காலங்காலமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் விரும்பி வளர்க்கப்படும் இரு செல்லப் பிராணி என்றால் அது பூனைதான். செல்லப் பிராணிகளை வளர்க்க வேண்டும் என தோன்றியதும் லிஸ்ட்டில் முதலில் இருப்பதும் பூனைகள் தான். பூனைகளின் குறும்புத்தனத்தை வீடியாவாகவோ, அல்லது நேரிலோ ஒரு 5 நிமிடம் பார்த்தால் போதும், மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் ஓடிவிடும். முரட்டுத்தனமான மனிதர்களையும் குழந்தைகளாக்கிவிடும் வல்லமை படைத்தது தான் பூனை. பூனைக்கு அழகே அதனுடைய கண்களும் மீசையும் தான். அதை விடப் பூனை தன்னுடைய தலையை மேலும் கீழும் தூக்கிப் பார்க்கும் பார்வையை எத்தனைத் தடவை வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம். நம்முடைய வீட்டிலும் கண்டிப்பாக ஒரு குறும்புக்கார டாம் இருக்கும். பூனைகளின் குறும்புத்தனத்தை கொண்டாடுவதற்காகவே ஆகஸ்ட் 8-ம் தேதியைச் சர்வதேச பூனை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். குறும்புக்கார பூனைகளைப் பற்றிய ஆச்சரியமூட்டும் சில சுவாரஸ்ய தகவல்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க…

image

உலகம் முழுவதும் சுமார் 40 வகையான பூனை இனங்கள் உள்ளன. அவற்றில் 50 கோடிக்கும் அதிகமான பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மனிதர்கள் கூட உடல் சுத்தத்தின் மீது அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டான். ஆனால் பூனைகள் மிகவும் சுத்தமானவை. தனக்குக் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் தன் உடலின் மேற்பகுதியை நாக்கால் நக்கி நக்கி சுத்தம் செய்துக் கொள்ளும்.

image

23-25 செ.மீ. உயரமும், 46 செ.மீ உடல் நீளமும் வளரக்கூடிய பூனைகள், சுமார் 18 லிருந்து 20 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. சாதாரணமாக ஒரு நாயின் வால் 15 செ.மீ தான் வளரும். ஆனால் பூனைகளுக்கு 30 செ.மீ. வரை வால் இருக்கும். அதேபோல், மனிதனை விட 3 கி.மீ வேகம் அதிகமாக ஓடக்கூடியது பூனை. பூனைகள் ஒரு மணிநேரத்தில் சுமார் 48 கி.மீ வேகம் ஓடிவிடும். இரண்டே மாதத்தில் கர்ப்பமடைந்துவிடும் பூனைகள் முதல்முறை மட்டும் 2 லிருந்து 3 குட்டிகள் போடும், இரண்டாவது முறையிலிருந்து 4 முதல் 6 குட்டிகள் வரைப்போடும். தனது வாழ்நாளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குட்டிகளை போட்டுவிடுகின்றன பூனைகள். அதிக சுறுசுறுப்புடன் இருக்கும் பூனைகள் ஒரு நாளைக்கு 12 லிருந்து 18 மணி நேரம் தூங்குமாம். டாம் அண்ட் ஜெர்ரியில் வருவது போலவே அதனுடைய தலை எந்த இடத்தில் நுழையுமே அந்த இடத்தில் எல்லாம் அதனுடைய உடலும் நுழைந்து விடுவது போன்ற உடல் அமைப்பையும் கொண்டது பூனைகள்.

image

பூனைகளுக்கு அதிக இரவுப் பார்வை, கேட்கும் திறன் உண்டு. மனிதனுக்கு பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை. பூனைகள் தமது காதை 180°வரை அசைக்கக்கூடியதுடன், தனது இரண்டு காதுகளையும் தனித்தனியாகவும் அசைக்கக்கூடிய ஆற்றலினையும் கொண்டது. இரவில் சிறு சத்தம் கேட்டாலும், சட்டென்று இரையை வேட்டையாடிவிடும். பூனைகள் அமைதியாக அடி எடுத்து வைத்து வேட்டையாடும் திறன் கொண்டவை. முன்னங்கால்களை வைத்த அதே இடத்தில்தான் பின்னங்கால்களையும் வைக்குமாம். இதனால் சிறிது சத்தம் கூட இல்லாமல் வேட்டையாட முடியும். சத்தம் போடாமல் வேலையைக் கச்சிதமா முடிக்கும் திறமை பூனைகளுக்கே உள்ள ஒரு தனி சிறப்பு தான். மற்ற நேரத்தில் பூனைகள் 100-க்கும் அதிகமான சத்தம் எழுப்பும் என்பதும் ஆச்சர்யமிக்கது.

