இந்தியாவின் மருத்துவ தலைநகராக சிறந்து விளங்குகிறது சென்னை. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு நிகரான மருத்துவத் தொழில்நுட்பங்களைக் கொண்ட உயர்தர மருத்துவமனைகள் சென்னையில் நிறைந்திருக்கின்றன. குறைந்த விலையில் தரமான சிகிச்சை என்கிற அடிப்படையில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சென்னைக்கு சிகிச்சைக்கென வருகின்றனர். இந்தியாவின் மருத்துவத் தலைநகராக சென்னை உருப்பெற்றது குறித்து பார்க்கலாம்.  

சென்னை இந்தியாவின் மருத்துவ மையமாக உருவாகியிருப்பதற்குப் பின் நீண்ட நெடிய வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது என்கிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத். 

டாக்டர் ரவீந்திரநாத்

“தமிழர் பண்பாடே மருத்துவத்தை முன் நிறுத்துவதாகத்தான் இருந்திருக்கிறது. தமிழர் மருத்துவ முறை பற்றிய குறிப்புகள் சங்ககால இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. இந்திய அளவில் ஆயுர்வேதம் செல்வாக்கு செலுத்திய போது, தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் தழைத்தோங்கியிருந்தது. சிகிச்சை என்பது அறிவியல்பூர்வமாக இல்லாமல் மூட நம்பிக்கை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்திலேயே நோய் என்றால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்கிற எண்ணம் தமிழர்களிடம் மேலோங்கியிருந்தது. 

பல்லவர்கள், பிற்கால சோழர்கள் ஆட்சிக்காலத்திலேயே மருந்தகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வேத பாடசாலையில் மருத்துவ சிகிச்சையளிக்கிற பாரம்பர்யம் தமிழ்நாட்டுக்கு இருந்திருக்கிறது.1600களில் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுக்குள் வந்த பிறகு 1664ம் ஆண்டு முதல் மருத்துவமனையை சென்னையில்தான் ஒரு வாடகைக் கட்டடத்தில் அமைக்கிறார்கள். கிழக்கிந்தியக் கம்பெனி பிரிட்டிஷ் அரசாக மாறிய பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்தன. 1880களில் சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, எலும்பு, கண் மருத்துவமனை, தொழுநோய் மருத்துவமனை ஆகியவற்றை சென்னையில் தொடங்கினார்கள்.

1842ம் ஆண்டு மதராஸ் தவிர இந்தியாவின் பிற மாகாணங்களில் 6 மருத்துவமனைகள்தான் இருந்தன. ஆனால் மதராஸ் மாகாணத்தில் 30 மருத்துவமனைகள் இருந்திருக்கின்றன. 1880ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் 218 மருத்துவமனைகள் இருந்தன. அடுத்த ஒரே ஆண்டில் 7 மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு 1881ம் ஆண்டு மருத்துவமனைகளின் எண்ணிக்கை 225 ஆக அதிகரித்திருக்கிறது. மதராஸ் மாகாணத்தின் தலைநகரான சென்னையில்தான் அவற்றில் பெரும்பாலான மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. நவீன அறிவியல் மருத்துவத்தை மக்கள் நம்பி ஆதரித்ததால் மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாகவும் தரம் உயர்த்தினார்கள். இதனால் தமிழ்நாட்டிலிருந்து மருத்துவர்கள் அதிகம் பேர் உருவாகினார்கள்.

மருத்துவர்கள்

சுந்தந்திரத்துக்குப் பின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவீன இந்தியாவை உருவாக்க முனைகிறார். அதன் விளைவாக எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளைக் கொண்டு வந்ததோடு மாநில அரசுகளையும் மருத்துவத்துறை சார்ந்து ஊக்குவிக்கிறார். மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாட்டில் காமராஜர் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கினார். பின்னர் திராவிடக் கட்சிகளும் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்கி, இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவக்கல்லூரிகள் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தலைநகரான சென்னை அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடனான மருத்துவமனைகளைக் கொண்டு மருத்துவத் தலைநகராகத் திகழ்கிறது” என்கிறார் ரவீந்திரநாத்.

“உலகத்தரத்திலான சிகிச்சைகளை வழங்கும் மருத்துவமனைகள் சென்னையில் இயங்குகின்றன” என்கிறார் ஃபோர்டிஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல இயக்குநர் வெங்கட பண்டிதர் நெல்லுரி…

வெங்கட பண்டித நெல்லுரி

“உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதத்திறன் ஆகிய மூன்றும் இருந்தால்தான் உலகத்தரத்திலான மருத்துவத்தைக் கொடுக்க முடியும். சென்னையில் மருத்துவமனைகளுக்கான உட்கட்டமைப்பு வலுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே மருத்துவத் தொழில்நுட்பத்தின் விரிவாக்கம் சென்னையில்தான் தொடங்கியது. இன்றைக்கு மேலை நாடுகளுக்கு இணையான அத்தனை தொழில்நுட்பங்களும் இங்கிருக்கின்றன. தரமான சிகிச்சையின் காரணமாக சென்னை பலராலும் ஈர்க்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர சிகிச்சைகளுக்கு சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் அந்த அளவிலான தொழில்நுட்பம் இல்லை. நோயாளிகளை அரவணைக்க்கும் அணுகுமுறையும் கூட சென்னையை நோக்கி வருவதற்குக் காரணமாக அமைகிறது.

ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், இலங்கை என மருத்துவத்துறை உட்கட்டமைப்பு வளராத நாடுகளில் இருந்தும் நீண்ட காலமாக சிகிச்சைக்கு சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மருத்துவத் தொழில்நுட்ப வசதி உச்சத்தில் இருந்தாலும், போதிய அளவில் மருத்துவர்கள் எண்ணிக்கை இல்லாததால் எந்த சிகிச்சையானாலும் காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டிய நிலை. அதுவே இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு வந்தால் எவ்வளவு பெரிய அறுவை சிகிச்சையாக இருந்தாலும் உடனே மேற்கொள்ளப்படும். இந்தக் காரணத்துக்காக சென்னை, மும்பை, டெல்லி நகரங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். மேலை நாடுகளோடு ஒப்பிடுகையில் மருத்துவச் செலவு சென்னையில் மிக மிகக்குறைவு.

அறுவை சிகிச்சை

சென்னையில் 5 லட்சத்தில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சைக்கு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை வசூலிக்கப்படும். இது போன்ற பல காரணங்களால் சென்னையை நோக்கி மருத்துவப் பயணம் மேற்கொள்கின்றனர். சென்னையில் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைக்கப்படும் திட்டத்தில் அதனை ஒட்டியே மருத்துவமனைகளால் ஆன மையத்தை உருவாக்க வேண்டும் என்கிற திட்டமும் வகுக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து சிகிச்சைக்காக வருகிறவர்கள், இறங்கிய உடனே மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான ஏற்பாடாக இதனைச் செய்கின்றனர்.” என்கிறார் வெங்கட பண்டிதர் நெல்லுரி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.