காந்தியும் பாரதியும் தங்களது வாழ்வில் ஒரே ஒரு முறைதான் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்திப்பு நடந்த இடம் பற்றியும் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

சென்னையின் பரபரப்பான சாலைகளில் ஒன்று கதீட்ரல் ரோடு. இந்த சாலை சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய களமாக விளங்கியதாக வரலாறு கூறுகிறது. குறிப்பாக மூதறிஞர் ராஜாஜி இல்லமும், நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் இல்லமும் இந்த சாலையில்தான் அமைந்திருந்தது. அதேப்போல, “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” என கூக்குரலிட்ட முண்டாசுக்கவி பாரதியும், தேசப்பிதா மகாத்மா காந்தியும் தத்தம் வாழ்வில் ஒரே ஒருமுறைதான் சந்தித்தனர். அந்த நிகழ்வு நடந்ததும் இந்த சாலையில்தான்.

imageimage

தற்போது கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள வெல்கம் ஹோட்டல் இருக்கும் இடத்தில்தான் மூதறிஞர் ராஜாஜியின் இல்லம் இருந்தது. 1919ல் ராஜாஜியின் அழைப்பை ஏற்று அன்றைய மெட்ராசுக்கு வந்த காந்தி விருந்தாளியாக தங்கிய இடம் ராஜாஜியின் இல்லம். அங்கேதான் காந்தியை பாரதி சந்தித்து, தான் அன்றைக்கு திருவல்லிக்கேணி கடற்கரையில் பேசவிருந்த கூட்டத்துக்குத் தலைமைதாங்க முடியுமா என்று கேட்டதாகவும், காந்தி வேறு ஒரு வேலை இருப்பதாகச் சொன்னதும், அவர் தொடங்கவுள்ள இயக்கத்தை வாழ்த்திவிட்டுப் பாரதி புறப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பாரதி புறப்பட்ட பின் இவர் யார் எனக் கேட்ட காந்திக்கு, ‘அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி’ என்று ராஜாஜி விடை சொல்ல.. அதைக் கேட்ட காந்தி, ‘இவரைப் பாதுகாக்க வேண்டும்’ என்றார் எனவும் வ.ரா. விவரிக்கிறார். இந்த சம்பவம் உண்மையிலேயே நடந்ததா என சிலர் கேள்வி எழுப்பும் நிலையில், ராஜாஜி, பத்பநாபன் ஆகியோர் தங்களுடைய நூலில் விவரித்துள்ளதாக கூறுகிறார் பாரதி பற்றிய ஆய்வு மேற்கொண்டு வரும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மணிகண்டன்.

image

ராஜாஜியின் இல்லத்தில் காந்தி தங்கினார் என்பதற்கான ஆதாரமாக இன்றும் வெல்கம் ஹோட்டலின் நுழைவு வாயிலில் ஒரு கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கதவடைப்பு போராட்டம் செய்து சத்தியாகிரகத்தில் ஈடுபட வேண்டும் எனும் எண்ணம் இந்த இல்லத்தில் இருந்தபோதுதான் காந்திக்கு தோன்றியதாகவும் அதை நினைவுகூறும் வகையில் இந்தக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளதாம்.

ராஜாஜியின் இல்லத்தில் சுதந்திரப் போராட்டம் தொடர்பான முக்கிய நிகழ்வுகள் நடந்தேறி இருக்கிறது என்பதற்கான சாட்சியாக இந்த கல்வெட்டு இன்றளவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. காந்தி தமிழகம் வந்தபோது மதுரையில்தான் தனது மேலாடையை துறந்தார், அதேபோல ராஜாஜியின் இல்லத்தில்தான் ஒத்துழையாமை இயக்கத்திற்கான ஒரு தூண்டுகோல் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

காந்தியின் ஒவ்வொரு வருகையும் சுதந்திரப் போராட்டத்தின் தாக்கத்தை மேலும் வீரியம் ஆக்கியது என்பதற்கான சாட்சியாக இந்த வரலாறு திகழ்கிறது. நாள்தோறும் கதீட்ரல் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் நிலையில் இனி ஒருமுறை நின்று மகாகவி, மகாத்மா, மூதறிஞர் போன்றோர் சந்தித்த இடத்தை பற்றியும் நினைவில் கொள்ளலாம்.

-பால வெற்றிவேல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.