”அன்னிக்கு நடந்த சம்பவத்தை இன்னிக்கு நெஞ்சைச்சாலும் குலை நடுங்குது” என்றார் ஒரு பெரியவர். ”நாங்களும் மனுஷங்கதானே, காடு மேடுன்னு உழைக்கிறோம். புள்ளைங்கள படிக்க வச்சு முன்னேத்தணும், எல்லோரையும் போல வாழணும்னு நெனைக்கிறோம், இது குத்தமா? அன்னிக்கு எந்த பாவமும் செய்யாத மூனு பேரை துள்ள துடிக்க கொன்னு போட்டாங்களே” என்று மருகினார் ஒருவர்.

கொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

கச்சநத்த்தில் 2018 மே 28 இரவு கோயில் திருவிழா நடந்து கொண்டிருந்தபோது ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளன்று சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற வளாகத்தில் இந்த கேவல்களை கேட்க முடிந்தது. கடந்த நான்கு வருடங்களாக கச்சநத்தம் மக்கள் இப்படித்தான் அரற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வழியாக கச்சநத்தம் கொலை வழக்கில் 3 பெண்கள் உட்பட 27 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது சிவகங்கை நீதிமன்றம்.

கச்சநத்தம் கிராமத்தில் 4 வருடங்களுக்கு முன் ஆதிக்க சாதியினரால் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில்தான் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அச்சம்பவத்தின் காயம் ஆறாமல் மனதளவிலும், உடலளவிலும் வேதனையுடன் நாட்களை கழித்து வரும் மக்களுக்கு சிறு மருந்தாய் அமைந்துள்ளது தீர்ப்பு. பல்வேறு அச்சுறுத்தல், குறுக்கீடுகளைக் கடந்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சிறப்பாக வழக்காடி இந்த தீர்ப்பு பெற காரணமாகியுள்ளார்கள்.

பதற்றத்துடனும் அச்சத்துடனும் போலீஸ் பாதுகாப்புக்கு நடுவே சொந்த ஊரிலேயே அகதிகள் போல வசித்து வரும் பாதிக்கப்பட்ட மக்கள், இத்தீர்ப்புக்கு பின் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிய கச்சநத்தம் கிராமத்துக்கு சென்றோம்.

கச்சநத்தம் கிராமம்

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பாச்சேத்தியிலிருந்து இடதுபக்கமாக பிரிந்து செல்லும் சாலையில் பயணிக்கும்போதே பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் செல்வதுபோல் அமானுஷ்ய சூழல் தெரிகிறது. வழியெங்கும் தென்படும் போலீசார் கலக்கத்தை உண்டாக்குகிறார்கள். சிறிது நேரத்தில் வந்துவிடுகிறது கச்சநத்தம்.

கிராமத்துக்குள் நுழையும் கிளைச்சாலையில் காத்திருக்கும் போலீஸ் அதிகாரிகள், வருகின்றவர்களை விசாரித்துவிட்டுத்தான் அனுமதிக்கிறார்கள். செல்லும் வழியில் கொல்லப்பட்ட 3 பேரின் சமாதி வயலுக்குள் அமைப்பட்டுள்ளது. அமைதியாக காட்சியளிக்கும் அந்த நினைவிடம் நடந்த கொடூர சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. பட்டியல் சமூகத்தினரின் 40 வீடுகள் அமைந்துள்ள கச்சநத்தத்தை சுற்றிலும் 40 போலீஸ்காரர்கள் தினமும் 3 ஷிப்டாக பாதுகாப்புக்கு உள்ளனர்.

நான்கு வருடமாக அங்கிருக்கும் பள்ளிக்கூடத்தை போலீஸ் முகாமாக மாற்றியுள்ளனர். நம்மை பார்த்ததும் தடுத்து நிறுத்தி, ”ஏன் வந்தீர்கள், எதற்கு வந்தீர்கள்?” என்று விசாரிக்க, எடுத்து சொன்ன பின்பு ஊருக்குள் அனுமதித்தார்கள். ஆனாலும் மக்களை சந்திக்க அனுமதிக்கவில்லை. கோயில் திடலிலும், குளக்கரையிலும் நாலைந்து பெண்கள், பெரியவர்கள் மட்டும் அமர்ந்திருக்க ஆங்காங்கு போலீஸ்காரர்கள் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பிறகு அங்குள்ள மக்களிடம் பேச அனுமதித்தாலும் தனிப்பிரிவு போலிஸ்காரர் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. பின்பு அவர்களை அழைத்து வருவதாக சொல்லி சென்ற போலீஸ்காரர், எல்லோரும் வயல் வேலக்கு சென்றுவிட்டதாக வந்து சொன்னார்.

