றியாளர் தேர்வுசெய்யப்படும் வரையிலும் திருமணம் செய்துகொள்ளவோ அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளவோ கூடாது. இதுபோன்ற வரையறைகள், பெண்களை அழகுப் பொருளாக மட்டுமே சித்திரிக்கும் பிற்போக்குத்தனம் என்று கடந்த காலத்தில் எதிர்மறை விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், இதுபோன்ற நடைமுறைகளுக்கும் பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது, பிரபஞ்ச அழகிப் போட்டியை நடத்தும் நிர்வாகம். திருமணமான பெண்களும் தாய்மார்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவித்துள்ள அந்த நிர்வாகம், “ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவுகள், அவரின் வெற்றிக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்” என்று மாற்றத்துக்கான அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது.

அழகிப் போட்டி : Miss World 2019 finalists

இதனால், அடுத்த ஆண்டு மடகாஸ்கர் மற்றும் ரோமானியாவில் நடைபெறவிருக்கும் 75-வது பிரபஞ்ச அழகிப் போட்டியிலிருந்து, திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு இடமின்றி பலதரப்பட்ட பெண்களும் இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார், 2020-ம் ஆண்டு பிரபஞ்ச அழகியாகத் தேர்வான ஆண்ட்ரியா மெஸா. அழகிப் பட்டம் சூடிய சில மணி நேரத்திலேயே, ஆண்ட்ரியா திருமணம் ஆனவர் என்ற குற்றச்சாட்டுகள் கிளம்பி அப்போது சர்ச்சைகள் வெடித்தன. இந்த நிலையில், “குடும்பப் பெண்களுக்கும் வழிகளைத் திறந்துவிடுவதற்கான நேரம் இது” என்று ஆண்ட்ரியா மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அனைவருக்குமான பாதைகள் திறக்கட்டும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.