தற்போது இந்தியாவில் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கப்பட்டு உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதற்கு முன்பு உலக அளவில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பாக, பல்வேறு நாடுகள் வெளியிட்டுள்ள தபால் தலைகளை சேகரித்து வைத்துள்ளார் சென்னையை சேர்ந்த நாணயவியல் அமைப்பின் தலைவர் மணிகண்டன்.

image

சென்னையில் நாணயவியல் அமைப்பின் தலைவராக இருப்பவர் மணிகண்டன். தனது இளம் வயதில் இருந்தே நாணயங்கள் மற்றும் தபால் தலைகள் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான இவர் உலக செஸ் விளையாட்டு குறித்து அனைத்து தகவல்களையும் தன்வசம் வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நாடுகளின் தபால் தலைகள் மற்றும் பழமையான நாணயங்களை சேகரித்து வருவதாகவும் அவையனைத்தும் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு மிகுந்த பயனுள்ளதாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.

image

மேலும் பேசிய அவர், உலகத்தின் நவநாகரீக தொட்டில் என அழைக்கப்படும் லண்டனில் தான் 1927ஆம் ஆண்டு முதன் முதலாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் விளையாடப்பட தொடங்கியது. உடல் வலிமை சார்ந்த விளையாட்டுகள் எல்லாம் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மூளை சார்ந்து சிந்திக்ககூடிய விளையாட்டான செஸ் விளையாட்டு என்பது இன்னும் தனி விளையாட்டாகவே தான் விளையாடப்பட்டு வருகிறது. இந்த செஸ் விளையாட்டின் பிறப்பிடம் இந்தியா என்பது தெரிந்த விவரம் தான். ஆனால் தாய் தமிழ்நாட்டில்தான் செஸ் விளையாட்டு முதலில் விளையாடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

image

தொடர்ந்து பேசியவர் தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களில் சதுரங்க வடிவிலான கட்டங்கள் மற்றும் காய் வடிவிலான கல்வெட்டுகளை நம்மால் பார்க்க முடிகிறது. கீழடி, அகரம் போன்ற அகழாய்வு தளங்களில் கூட சதுரங்க காய்கள் கிடைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்கள் சதுரங்க போட்டியில் வல்லமை மிகுந்தவர்களாக, நுட்பமான உத்திகளை கையாண்டவர்களாக சதுரங்க விளையாட்டை விளையாடி உள்ளனர் என்பது ஆதாரங்கள் மூலமாகவும் நம்மால் அறிய முடிகிறது என்று கூறுகிறார்.

image

சதுரங்க விளையாட்டு 95 வருடங்களாக விளையாடப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சர்வதேச நாடுகளில் 150 லிருந்து 200 நாடுகள் வரை தபால் தலைகள் வெளியிட்டு உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் குறித்து தபால் தலைகள், அஞ்சல் உறைகள், ஃபர்ஸ்ட்டேகவர், ஸ்பெஷல் கவர், மினியேச்சர் தபால் தலைகள் என பலவற்றை வெளியிட்டும் சதுரங்க விளையாட்டை சிறப்பித்துள்ளனர். இதில் 60க்கும் மேற்பட்ட நாடுகள் வெளியிட்டுள்ள தபால் தலைகள் மற்றும் மினியேச்சர்களை சேகரித்து வைத்துள்ளேன். மேலும் 29 வது செஸ் ஒலிம்பியாட்டில் வெளியிடப்பட்ட தபால் தலைகள், கம்போடியாவில் வெளியிடப்பட்ட மினியேச்சர்கள் அனைத்தும் இன்றைய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

image

இதற்கு முன்பு நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த தபால் தலைகளை இப்போதைய சூழலில் பார்ப்பதற்கு அபூர்வமாகவும், சேகரிப்பின் நன்மையை உணர்த்தும் வகையிலும் உள்ளது. இவருடைய இந்த சேகரிப்பு முயற்சிகள் கண்டிப்பாக மாணவ மாணவிகள் மத்தியில் தபால் தலைகள் மற்றும் நாணயங்கள் சேகரிப்பு குறித்து ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.