அனைத்தும் சரியாக இருந்தாலும் சிறிய மன உளைச்சலுக்கே உயிரை விடுவதும்.. என்ன வாழ்க்கை இதுவென.. என தன்னைத் தானே நொந்து கொள்வதுமாய் இருக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய சகாப்தம் இந்தத் மாற்றுதிறனாளி கிராண்ட்மாஸ்டர் தாமஸ் லூதர். 1969ல் பிறந்த கிராண்ட்மாஸ்டர் தாமஸ் லூதர், ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர். பிறக்கும்போதே இரண்டு கைகளுமே அவருக்கு மிகச்சிறியவை. பிறக்கும்போதே குறைபாடுகளூடன் பிறந்த இவர் தனது நான்கு வயதிலேயே செஸ் விளையாட துவங்கிவிட்டார். 

image

தனது தந்தை மற்றும் அக்காவின் உதவியால் செஸ் விளையாட ஆரம்பித்த இவர், எந்த நவீன கருவிகளும் இல்லாத 1970 மற்றும் 80 காலகட்டங்களில் யார் உதவியுமின்றி செஸ் விளையாட்டு புத்தகங்களை மட்டுமே படித்து பல புதிய யுத்திகளை தானே கற்றுகொண்டு தன்னைத்தானே மெருகேற்றி இன்று கிராண்ட்மாஸ்டர் பட்டத்துடன் நம் முன்னே நிற்கிறார்.

1980,1981,1984 என தொடர்ச்சியாக மூன்று வருடங்களில் ஜெர்மனி நாட்டின் சாம்பியன்ஷிப் பட்டங்களை மூன்று முறை தன்னுடைய 14 வயதிற்குள்ளேயே பெற்றுவிட்டார். மேலும் தொடர்ந்து விளையாட உடல் ஒத்துழைப்பு தராத சூழ்நிலையிலும் விடாமுயற்சியுடன் போராடிய அவர் தனது 24 வயதிலேயே செஸ் உலகின் மிகப்பெரிய பட்டமான கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை 1994ல் வென்று தனதாக்கிக்கொண்டு சாதனை படைத்தார். மேலும் உலகத்தில் முதன்முறையாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற முதல் மாற்றுதிறனாளி என்று உலக வரலாற்றிலும் தனது முத்திரையை பதித்தார்.

தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட்டிலும் பங்குகொண்ட இவர் அதையும் மிச்சம் வைக்காமல் இரண்டு பதக்கங்களை தனது ஜெர்மனி நாட்டிற்காக வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இவரது திறமையை மதித்த ஜெர்மனி நாடு அனைத்து செஸ் தொடரிலும் தாமஸ் லூதரை முன்னிறுத்தியது. மேலும் மேலும் பல தொடர்களில் பங்குபெற்று பல பட்டங்களையும் பதக்கங்களையும் வென்ற இவர் தனது உடல் ஒத்திழைப்பின்மையின் காரணத்தினால் தனது விளையாட்டை நிறுத்தி கொண்டார்.

image

தனது திறமையை அப்படியே முடக்கிப்போட விரும்பாத கிராண்ட்மாஸ்டர் தாமஸ் லூதர் தனது திறமைகளும் விளையாட்டு யுத்திகளும் இளைஞர்களுக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று பயிற்சியாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.மேலும் நடைபெற்று வரும் சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரில் சிங்கப்பூர் அணிக்காக பயிற்சியாளராய் களம் கண்டிருக்கிறார். 

பல வலிகளையும் ஏற்ற இறக்கங்களையும் தாண்டி சாதனை புரிந்த கிராண்ட்மாஸ்டர் தாமஸ் லூதர் தன்னை போன்ற மற்ற மாற்றுத் திறனாளிகளும் செஸ் விளையாட வேண்டுமென்றும், நவீனத்துவம் வளர்ந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் அனைத்தையும் சாதித்து வெற்றி பெறலாம் என்று ஊக்கப்படுத்தி வருகிறார். மேலும் செஸ் விளையாட விரும்பும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் இலவசமாய் பயிற்சியளித்து வருகிறார்.  

இப்படி வீரர்,பயிற்சியாளர் என பல அவதாரங்களை எடுத்துள்ள தாமஸ் மார்டின் லூதர் சர்வதேச செஸ் கூட்டமைப்பில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் தலைவராகவும் இருந்துகொண்டு செஸ் விளையாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்ன என்ன மாற்றங்களை எல்லாம் செய்ய முடியும் என்பதையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு அதற்காக உழைத்து வருகிறார்.

-சந்தான குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.