சிவகங்கை நீதிமன்றம்

பிறகு நம்மைத் தேடி வந்து பேசிய மலைச்சாமி என்பவரின் மனைவி பிச்சையம்மாள், ”தீர்ப்பு என்ன வந்து, என்ன செய்ய? போன உசுரு திரும்ப வரப்போகுதா…? அப்ப நடந்ததை நெனைச்சா குலை நடுங்குது, நாங்க யாருக்கும் அந்த பாவமும் பண்ணல. இப்படி பண்ணிட்டு போயிட்டாங்க. என் வீட்டுக்காரருக்கு உடம்பு முழுக்க அரிவா வெட்டு. கையில ஒரு விரல் போயியிடுச்சு. காயம் ஆறின பெறகும், முன்ன மாதிரி எந்த வேலையும் செய்யமுடியல. இப்பத்தான் பக்கத்து ஊருக்கு வாட்சுமேன் வேலைக்கு போயிட்டிருக்காரு. மறுபடியும் இது மாதிரி நடக்கக்கூடாதுன்னு சாமிய வேண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசாங்கம் முழுசா இன்னும் நிவாரணப் பணம் கொடுக்கல. இப்பவும் போலீஸ் காவலில்தான் நாங்க வாழ்ந்துக்கிட்டிருக்கோம்” என்றார்.

காயமடைந்த 5 பேர்களில் தனசேகரன் என்பவர் ஒன்றரை வருடம் கழித்து மரணமடைந்தார். அத்தாக்குதலில் பிழைத்த அவர் மகன் சுகுமாரனிடம் போனில் பேசினேன், ”இப்ப வெளியூர்ல இருக்கேன், பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது. இதைவிட அதிகமாக தண்டனை கிடைக்கும்னு எதிர்பார்த்தோம். நடந்த சம்பவத்துலருந்து இன்னும் மீள முடியல. தாக்குதலில் காயமடைஞ்சு மீண்டு வந்தேன். இப்பவும் எங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. எங்கள் மீது தாக்குதல் தொடுத்த ஊர்காரர்கள் குற்றஉணர்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள். அதை வீரமாக நினைத்துக்கொள்கிறார்கள். அதுதான் சார், இந்த வட்டாரத்தில் சாதி ஆதிக்கம், சமூக விரோத செயல்கள் நடக்க காரணமாக உள்ளது.

காவலர்கள்

நாங்கள் படித்துவிட்டு அரசு வேலைக்கும், தனியார் வேலைக்கும் செல்வதை பார்த்து இப்பகுதியில் அட்ராசிட்டி செய்து வருபவர்கள் எரிச்சல் அடைந்ததன் விளைவாகத்தான் அன்று வன்முறையில் ஈடுபட்டார்கள். பதிலுக்கு எங்களுக்கு வன்முறை எண்ணம் வரவில்லை. அடுத்து இப்பகுதியில் பணியாற்றும் காவல்துறையினரும் சாதி எண்ணத்தோடு உள்ளார்கள். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது எங்க ஊர்காரர்கள் மீது ஏதாவது வழக்கு போட்டு இவர்களும் வன்முறையாளர்கள், தப்பானவர்கள் எனக் காட்ட முயற்ச்சி செய்தார்கள். அது நடக்கவில்லை. தீர்ப்பு வந்த பின்பும் நிம்மதி இல்லாமல்தான் இருக்கிறோம். கச்சநத்தத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். எங்களுக்கு ஆதரவாக இருந்து வழக்கு நடத்த காரணமாக இருந்த வழக்கறிஞர் பகத்சிங் தலைமையிலான டீமை மறக்க முடியாது ” என்றார்.

கச்சநத்தம் மக்கள் இப்போது அமைதியில்லாமல் அச்சத்துடன்தான் உள்ளார்கள் என்பதை நேரில் காண முடிந்தது. ஊரைச்சுற்றி நான்கு பக்கங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊர் மக்கள் எங்கே சென்றாலும், அவர்களைத் தேடி யார் வந்தாலும் போலீசிடம் தகவல் சொல்ல வேண்டும். உள்ளூரிலேயே அகதியாக வாழ்ந்து கொண்டிருப்பது கொடுமையானது. அங்கிருந்த போலீஸ் அதிகாரி, ‘உண்மையிலேயே நாங்க இங்க இல்லேன்னா, இவங்களுக்கு பாதுகாப்பு இல்லை சார்” என்றார். அவர் சொல்வதும் ஓரளவு உண்மைதான். வழக்கு நடக்கும்போதே ஊர்காரர்களுக்கு மிரட்டல்கள் வந்துள்ளது.

வழக்கறிஞர் பகத்சிங்

பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சாட்சிகளுக்கும் பாதுகாப்பாக இருந்த வழக்கறிஞர் பகத்சிங் ”குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்திருந்தால் சாட்சிகளை மிரட்டியிருப்பார்கள். வழக்கு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டிருக்கும். சுப்ரீம் கோர்ட் வரை சென்று ஜாமீன் தள்ளுபடியானது. அதனால்தான் வழக்கு விரைவாக நடந்தது. பல இடையூறுகளை கடந்து வழக்கு நடந்தது” என்றார்.

கச்சந்தம் மக்கள் சுதந்திராமாக மூச்சு விட அரசு ஏற்பாடு செய்யவேண்டும். !

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.