பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், தனது பழைய நண்பரான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கைகோர்த்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

2020ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இருப்பினும் ஜேடியு – பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது முதல் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன. இச்சூழலில், “பாஜக நமது கட்சியை அவமதித்துவிட்டது. ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க முயற்சி செய்தது. எனவே பாஜக உடனான கூட்டணியை முறிக்கிறோம்” என்று கூறி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்.

image

இதையடுத்து  ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இடையே புதிய கூட்டணி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பீகார் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்பார்கள் என்று முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த மெகா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் பங்கு வகிக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு புதிய கூட்டணி அரசு பதவியேற்கிறது.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் விலகுவது இது முதல் முறையல்ல. 2013-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணி பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டபோது, நிதிஷ் குமார் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார். 2015-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சி, ராஷ்டிர ஜனதாதளம், காங்கிரஸ் கட்சியுடன் மகா கூட்டணி அமைத்து வெற்றி கண்டது. நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சர் ஆனார். ஆனால் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டால் அவரை பதவி விலக கூறி அவர் பதவி விலக மறுத்தபோது, நிதிஷ் குமார் (2017 ஜூலை 26) பதவி விலகினார். ஆனால் அடுத்து அவர் பா.ஜ.க.வுடன் மீண்டும் கரம் கோர்த்து முதலமைச்சர் ஆனார். தற்போது பா.ஜ.க.வுடன் மோதல் ஏற்பட்டு மீண்டும் அந்த கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் நேற்று வெளியேறி உள்ளது.

தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் எதிரும் புதிருமானவை. இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு தனது பழைய நண்பர்களிடம் (லாலு பிரசாத் யாதவ்) நிதிஷ் குமார் கைக்குலுக்கி இருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை நிறுவியவரும், பீகாரின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கைதான பிறகு கட்சியை, அவரின் மகன் தேஜஸ்வி யாதவ்தான் முன்னிருந்து நடத்துகிறார். இதனைத்தொடர்ந்து ‘லாலு இல்லாமல் பீகாரை இயக்க முடியாது’ எனக் கூறி ஆர்ஜேடி கட்சியினர் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

image

நிதிஷ் குமார் – லாலு பிரசாத் யாதவ் நட்பும் பிரிவும்

தனது இளமைக்காலத்தில் பீகார் மாநில மின்சார வாரியத்தில் பணியில் சேர்ந்த நிதிஷ் குமார், தீவிர அரசியல் ஆர்வம் காரணமாக அரசுப் பணியில் இருந்து விலகி, அரசியலில் ஈடுபட்டார். பீகாரை சேர்ந்த சோசலிசவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்ட நிதிஷ் குமார் அந்த இயக்கத்தில் பங்கு கொண்டு செயல்பட்டார். பின்னர் சத்யேந்திர நரேன் சின்ஹா தலைமையிலான ஜனதா கட்சியில் இணைந்தார்.

நிதிஷ் குமார் 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி அடைந்தார். 1985ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார்.  1990இல் நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஜனதா தளம் அமோக வெற்றி பெற்றது. அச்சமயத்தில் லாலு பிரசாத் யாதவை முதல்வர் ஆக்கும்படி குரல் கொடுத்தவர் நிதிஷ் குமார். இருப்ப்பினும் சில வருடங்களிலேயே இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு எழவே,  நிதிஷ் குமார் அக்கட்சியில் இருந்து விலகி ஜார்ஜ் பெர்னாண்டஸுஸ் உடன் இணைந்து சமதா கட்சியில் செயல்பட்டார்.

அதன்பின் லாலு பிரசாத் யாதவ் ஜனதா தளத்திலிருந்து வெளியேறி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை உருவாக்கினார். 2000 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷின் சம்தா கட்சியை தோற்கடித்தார். அச்சமயத்தில் நிதிஷ் பாஜகவின் ஆதரவாளராக இருந்து வந்தார். 2003ஆம் ஆண்டில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரானார் நிதிஷ் குமார். அதன் பின்னர் 2005 தேர்தலில் வெற்றி பெற்று பீகார் மாநில முதல்வர் ஆனார். அதைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டிலும் பீகார் முதல்வராகப் பதவியேற்றார். 2014 லோக்சபா தேர்தலில் அவரது கட்சி மோசமான தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது வரை தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் பதவி வகித்தார். 2015 அன்று நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சரானார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்று மீண்டும் முதல்வரானார் நிதிஷ் குமார்.

image

பீகார் மாநில அரசியல் வரலாற்றில் நீண்டகாலம் முதல்வராக இருந்தவரும் நிதிஷ் குமார்தான். ஆட்சிக்காலம் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில், பாட்னாவில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அம்மாநிலத்தின் முதல்வராக 8-வது முறையாக பதவியேற்க உள்ளார் நிதிஷ் குமார்.

‘அரசியலில் அடிக்கடி தன்னை மாற்றி கொள்பவர் நிதிஷ்குமார்’ என்று லாலு விமர்சிப்பதும், ‘லாலுவின் குடும்ப சொத்தாகவே ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி உள்ளது’ என நிதிஷ் குமார் பதிலடி கொடுப்பதும் என இவர்கள் இருவரும் மாறிமாறி விமர்சிப்பது வாடிக்கையாக இருந்தது. எனினும் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பெரும்பாலான திட்டங்களை இருவரும் இணைந்தே எதிர்த்திருக்கின்றனர். சமூக நீதிக்கான வளர்ச்சி என்ற முழக்கத்தை அந்த இரு தலைவர்களும் முன்வைத்து மக்களை சந்தித்தார்கள்.

இச்சூழலில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், தனது பழைய நண்பரான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கைகோர்த்துள்ளது தேசியளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. எனினும் இந்த கூட்டணி எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

இதையும் படிக்க: இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் பாதை – எங்கு தெரியுமா?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.