image

ஆரம்ப காலத்தில் எலிகளை உண்பதற்காகவே பூனைகள் வீடுகளில் வளர்க்கப்பட்டன. பிறகு பூனைகள் மனிதனுடன் அன்பாகப் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு பூனைகளை வீட்டில் ஒருவர் போன்று நேசித்து வளர்க்கத் தொடங்கினர். சாதாரணமாக, அதிகளவு உயரத்தில் இருந்து குதித்தால் அதிகளவு அடிபடும். குறைந்தளவு உயரத்தில் இருந்து குதித்தால் குறைவாக அடி படும். ஆனால் பூனைகளுக்கு இது நேர்மறை. பூனைகள் 32 மாடி உயரத்தில் இருந்து குதித்தாலும் அவற்றுக்கு அடிபடுவது மிக மிகக் குறைவே. பெரும்பாலும் பூனைகள் அதிக உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் போது பாரசூட் போல தன் உடலை வளைத்து கால்களைப்பரப்பி விரித்துக்கொள்ளும். இதனால் அதிக உயரத்தில் இருந்து குதித்தாலும் மிகக் குறைவாகவே காயங்கள் ஏற்படும். ஆனால் குறைந்த உயரத்தில் இருந்து குதிக்கும்போது தங்கள் கால்களை தயார் செய்வதற்குள் கீழே விழுந்து விடுவதால் அதிகளவில் அடிபட்டுவிடுகின்றன.

image

வீடுகளில் மட்டுமின்றி தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இணையத்திலும் பூனைகள் தங்களுக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்து விட்டன. பூனைகளுக்கு என்றே ஆயிரக்கணக்கான வலைத்தளங்கள், யூடியூப் சேனல்கள், ஃபேஸ்புக் பக்கங்கள், அனிமேஷன்கள் என்று இணையதளத்தில் எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு வகையில் பூனைகள் இருக்கின்றன. சோஷியல் மீடியாக்களில் உள்ள Pet-களில் அதிக பாப்புலராக இருப்பதே பூனைகள் தான். உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 14 லட்சம் பூனை புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. 3.5 லட்சம் பூனை உரிமையாளர்கள் பூனைகளுக்கென ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில் கணக்குகள் (Account) வைத்துள்ளனர். இதில் 15% பேருடைய பூனைகள் இணையதளத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன.

image

பூனைகளுக்காக இணையதளத்தைப் பயன்படுத்தும் 3-ல் இரண்டு பேர் பூனைகளுடன் செல்ஃபி எடுத்துப் பதிவிடுகின்றனர். யூடியூப்-ல் இதுவரை அதிகமாகப் பார்க்கப்பட்ட பூனை வீடியோ Nyan Cat வீடியோ தான். இதுவரை சுமார் 20 கோடி பேர் பார்த்துள்ளனர். பூமியில் மட்டும் பூனை தன்னுடைய குறும்புத்தனத்தை காட்டவில்லை. 1963ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி ஃபெலிசிட் (Felicette)என்ற பெண் பூனை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. விண்வெளிப் பயணம் முடிந்து உயிருடன் பூமிக்குத் திரும்பியதே இதன் சிறப்புக்கு முக்கிய காரணம்.

image

பூனைகளின் குறும்புத்தனத்தை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இவர்கள்தான். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளின்டன், ‘சாக்ஸ்’ என்ற பூனையை வளர்த்து வந்தார்.

Socks the Cat - Presidential Pet Museum

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் இரண்டு பூனைகளை வளர்த்து வந்தார். வெள்ளை மாளிகையில் நடைபெறும் விருந்தில் பூனைகளுக்கு உணவு ஊட்டுவார். இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தன் ஆராய்ச்சியில் சோர்வுறும்போதெல்லாம் அவரின் தனிமையைப் போக்கி ஆறுதல் அளித்தது பூனைகளின் நெருக்கம்தான் என்று கூறியுள்ளார்.

புவி ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டன், தாம் வளர்த்த இரண்டு பூனைகள் அதன் உருவ அமைப்புக்கு ஏற்ப வெளியே சுதந்திரமாய் சென்று வர வீட்டுக் கதவில் பெரியதும் சிறியதாய் இரண்டு துளைகளைச் செய்தார். புளேரென்ஸ் நைட்டிங்கேல் அறுபது பூனைகள் வரை வளர்த்ததாகவும் எங்குச் சென்றாலும் பூனைகளை விட்டுச் செல்வதில்லை என்றும் வரலாற்றுக் குறிப்பு உள்ளது.

வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுபட இரண்டு வழிகள், இசையும், பூனைகளும் என்று கூறியது நோபல் பரிசு பெற்ற தத்துவமேதை ஆல்பர்ட் சுவெய்ட்ஷர். இதுமட்டுமின்றி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூட பீஸ்ட் (Beast)என்ற பூனையை வளர்த்து வருகிறார். இன்னும் எத்தனையோ புகழ்பெற்றவர்களின் இதயங்களை எல்லாம் சிறைபிடித்துள்ளது இந்த பூனைகள்.

image

என்னதான் குறும்புத்தனம் செய்தாலும் தனக்கு நெருக்கமானவரை கண்டால் வாலை ஆட்டி, அவர்களை உரசி விளையாடி தன் அன்பினை தெரிவித்து விடுகின்றன பூனைகள். உங்களுக்கும் உங்கள் வீட்டில் உள்ள பூனைக்கும் இடையே நடைபெற்ற சின்ன சின்ன சுவாரஸ்யங்களை எங்களுடன் கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.